தமிழ்நாட்டை உலுக்கிய விஷச்சாராயம் விவகாரம் தொடர்பாக மெத்தனால் சப்ளை செய்த முக்கிய குற்றவாளியான இளையநம்பியை நேற்றிரவு காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடலூர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இளையநம்பி, ஏற்கனவே செய்த தொழில் நஷ்டமானதால், சென்னை மதுரவாயல் பகுதியில் ஸ்ரீ விநாயகா எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் ரசாயன ஆலையை நடத்தி வந்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக பணத்திற்கு ஆசைப்பட்டு மெத்தனாலை கள்ளச்சாராய கும்பலுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். மெத்தனால் தயாரிப்புக்கான மூலப் பொருட்களை மணலி மற்றும் கும்மிடிப்பூண்டி கெமிக்கல் நிறுவனங்களில் வாங்கி வந்து தனது ஆலையில் உற்பத்தி செய்து வந்துள்ளார்.
கள்ளச்சாராய கும்பலுக்கு மெத்தனாலை விற்பனை செய்ததோடு, மூலக்கூறுகளுடன் எவ்வளவு சதவீதம் தண்ணீரை கலக்க வேண்டும் என்றும் இளையநம்பி தனியாக பாடம் எடுத்து வந்துள்ளார். தனது நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கும் மெத்தனாலிலிருந்து கள்ளச்சாராயம் தயாரிக்கும் முறைகளை சொல்லிக் கொடுத்துள்ளார்.
அதனடிப்படையில் இளையநம்பி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சதீஷ், மணிமாறன், பத்ரி, உத்தமன் ஆகிய 4 நபர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சாராயத்தில் கலக்க மெத்தனால் கொடுத்ததாக, புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடியை சேர்ந்த எழுமலையை தமிழ்நாடு காவல்துறையினர் கைதுசெய்தனர். பரசுராமபுரத்தில் அவரது தொழிற்சாலையில் இருந்து மெத்தனால், ஸ்பிரிட் போன்ற ரசாயனங்களையும் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், செங்கல்பட்டில் விஷச் சாராய மரணங்களில் தொடர்புடையவருக்கு வழங்கப்பட்ட காசோலையை ரத்து செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சித்தாமூர் பகுதியில் விஷச்சாராயத்தால் மரணமடைந்தவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய், விஷச் சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட அமாவாசை என்பவருக்கும் 50 ஆயிரம் ரூபாய் அரசு நிவாரணம் கொடுத்ததாக எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதைத்தொடர்ந்து சாராய வியாபாரி அமாவாசை பெயரிலான நிவாரண தொகைக்கான காசோலையை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Viluppuram S22p13