விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட சின்னபாபுசமுத்திரத்தில் உள்ள ஸ்ரீ மகான் படே சாயுபு ஜீவ சமாதி சித்தர் பீடத்திற்கு, அனைத்து மதங்களை சார்ந்த பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருகை புரிந்து, சித்தரை வழிபட்டு செல்கின்றனர்.
படே சாயுபு சித்தரின் புகழ்பெற்ற ஜீவசமாதி ஆலயம் விழுப்புரம் - பாண்டிச்சேரி சாலையில் (கண்டமங்கலம் வழி) சின்னபாபு சமுத்திரத்தில் அமைந்துள்ளது. பேருந்தில் செல்பவர்கள் கண்டமங்கலத்தில் இறங்கி அங்கிருந்து மூன்று கி.மீ. தூரத்தில் உள்ள சின்னபாபு சமுத்திரத்தைப் பேருந்து அல்லது ஆட்டோவில் சென்று ஸ்ரீ மகான் படே சாயுபு ஆலயத்தை அடையலாம்.
ஸ்ரீ மகான் படே சாயுபு ஒரு இஸ்லாமிய சமூகத்தில் பிறந்தவர். இவர் ஒரு சிவன் பக்தர் ஆவார். இவர் வடக்கு திசையில் இருந்து வந்தவர் எனவும், பின்பு தமிழகத்தில் படிப்படியாக ஒவ்வொரு திசையும் சென்று இறுதியாக விழுப்புரம் மாவட்டத்தை வந்தடைந்தார்.

படேசாகிப் சித்தர் பீடத்தின் நுழைவு வாயில்
சித்தர் பார்ப்பதற்கு நடுத்தர உயரம், சிவந்த நிறம், தலையில் ஒரு குல்லா இடுப்பில் அரையாடை, முகத்தில் பொங்கும் அருள், விழிகளில் கருணை, வாயில் எந்நேரமும் மந்திர ஜபம் செய்து கொண்டு இருப்பார்.யாரிடமும் எதுவும் பேசமாட்டார், சைகை மொழியிலும், விழியாலும் ,இவரை நாடி வருபவர்களுக்கு நோய்களைத் தீர்த்தும், விபூதி கொடுத்தும் பல நோய்களைக் குணமாக்கினார்.
‘சாஹிப்' என்றால் உயர்ந்தவர் என்பது பொருள். 'படே' என்றால் பெரிய. அதற்கேற்ப மிகப்பெரிய சித்த புருஷராக விளங்கினார் சிவஸ்ரீ படேசாஹிப். தன் பெயருக்கேற்றவாறு அன்பிலும் அருளிலும் பெரியவராகவும், உயர்ந்த நிலையில் வாழும் உத்தமராகவும் இருந்தார். அதனால் அன்பர்கள் அவரைப் 'பெரியய்யா', 'சாயபு', 'படே சாயபு' என்று அழைத்தனர்.

படேசாகிப் சித்தர்
அதீத கடவுள் நம்பிக்கையினால் அனைத்து மத அடையாளங்களையும் துறந்து அனைத்து சமூக மக்களுக்கும் பொதுவானவர்கள் என்று நம்பிக்கை விதைத்தார் . இதன் காரணமாகவே இவரது ஜீவ சமாதி சித்தர் பீடம் அமைந்திருக்கும் இடத்திற்கு இந்து, முஸ்லிம், கிருஸ்துவர்கள் உட்பட அனைத்து மதத்தினரும் எந்த வேறுபாடுகள் இன்றி ஒரே மாதிரியாக வழிபடுகின்றனர்.

படேசாகிப் சித்தர் பீடத்தில் அனைத்து மதத்தினரும் வழிபடுகின்றனர்..
இந்த ஜீவசமாதியைச் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறன்று தரிசித்து நீர்மோர், பானகம், அன்னதானம் விநியோகம் செய்து ஏராளமானோர் பலன் பெற்றிருக்கின்றனர். செவ்வாய், வியாழக்கிழமை தோறும் இந்து, இஸ்லாமிய மக்கள் இங்கே திரளாக வந்து வழிபடுகின்றனர். மனநோய், செய்வினை, ஏவல் கோளாறுகள் போன்றவை நீங்கும் தலம் என்று ஆலய அறிவிப்பு தெரிவிக்கின்றது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இங்கு சைவ முறைப்படி திருநீறு கொடுத்தும், வைணவ முறைப்படி துளசி தீர்த்தம் அளித்தும், இஸ்லாமிய முறைப்படி மயிலிறகு கொண்டு ஓதி, சந்தனம் அளித்தும் என சர்வ சமய வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்த ஆலயத்தை அப்பிரதட்சணமாகச்
( anticlockwise ) சுற்றி வரவேண்டும்.

படேசாகிப் சித்தர்
அது போன்றே இங்குள்ள மகிழ மரத்தையும் அப்பிரதட்சிணமாகச் சுற்றி வரவேண்டும். திருமணம், குழந்தை வரம் வேண்டி சுற்றுபவர்கள் 21 சுற்றும், மற்ற பிரச்னைகளுக்கு பக்தர்கள் 11 சுற்று சுற்றி வழிபட வேண்டும். தீபம், அகர்பத்தி ஏற்றி வழிபடுதல் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
இக்கோயிலுக்கு வருபவர்களுக்கு மனநிம்மதி உடல் நிம்மதி கிடைத்து வாழ்வில் நிம்மதியாக இருக்கிறார்கள் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அனுமதி பெற்றுச் சித்தரின் ஜீவசமாதி ஆலயத்தில் இரவில் தங்கிக்கொள்ளலாம் என பக்தர்கள் மற்றும் கோயில் பூசாரி தெரிவிக்கின்றனர்.

படேசாகிப் சித்தர்
ஆண்டுதோறும் மாசி மாத ஆயில்ய நட்சத்திரத்தில் சித்தர் சிவஸ்ரீ படேசாஹிப்பின் குருபூஜை விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆலயம் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

படேசாகிப் சித்தர் பீடத்தில் வழிபாடு நடத்தும் பக்தர்கள்..
எம்மதமும் சம்மதம் என பக்தர்கள் ஒற்றுமையுடன் இந்த சித்தர் கோவிலுக்கு வருகை புரிந்து சாமியை வழிபட்டு மனத்திருப்தியுடன் செல்கின்றனர். மேலும் இக்கோயில் தினசரி காலை 6 30 முதல் இரவு 8 30 மணி வரை திறந்திருக்கும். செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். வியாழன் ஞாயிறு கிழமைகளில் காலை 6 மணி முதல் இரவு 8 30 மணி திறந்திருக்கும்.
விழுப்புரம் பேருந்து நிலையத்தில் இருந்து படே சாகிப் சித்தர் பீடத்துக்கு செல்லும் பாதையை காட்டும் கூகுள் வரைபடம்..

Bade Saayubu Sidhar Peedam
இக்கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்ய விரும்புபவர்கள் கோயிலின் பூசாரியான சதீஷ்-ஐ 9159914714 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களை கேட்டுப்பெறலாம்..
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.