விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியத்திற்குட்பட்ட சித்தாத்தூர் கிராமத்தில் கிராம மக்களுக்காக கோவில் கட்டுவதற்கு சுரேஷ் என்பவர் தன்னுடைய நிலத்தை தானமாக கொடுத்துள்ளார். அந்த இடத்தில் கோவில் கட்ட தேவையான நிதியை கிராம மக்கள் முடிந்த அளவு திரட்டிய நிலையில், மீதமுள்ள தொகையை சுரேஷ் தந்து உதவியுள்ளார். இதனால் கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்தன.
இக்கோவிலில் கடந்த சில மாதங்களாக புதிய சிலைகள் அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளபட்டு வந்தன.
அதனை தொடர்ந்து கோயில் குட முழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தன. அதன்படி குட முழுக்கு விழா கடந்த 8ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது, அதனை தொடர்ந்து மங்கள பூஜை, கோ பூஜை, வாஸ்து சாந்தி, மஹா பூர்ணாஹதி உள்ளிட்டவை பூஜைகள் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக சாலை பூஜைகள் நடைப்பெற்று வந்தன.
விழாவின் முக்கிய நிகழ்வான இன்று குட முழுக்கு விழா நடைபெற்றது. பம்பை உடுக்கை, மேளதாளஙகள் முழங்க அர்ச்சகர்கள் யாக சாலையில் இருந்து கலசங்களை கொண்டு வந்து ஸ்ரீ அங்காளம்மன் கோயில் விமானம் மற்றும் மூலவர் சன்னதிகளில் புனித கலச நீர் ஊற்றப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
பின்பு பக்தர்கள் மீது கலச நீரானது தெளிக்கப்பட்டது. இவ்விழவில் சித்தாத்தூர், வி. அரியலூர், கண்டமானடி, தளவானூர் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து கலசநீரை பெற்று சென்றனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.