விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே மேல்பாதி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் கடந்த ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி தீமிதி திருவிழாவின் போது பட்டியல் வகுப்பினர் சாமி கும்பிட கோயிலுக்குள் சென்றதால் மற்றொரு சமூகத்தினர் பட்டியல் சமூக மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்ட்பாக வளவனூர் காவல்துறையினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் பட்டியலின மக்களை திரெளபதி அம்மன் கோயிலுக்குள் அழைத்து செல்வதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த இரு சமூக மக்களிடையேயும் 8 முறை சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் திரெளபதி அம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்களை அனுமதிக்க மாட்டோம் என ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பிடிவாதமாக இருந்தனர். மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் நடத்திய 8 சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே முடிந்தது.
மற்றொருபுறம் தங்களை கோயிலுக்குள் செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனால் மேல்பாதி கிராமத்தில் உள்ள இரு சமுதாயத்தைச் சேர்ந்த மக்களிடையே எந்த நேரத்திலும் மோதல் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் நிலவியது.
இதனையடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதை தடுக்கும் வகையில் 145 சட்டப்பிரிவை பயன்படுத்தி பிரச்சனைக்குள்ளான திரெளபதி அம்மன் கோயிலை பூட்டி சீல் வைக்க விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து கடந்த 7ஆம் தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருவாய் துறை அதிகாரிகள் நேரில் சென்று திரெளபதி அம்மன் கோயில் கதவுகளை பூட்டி சீல் வைத்தனர்.
மேலும் திரெளபதி அம்மன் கோயில் பிரச்சனை தொடர்பாக இரு சமூகத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (09-06-23) நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும் என இரு சமூகங்களைச் சேர்ந்த 80 பேருக்கு விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் மூலம் கடந்த 7ஆம் தேதி சம்மன் வழங்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் சம்மன் அனுப்பப்பட்டுள்ள 80 பேரில் பட்டியலினத்தைச் சேர்ந்த 24 பேரும், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த 38 பேரும் என மொத்தம் 62 பேர், விழுப்புரத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் முன்னிலையில் நேரில் ஆஜராகியுள்ளனர். சம்மன் அனுப்பப்பட்டவர்களை மட்டுமே போலீசார் உள்ளே அனுமதிக்கின்றனர்.
மேலும் படிக்க... தமிழகம் வருகிறார் அமித்ஷா.... நாடாளுமன்றத் தேர்தல் குறித்து வியூகம்... இபிஎஸ்ஸுடன் சந்திப்பா?
நேரில் ஆஜராகியுள்ள இருத் தரப்பினருடனும் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், விழுப்புரம் உட்கோட்ட காவல் கண்கானிப்பாளர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த விசாரணையின் போது இருத்தரப்பினரும் அளிக்கும் விளக்கத்தை பொறுத்தே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்து மாவட்ட நிர்வாகம் முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணை நடைபெறுவதையொட்டி விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
செய்தியாளர்:ஆ.குணாநிதி, விழுப்புரம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hindu Temple, Villupuram