ஹோம் /விழுப்புரம் /

"பட்டுப்புழு வளர்ப்பில் அதிக மானியத்துடன் அதிக லாபமும் உண்டு” - விழுப்புரம் விவசாயி சொன்ன ரகசியம்?

"பட்டுப்புழு வளர்ப்பில் அதிக மானியத்துடன் அதிக லாபமும் உண்டு” - விழுப்புரம் விவசாயி சொன்ன ரகசியம்?

பட்டுப்புழு

பட்டுப்புழு வளர்ப்பு

Viluppuram District News : விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே காந்தி நகரில்  சின்னசாமி(60) விவசாயி பட்டு வளர்ப்பை கையில் எடுத்து உள்ளார் . இவர் ஐந்து வருடமாக இதில் ஈடுபட்டுள்ளார். 

  • Local18
  • 3 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விவசாயத்தில் குறுகிய காலத்தில் நிறைவான லாபத்தை தரக்கூடிய தொழிலில் ஒன்று தான் மல்பெரி மற்றும் அதைத்தொடர்ந்த பட்டுப்புழு வளர்ப்பு. எந்த தொழிலுக்கும் இல்லாத வகையில் பட்டுப்புழு வளர்ப்புக்கு அரசு, பல்வேறு மானியங்களை தருகிறது. இதனால் மல்பெரிச் சாகுபடி மற்றும் பட்டுப்புழு வளர்ப்பில் பெரும்பாலான விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் விழுப்புரத்தில் பல்வேறு பகுதிகளில் பட்டுப்புழு வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விழுப்புரம் காணை முகையூர் மேல்மலையனூர் வல்லம் செஞ்சி கோலியனூர் போன்ற ஒன்றியங்களின் கீழ் பல்வேறு விவசாயிகள் பட்டு புழு வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

செஞ்சி அருகே காந்தி நகரில் சின்னசாமி(60) விவசாயி பட்டு வளர்ப்பை கையில் எடுத்து உள்ளார் . இவர் ஐந்து வருடமாக இதில் ஈடுபட்டுள்ளார். பட்டுப்புழு வளர்ப்பு குறித்து சின்னசாமி யிடம் பேசிய போது பல சுவாரசியமான விஷயங்களை நம்மிடம் பகிர ஆரம்பித்தார்.

பட்டுப்புழு வளர்ப்பை பொறுத்தவரை, தட்பவெப்ப நிலை மிக அவசியம். 20 டிகிரி செல்சியஸுக்கு கீழேயும் வெப்பம் இறங்கிவிடக் கூடாது. 25 டிகிரிக்கு மேலேயும் அதிகரிக்கக்கூடாது. காற்றோட்டம் அவசியம். ஷெட் மேலே ஓடு போட்டிருக்க வேண்டும்

புழுவைத் தாக்கும் ஈக்களைக் கட்டுப்படுத்தவும், வெயில் இறங்காமல் இருக்கவும் மேலே வலை கட்டவேண்டும்.

இதையும் படிங்க : விழுப்புரம் இளைஞர்களுக்கு வாய்ப்பு... ரூ.15,000 சம்பளம் 108 ஆம்புலன்சில் வேலை

இளம்புழு வளர்ப்பாளர்களிடமிருந்து, முட்டை பொரித்து 7 நாள் வளர்ந்த புழுக்களை டெலிவரி செய்து விடுவார்கள்.முட்டை வாங்கி புழு வளர்த்தால், 45 நாளைக்கு அப்புறம்தான் பலன் கிடைக்கும். இளம்புழு வாங்கும் போது ஒரு மாதத்தில் பலன் கிடைக்கும்.

ஒரு ஏக்கர் நிலத்துக்கு 10 டிராக்டர் தொழுவுரம், 5 டன் கோழி எரு ஆகியவற்றைக் கொட்டி இறைத்து, நன்றாக உழவு செய்ய வேண்டும். 3 அடி இடைவெளியில் பார் அமைத்து, அதில் 5 அடி இடைவெளியில் மல்பெரிச் செடிகளை நடவு செய்ய வேண்டும்.

பட்டு வளர்ச்சித்துறை மூலமாக மானிய விலையில் நாற்றுகள் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு அதிகபட்சம் 5 ஆயிரத்து 500 செடிகளை நடவு செய்ய முடியும். நடவு செய்த பிறகு சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து, வாரம் ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். சொட்டுநீர் அமைக்கவும் மானியம் உண்டு.

களை மற்றும் பயிர் பராமரிப்பு முறைகளை சரியாக மேற்கொண்டு வந்தால், நடவு செய்த 90-ம் நாளில், செடிகள் வளர்ந்துவிடும்.

இந்தச் செடிகளில் 20 -25 ஆண்டுகள் வரை தொடர்ந்து மகசூல் எடுக்கலாம். 25 நாட்களுக்கு ஒரு முறை இலைகளைப் பறிக்கலாம். நிலத்தைப் பாதியாகப் பிரித்துக் கொண்டு சுழற்சி முறையில் முறையில் அறுவடை செய்தால், தொடர்ந்து ஆண்டு முழுவதும் இலைகள் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

இதையும் படிங்க : சபரிமலையை போல விழுப்புரத்தில் இருக்கும் பம்பை ஆறு... இதற்கு இவ்வளவு சிறப்புகளா..!

பட்டுப்புழுக்களுக்கு முக்கியத் தீவனம் மல்பெரி இலைகள்தான் என்பதால், இவை தரமாக இருந்தால்தான் புழுக்களும் ஊக்கமுடன் வளர்ந்து, அதிக எடையுள்ள கூடுகளை உற்பத்தி செய்யும். 100 முட்டைத் தொகுதிகளில் உருவாகும் புழுக்களுக்கு, மொத்தம் 700 கிலோ அளவுக்கு இலை தேவை. இதற்கு, ஒரு ஏக்கர் நிலத்தில் மல்பெரி வளர்க்க வேண்டும். 150 முட்டைத் தொகுதிகள் மூலம் மாதம் 150 கிலோ பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்ய முடியும்.

8 நாட்கள் வயதுடைய புழுக்களை அதற்கென்றே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் புழு வளர்ப்பு தாங்கிகளில்விட வேண்டும். கட்டில் போல இருக்கும் இந்தத் தாங்கிகளில் 'நெட்ரிக்கா’ எனும் பிளாஸ்டிக் விரிப்பை விரிக்க வேண்டும்.

இந்த விரிப்பில் நூற்றுக்கணக்கான அறைகள் இருக்கும். அவற்றின் மூலமாகத்தான், பட்டுபுழுக்கள் தன்னைச் சுற்றி கூடுகளைக் கட்டும். வளரும் புழுக்களுக்கு தினமும் காலையிலும், மாலையிலும் ஒரு மாத வயதுக்கு மேல் உள்ள செடிகளில் இருந்து முற்றிய இலைகளைக் காம்புடன் பறித்து உணவாக வைக்க வேண்டும். புழுக்கள், இலைகளை மட்டும் சாப்பிட்டு விட்டு, காம்புகளை ஒதுக்கி விடும். பிறகு, காம்புகளை அப்புறப்படுத்த வேண்டும். புழுக்கள் 27 நாட்கள் வயதில், கூடுகளை உருவாக்கிக் கொள்ளும்.

அதேபோல் தமிழ்நாடு பட்டு வளர்ச்சி பயிற்சி நிலையம் பட்டுப்புழு வளர்ப்புக்கான பயிற்சியை ஐந்து நாட்கள் இலவசமாக விவசாயிகளுக்கு அளிக்கிறது. பட்டு வளர்ச்சித் துறை மற்றும் மத்திய, மாநில அரசுகள் மூலம், ஒரு ஏக்கர் நடவுக்கு ரூபாய் 10,500 மானியமாக வழங்கப்படுகிறது. ஆயிரம் சதுர அடியில் பட்டுப்புழுக்களை வளர்த்தால் ஒரு லட்சத்து 20 ஆயிரம் (1,20,000) ரூபாயை விவசாயிகளுக்கு மானியமாக வழங்குகிறது பட்டு வளர்ச்சி துறை.

மேலும் பட்டுப்புழு வளர்ப்புக்கு தேவையான உபகரங்களான பவர் டில்லர் பவர் ஸ்பிரேயர் எலக்ட்ரிக்கல் ஸ்பிரேயர், நெட்ரிக்கா போன்ற அனைத்து ஊபகனங்களும் பட்டுத்துறை வளர்ச்சி நிலையம் மூலம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

''100 கிலோ பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்யறதுக்கு இரண்டு வேலை ஆட்களே போதும். நான் வயலையும் பைபிள் தோற்றுதே பார்த்து வருமானம் ஈட்டி வருகிறேன். இங்கு அறுவடை செய்யப்படும் பட்டுக்கூடுகளை தர்மபுரிக்கு சென்று விற்பனை செய்து வருகிறோம்.

தற்போது, ஒரு கிலோ பட்டுக்கூடு 700 முதல் 800 ரூபாய்க்கு குறையாம ஏலம் போயிட்டுருக்கறதால நல்ல வருமானம் கிடைக்கிறது. மற்ற பயிர்களை விவசாயம் செய்வதைவிட பட்டுப் புழு வளர்ப்பு நல்ல லாபத்தை தரும், ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் 3 லட்சம் வரை லாபம் பார்க்க முடியும் என மகிழ்ச்சியாக தெரிவித்தார் சின்னசாமி.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் பட்டுப்புழு வளர்ப்பு செய்ய விரும்பும் நபர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பட்டு வளர்ச்சித் துறை நாடினால் பல ஆலோசனைகள் மற்றும் திட்டம் குறித்து விவரத்தை வழங்கி வருகிறார்கள் இதை பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் உயருங்கள்” என்று கூறி அறிவுரை வழங்கினார்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Vizhupuram