ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரத்தில் வெள்ள பாதிப்பு இடங்கள் எத்தனை? - முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்த உத்தரவு

விழுப்புரத்தில் வெள்ள பாதிப்பு இடங்கள் எத்தனை? - முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்த உத்தரவு

மாதிரி படம்

மாதிரி படம்

Viluppuram District | விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு பகுதிகளாக மொத்தம் 122 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

இந்த கூட்டத்திற்கு கலெக்டர் மோகன் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது, “வடகிழக்கு பருவமழை இம்மாதம் துவங்கி டிசம்பர் வரை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழை காலத்தில் பொதுமக்கள் தேவைக்காக 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

மழை பாதிப்பு தகவல் அளிக்க 4,500 முதல் தகவல் அளிப்பாளர்களும், வட்ட அளவில் 9 குழுக்கள், உள்வட்ட அளவில் 34 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுக்கள் அளிக்கும் தகவல்கள் மூலம் மீட்பு நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் 8 இடங்கள் அதிகம் பாதிக்கப்படும் இடங்களாகவும், 35 இடங்கள் மிதமான பாதிக்கக்கூடிய இடங்களாகவும், 79 இடங்கள் குறைவாக பாதிக்க கூடிய இடங்கள் என மொத்தம் 122 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : செம்மரம், சந்தனமரம் வளர்க்க விருப்பமா? இதோ அரசே மரக்கன்று தருதாம்..! விழுப்புரத்தில் அடித்த ஜாக்பாட்!

மழைநீர் உட்புகும் தாழ்வான பகுதி கிராமங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். வெள்ள பாதிப்பு ஏற்படும் காலங்களில், முதியோர், கர்ப்பிணிகள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகளை நிவாரண முகாம்களில் தங்க வைக்கத் தேவையான இடத்தினை தயார் செய்ய வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகள் பாதுகாப்பான முறையில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

சாக்குப் பை, மணல் மூட்டைகள் தேவையான அளவில் வைத்திருக்க வேண்டும். சமுதாய கூடங்கள், பள்ளிக் கூடங்களில் நிவாரண முகாம்களாக தயார் செய்ய வேண்டும். குடிநீரில் குளோரின் கலந்து வழங்க வேண்டும். டேங்க்குகளில் தண்ணீர் ஏற்ற மோட்டார்களை தயாராக வைத்திருக்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து பொதுமக்களை மீட்டு வர தேவையான வாகனங்கள் தயாராக வைத்திருக்க வேண்டும்.

அத்துடன், சாலையில் விழும் மரங்களை வெட்டி அகற்றவும், பழுதடைந்த அரசு கட்டடங்களைக் கண்டறிந்து அதில் மக்கள் தங்காதபடி பொதுப்பணித்துறை எச்சரிக்கை செய்ய வேண்டும். அணை, ஏரி, ஆற்றில் செல்லும் நீரின் அளவு கண்காணித்து, பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அனைத்து நீர் நிலை பகுதியிலும் எச்சரிக்கை பதாகை வைக்க வேண்டும்.

இதையும் படிங்க : ஆயுதபூஜைக்கான பொருட்களை வாங்க குவிந்த மக்கள்.. விழுப்புரம் நகர வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்.. 

வேளாண்துறையினர், மழை சேதங்களை சரியாக கணக்கிட்டு இழப்பீடு பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உரம், பூச்சி மருந்துகள் தேவையான அளவு இருப்பு வைக்க வேண்டும். மருத்துவத் துறையினர் காய்ச்சல், நோய் தொற்று பரவாமல் இருக்க மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். கூட்டுறவுத் துறையினர் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்க ஒரு மாதத்திற்கு தேவையான அளவு பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், மின்வாரியத்தினர் மின்தடை ஏற்படுவதை தடுக்க முன்னதாக மின் வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்ற வேண்டும். தீயணைப்புத் துறையினர் பொதுமக்களை மீட்கத் தேவையான படகுகள், லைப் ஜாக்கெட்டுகள் தயராக வைத்து கொள்ளவும். மழை காலத்தில் மக்களின் தினசரி பணி பாதிக்காதபடி மீட்பு நடவடிக்கையில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Vizhupuram