Home /viluppuram /

5 ரூபாய் பரோட்டா கடை.. புதுச்சேரி டூர் போறீங்களா? குறைந்த விலையில் ஒரு புடி புடிக்கலாம்..

5 ரூபாய் பரோட்டா கடை.. புதுச்சேரி டூர் போறீங்களா? குறைந்த விலையில் ஒரு புடி புடிக்கலாம்..

கோட்டகுப்பம்,

கோட்டகுப்பம், விழுப்புரம்

5 Rs Parotta Shop at Villupuram : திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் சாலையில் அமைந்துள்ள கோட்டகுப்பம் பகுதியில் உள்ள கவி ஓட்டலில் 5 ரூபாய்க்கு பரோட்டா கிடைக்கிறது. விலை குறைவு என்றாலும் ருசி, தரத்துக்கு குறைவில்லை.. பாண்டிச்சேரி டூர் போறப்ப மறக்காம இங்க ஒரு புடி புடிங்க...

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநில எல்லையில் அமைந்துள்ள பகுதி தான் கோட்டகுப்பம் . திண்டிவனம் வழியாக புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் என அனைவரும் வந்து போகும் பிரதான பகுதியாக இது விளங்குகிறது.

இப்பகுதியில் அதிக அளவில் ஹோட்டல்கள் இருப்பதால், சைவம், அசைவம், பரோட்டா, பிரியாணி என வகை வகையான உணவுகள் சுட சுட கிடைக்கும் என்பதனால், பொதுமக்களின் கூட்டம் எப்போதும் இங்கு அலைமோதும்..

இப்பகுதியில் செயல்பட்டுவரும் ‘கவி ஹோட்டல்’ என்பது மிகவும் ஃபேமஸாக விளங்கி வருகிறது. கடந்த 80 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த ஓட்டலில் மிகவும் குறைவாக 5 ரூபாய்க்கு பரோட்டா விற்பனை செய்யப்படுவதால் மக்களின் மனதில் இந்த ஓட்டலுக்கு தனி இடம் உள்ளது. விலை குறைவு என்றாலும் ருசி மற்றும் தரத்தில் குறைவில்லாமல் இருப்பதே இதற்கு காரணமாகும். இப்பகுதியில் பரோட்டா கடைக்கு பேர் போனதாக இக்கடை பொதுமக்கள் மத்தியில் சிறப்பு வாய்ந்து விளங்குகிறது.

இந்த ஹோட்டலை கவி பக்கிரி மைதீன் என்பவர்  நடத்தி வந்தார். இதனடிப்படையில் நியூ கவி ஓட்டல் என இக்கடைக்கு பெயர் சூட்டப்பட்டது. பொதுமக்களிடம் கவி ஓட்டல் எங்கே என்று விசாரித்தால் சரியாக பதில் வருமா என்பது சந்தேகம் தான்,  அதுவே  ‘5 ரூபாய் புரோட்டா கடை’ என்று கூறினால் பளிச்சென  வழி காட்டுவார்கள் உள்ளூர் மக்கள்..

கோட்டகுப்பம், விழுப்புரம்


இக்கடையில் 10 பைசாவிற்கு விற்ற ஒரு பரோட்டா அதன்பின் 25 பைசா, 50 பைசா, 1 ரூபாய் என படிப்படியாக விலை உயர்ந்து தற்போது 5 ரூபாய்க்கு  விற்பனை ஆகிறது. இந்த கடையில் சிறுவயது முதலே வேலை செய்துவந்த மைதீனின் மகன் ஷரீப், தனது தந்தையின் மறைவிற்கு பின் தற்போது கடையை நடத்தி வருகிறார்.

இக்கடையில் ஏ.சி. கிடையாது, வசதியான சேர் டேபிள் கிடையாது. அந்த காலத்து பெஞ்சு, சேர், சாதாரண மர மேஜை மட்டுமே. காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை பரோட்டா கிடைக்கும். காலை முதல் இரவு வரை பரோட்டா கிடைக்கும். ஒருபுறம் பரோட்டா ரெடி ஆகிக்கொண்டே இருக்கும்போது, மறுபக்கம் சால்னா கொதித்துக் கொண்டே இருக்கும். வாடிக்கையாளர்களுக்கு சுடச்சுட பரோட்டா சப்ளை ஆகிக்கொண்டே இருக்கும் . ஒரு நாளைக்கு 150 கிலோ மாவை பிசைந்து 3,000 முதல் 5,000  பரோட்டா வரை தயார் செய்யப்படுகிறது.

இந்த கடையில் சால்னாவுக்கு பயன்படுத்தப்படும் மசாலா பொருட்கள் அனைத்தையும் சொந்தமாக தயாரிக்கிறார்கள். அஜினமோட்டோ உட்பட எந்தவொரு கெமிக்கல் கலந்த பொருட்களையும் பயன்படுத்துவது இல்லை . இக்கடையில் பணிபுரியும் தொழிலாளர்கள் 100 பரோட்டாவை 10 நிமிடத்தில் தயார் செய்கின்றனர். விலை குறைவு தான் ஆனால் தரத்தில் எந்த மாற்றமும் இல்லை .

கோட்டகுப்பம், விழுப்புரம்


மேலும் இந்த கடையை பற்றி ஷரீப் கூறியதாவது..

இப்பகுதிக்கு புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை புரிவார்கள். கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த நபர்களும் என் கடைக்கு வருகை புரிந்து காரசாரமான உணவு வகைகளை ருசித்து சாப்பிடுவார்கள்.

மேலும் வாடிக்கையாளர்கள் குறைந்த செலவில் மனத்திருப்தியுடன் வயிறு நிறைய சாப்பிட்டு செல்லலாமே என கடைக்கு தேடி வந்து சாப்பிடுவதாக கூறுவது மனதுக்கு நிறைவாக உள்ளது.

என் தந்தை சொன்ன வழியில் தான் செயல்பட்டு வருகிறேன். அதாவது லாபம் இல்லை என்றாலும் மன திருப்தி இருந்தால் போதும் என்ற வகையில் செயல்பட வேண்டும் என கூறுவார் அதன் அடிப்படையில் நான் இந்த உணவகத்தை நடத்தி வருகிறேன் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

கடையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கூறியதாவது..

கடையில் 10 பேர் பணிபுரிகிறோம் . பல ஆண்டுகளாக ஒரே சுவையை அளித்து வருவதால் எப்போதும் வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறையவில்லை . ஒரு பக்கம் பரோட்டா, ஒரு பக்கம்  சால்னா தயாரிப்பு என பரபரப்பாகவே கடை இயங்கிக் கொண்டிருக்கும். பல சிந்தனைகளில் வேலை செய்தாலும் சுவையில் மட்டும் எந்த மாற்றமும் இருக்காது. எனவே தான் இப்பகுதிக்கு வரும் நபர்கள் எங்கள் கடையை தேடி வந்து பரோட்டாவை வாங்கி சாப்பிட்டு செல்வார்கள் என அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

மேலும் இந்த நியூ கவி ஓட்டலில் கொத்து பரோட்டா,பொறிச்ச பரோட்டா, மட்டன் கொத்து பரோட்டா, சிக்கன் கொத்து பரோட்டா என பலவகையான உணவு ரகங்கள் கிடைக்கின்றன.

புதுச்சேரி பகுதிக்கு வருபவர்கள் நிச்சயமாக இந்த ஹோட்டலுக்கு ஒரு முறை விசிட் அடிக்கலாம்..

கவி ஓட்டலை  9994989526 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்..

Kottakuppam Kavi Hotel Map
நியூ கவி ஓட்டல், கோட்டகுப்பம், விழுப்புரம்


 
Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram

அடுத்த செய்தி