தமிழகத்தில் விபத்து அதிகம் நடைபெறும் மாவட்டமாக விழுப்புரம் திகழ்கிறது. சாலை விபத்துகளை தடுக்க மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாதா நம்மிடம் பேசுகையில் காவல்துறையினரின் செயல்பாடுகள் குறித்து விவரித்தார்.
அதன்படி, விழுப்புரம் முத்தாம்பாளையம் புறவழிச்சாலை கூட்ரோடு, திருவாமாத்தூர் சாலை கூட்ரோடு, எல்லீஸ்சத்திரம் சாலை கூட்ரோடு, ஜானகிபுரம் கூட்ரோடு, அரசூர் கூட்ரோடு, வழுதரெட்டி, பானாம்பட்டு சாலை கூட்ரோடு, ராகவன்பேட்டை, கோலியனூர் கூட்ரோடு ஆகிய பகுதிகளில் பேரிகார்டுகள் மற்றும் விபத்து தடுப்பு கூம்புகளை காவல் துறையினர் வைத்துள்ளனர்.
இந்த தடுப்புகள் வைப்பதனால், வாகனங்களின் வேகம் குறைக்கப்படுவதுடன், பின்னால் வரும் வாகனங்கள் முந்தி செல்வது தடுக்கப்படுகிறது. இதனால், வாகன விபத்து குறைந்து உயிரிழப்புகள் தடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
நெடுஞ்சாலைத்துறையினர் பாலம் கட்டும் பணிகளை காலதாமதமாக மேற்கொள்வதால்,போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகின்றது. இது விபத்தை குறைக்கும் காவல் துறையினரின் முயற்சிக்கு சவாலாக அமைகிறது. இதேபோன்று, விழுப்புரம் ரயில் நிலைய நுழைவு வாயிலில் மின் விளக்கு வசதியில்லாததால் இரவில் விபத்தை தடுப்பதில் சிரமம் ஏற்படுகின்றது.

காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா
சாலை விபத்து தடுப்பதற்கான முயற்சியில் காவல்துறையினர் பங்கு என்னவென்றும் , சாலை தடுப்புகள் குறித்தும், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா மேலும் கூறியதாவது..
விழுப்புரம் மாவட்டம் மாநில அளவில் அதிகமாக சாலை விபத்துக்கள் நடக்கும் மாவட்டமாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் அதிகமாக இம்மாவட்டத்தில் உள்ளது அதற்கான முக்கிய காரணமாகும். சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்லும் அதிகளவிலான வாகனங்கள் விழுப்புரம் மாவட்டத்தை கடந்து தான் செல்ல வேண்டும். அதனால் தான் விழுப்புரம் மாவட்டத்தில் அதிகமாக விபத்து நடக்கிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
சாலை விபத்து மரணங்கள்:
கடந்த 2019ம் ஆண்டு 589 பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர். கடந்த 2020ம் ஆண்டு 540 பேரும், 2021ல் 520 பேரும் இறந்துள்ளனர். கடந்தாண்டு 20 இறப்புகளைகுறைத்துள்ளோம். இந்தாண்டு அதே முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம். விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் அதிக விபத்துகள் ஏற்படுகிறது.

விழுப்புரம்
ஓங்கூரில் இருந்து அரசூர் வரையில் தேசிய நெடுஞ்சாலையில் சில இடங்களில் அதிக விபத்துக்கள் நடக்கிறது. இதில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கூட்ரோடு, அரசூர் கூட்ரோடு, கூட்டேரிப்பட்டு கூட்ரோடு, திண்டிவனம் கூட்ரோடு பகுதிகளில் அதிகளவில் விபத்து நடக்கிறது. இங்கு அதிகளவில் சாலையை கிராஸ் செய்து தான் பொதுமக்கள் செல்கின்றனர்.
அப்போது,தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் வேகமாக செல்லும்போது விபத்தில் சிக்கி இறக்கின்றனர். இதை கட்டுப்படுத்த மாவட்ட காவல் துறை சார்பில் கூட்ரோடு பகுதியில் பேரிகார்டு வைத்து, வேகத்தை கட்டுப்படுத்துகிறோம்.

விழுப்புரம்
அதேபோல், இரவு நேரத்தில் பேரிகார்டு தெரியும் வகையில் ஒளிரும் ரிப்ளக்டர் ஸ்டிக்டர் ஓட்டியுள்ளோம். இதனால், அந்த பகுதிகளில் விபத்து குறைந்துள்ளது. மற்ற இடங்களையும் கணக்கெடுத்து, விபத்து நடப்பதை குறைக்க முயற்சி செய்து வருகின்றோம்.
ஓட்டுனர்கள் தூக்க கலக்கம்:
இரவு 12 மணிக்குமேல் ஓட்டுனர்களின் தூக்க கலக்கத்தால் விபத்து நடக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. இதை கட்டுப்படுத்த விக்கிரவாண்டி டோல்கேட்டில் இரவு நேரத்தில் வரும் வாகனஓட்டுனர்களை, நிறுத்தி அறிவுரை வழங்கி, டீ குடிக்க வைத்து அனுப்பி வைக்கிறோம்.
அத்துடன், தேசிய நெடுஞ்சாலையின் முக்கிய பகுதிகளில் சிசிடிவி வைத்துள்ளோம். இதன் மூலம் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிறுத்தாமல் செல்லும் வாகனத்தை கண்டுபிடித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சூரன்ஸ் கிடைக்க வாய்ப்பாக உள்ளது.

விழுப்புரம்
அதுபோல சில தினங்களுக்கு முன் விக்கிரவாண்டியில் வழக்கறிஞர் ஒருவரை கார் இடித்து இறந்துவிட்டார். இடித்தது எந்த கார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கார் மற்றும் நபர் குறித்து சிசிடிவி மூலம் கண்டறியப்பட்டது. இது போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்.
ஹெல்மெட் இல்லாமாலும் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்கிறோம். பொதுமக்கள் சாலை பாதுகாப்பில் விழிப்புணர்வாக இருக்க வேண்டும். விபத்தில் ஒரு குடும்பத்தில் முக்கிய நபர் இறந்தால், உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, குடும்பமே அந்த பாதிப்பை சுமந்து செல்ல வேண்டும். ஆகையினால் அனைவரும் சாலை பாதுகாப்பில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எஸ்பி ஸ்ரீ நாதா கூறினார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
காவல் துறை சார்பாக பொதுமக்களிடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால் , விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் ஹெல்மெட் அணிவது, வாகனங்களை முந்தி செல்லாமல் இருப்பது உள்ளிட்ட சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து காவல் துறைக்கு ஒத்துழைப்பை கொடுத்தால் நிச்சயமாக சாலை விபத்தை தடுக்க முடியும் என மாவட்ட காவல் துறை சார்பாக பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.