விழுப்புரம் அருகேயுள்ள நேமூரில் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த கொற்றவை சிற்பம் குறித்து வரலாற்று ஆய்வாளரான செங்குட்டுவன் மற்றும் அவரது குழுவினர் களஆய்வு மேற்கொண்டனர்.
விழுப்புரம் அருகே செஞ்சி சாலையில் அமைந்துள்ளது நேமூர் . இப்பகுதியில் பழமையான சிற்பம் காணப்படுவதாக வழக்கறிஞரான முத்து என்பவர் தகவல் அளித்ததன் பேரில் கள ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட வரலாறு மற்றும் பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளரான செங்குட்டுவன், திருவாமாத்தூரை சேர்ந்த சரவணகுமார் ஆகியோர் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது நேமூர் ஏரிக்கரையில் துர்க்கை என்று வணங்கப்பட்டு வரும் கொற்றவை சிற்பம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த சிற்பம் பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாகும்.

கொற்றவை சிற்பம்..
இந்த சிற்பத்தை பற்றி, செங்குட்டுவன் கூறியதாவது :
துர்க்கை என வணங்கப்பட்டு வரும் கொற்றவை வழிபாடு தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு இருந்து வரருகிறது. அச்சம் தரக்கூடிய தெய்வமாகவும் பார்க்கப்படுகிறது. போர்க்களத்திற்கு செல்பவர்கள் வெற்றி வாகை சூடுவதற்கு, கொற்றவையான இக் கடவுளை வழிபட்டு தான் செல்வார்கள். இத்தெய்வம் குறித்து நம் பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கானமர் செல்வி, காடுறை கடவுள், பெருங்காற்றுக் கொற்றி, கொற்றவை என பல பெயர்கள் இச்சிற்பத்திற்கு வழங்கப்படுகின்றன.
சிலப்பதிகாரத்தில் கொற்றவையின் உருவத்தை பல்வேறு நிலைகளில் நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் இளங்கோவடிகள். இதில், பாய்கலப் பாவை (பாய்ந்து வரும் மானை வாகனமாகக் கொண்டவள்) எனக் குறிப்பிடப்படுகிறார்.

கொற்றவை சிற்பம்..
நேமூர் ஏரிக்கரையில் கண்டறியப்பட்டுள்ள கொற்றவை சிற்பம் கி.பி. 8-9 ஆம் நூற்றாண்டைச் (பல்லவர் காலம்) சேர்ந்தது ஆகும். சுமார் 6 அடி உயரமுள்ள பலகைக் கல்லில் இந்தச் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. 8 கரங்களுடன் காட்சி அளிக்கும் கொற்றவை தக்க ஆயுதங்களை ஏந்தி, எருமைத் தலையின் மீது நிற்பது போன்று காட்சியளிக்கிறது.
இடது கரத்தின் கீழே மான் காட்டப்பட்டு இருக்கிறது. சிலப்பதிகாரம் சொல்லும் பாய்கலப் பாவையை இச்சிற்பம் நினைவூட்டுகிறது. கால்களின் இரண்டு பக்கங்களிலும் வணங்கி பூஜை செய்யும் நிலையில் அடியவர் இருவர் உள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
கொற்றவை சிற்பத்தின் அருகிலேயே ஒன்றன் கீழ் ஒன்றாக இருக்கும் 6 முகங்களைக் கொண்ட சிற்பம் தனியே காணப்படுகிறது. இது முருகனைக் குறிப்பதாகும். இந்த சிற்பமும் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.
அதுமட்டுமல்லாமல் நேமூர் ஏரி பகுதியில் தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டால் மேலும் பல தடயங்கள் கிடைக்கக்கூடும் எனவும் செங்குட்டுவன் கூறினார்.
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.