கோலியனூர் முதல் பண்ருட்டி வழியாக கும்பகோணம் செல்லும் நான்கு வழிச்சாலை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் குண்டும் குழியுமான சாலையில் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றன. சாலை பணியை விரைந்து முடிக்கவேண்டுமென வாகனஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விழுப்புரம் அருகே உள்ள கோலியனூர் கூட்ரோட்டிலிருந்து பண்ருட்டி நெய்வேலி வழியாக கும்பகோணம் செல்லும் இரு வழி சாலையை நான்கு வழி சாலையாக மாற்றி சாலை அமைக்கும் பணியானது கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. சாலை பணியானது கடந்த மூன்று வருடங்களாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது .
இந்நிலையில் ஆறு மாதங்களாக சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் இருசக்கரவாகனம், பேருந்துகள்,கார், லாரி போன்றவைகள் ஊர்ந்து செல்வதால் புழுதி ஏற்பட்டு வாகனங்களை இயக்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
கோலியனூர், பஞ்சமாதேவி, கல்லிபட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்டப்பட்ட மேம்பால பணிகள் பாதியிலேயே நிறுத்தபட்டுள்ளதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
நான்கு வழி சாலையில் ஒரு பக்க வழி பாதையாவது முழுமையாக தார்சாலை அமைத்திருந்தால்,வாகன ஓட்டிகள் சிரமமின்றி செல்ல ஏதுவாக இருந்திருக்கும், ஆனால் இரு பக்க சாலையும் முழுமையாக சாலைகள் அமைக்காததால் குண்டும் குழியுமாக கற்கள் பெயர்ந்து இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.
கோலியனூர் பகுதியிலிருந்து பண்ருட்டி செல்பவர்கள் இந்த சாலையில் செல்லும் போது அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால் ஆமை வேகத்தில் நடைபெறும் பணியை துரிதபடுத்தி விரைந்து பணியை முடிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தியாளர் : சு. பூஜா -செய்தியாளர்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.