விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் மகாராஜபுரத்தில், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் 7 வருடங்களாக வெற்றிகரமாக இயங்கிவருகிறது. தலைப்பிரசவம் நிச்சயமாக சுகப்பிரசவமாக அமைய வேண்டும் என்பதை முக்கிய நோக்கமாக கொண்டு இயங்கி வருகிறது இந்த சுகாதார நிலையம்.
இங்கு ஒரு மருத்துவ அலுவலர் மற்றும் 7 நகர்ப்புற செவிலியர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் புதுப்புது மாற்றங்களை இந்த ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு பிரசவம் பார்க்கும் கர்ப்பிணி பெண்களுக்கு அதிகளவில் சுகப்பிரசவம் நடைபெறுவது இம்மையத்தின் சிறப்பு அம்சம் ஆகும் . அதற்குரிய அனைத்து முயற்சிகளும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் இந்த மருத்துவமனை குறித்தும் பிரசவம் குறித்தும் மருத்துவ அலுவலர் ஜோதி கூறுகையில் , ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 80 முதல் 85 வரை பிரசவ சிகிச்சை பெற வருகிறார்கள். இதில் 50 - 55 பேர் வரை எங்களிடம் சிகிச்சை பெற்று பிரசவத்திற்கு வருவார்கள்.
சில சமயங்களில் இக்கட்டான சூழ்நிலையில் நாங்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்போம். சராசரியாக ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 20-25 பிரசவம் பார்க்கிறோம்.
அதிக அளவில் டெலிவரி பார்ப்பதால் தமிழ்நாடு அளவில் எங்கள் நகர்ப்புற சுகாதார நிலையம் 3 - ம் இடத்தை பெற்றுள்ளது. இந்த விருது எங்கள் மருத்துவமனைக்கும் எங்கள் குழுவிற்கும் கிடைத்த வெற்றியாகும்.
கர்ப்பிணி தாய்மார்கள் சிகிச்சை மட்டுமல்லாமல், இதர நோயாளிகள் நான்காயிரத்திற்கும் மேல் சிகிச்சை பெற வருபவர்களை நாங்கள் அவர்களின் சிகிச்சையையும் பார்த்துக் கொள்கிறோம். மேலும் அரசாங்கம் மூலம் வரும் அனைத்து நலத்திட்ட உதவிகளை கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொண்டு செல்ல அனைத்து உதவியும் செய்து தருகிறோம்.
மருத்துவமனைக்கு வர முடியாத சூழ்நிலையில் செவிலியர்கள் நோயாளியின் வீட்டிற்கே சென்று மக்களை தேடி மருத்துவம் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
கர்ப்ப காலத்தில் எந்தெந்த உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும், எந்தவித உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து வகையிலும் உறுதுணையாக நின்று, கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஏற்பட வழிவகை செய்கிறோம். அதுமட்டுமல்லாமல் அயர்ன் மாத்திரைகளை விட அயர்ன் டானிக்கும் தருகிறோம். தற்போது மருத்துவமனைக்கு புது ஸ்கேனிங் மிஷின் வந்துள்ளது.
இனி இங்கே அனைத்து வகை ஸ்கேனிங் எடுத்துக்கொள்ளலாம்.
இந்த மருத்துவமனைக்கு விழுப்புரம் சுற்றியுள்ள பகுதி மட்டுமல்லாமல் , செஞ்சி, கடலூர், பாண்டிச்சேரி போன்ற பல பகுதிகளிலிருந்து வருகிறார்கள். எங்கள் மருத்துவமனையின் முக்கிய இலக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் சுகப்பிரசவம் பெற வேண்டும் என்பதேயாகும்.அதற்குரிய அனைத்து முயற்சிகளில் ஈடுபடுவோம்.
இதுமட்டுமல்லாமல் வருடத்திற்கு ஒருமுறை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வளைகாப்பு விழா நடத்துவோம். இந்த விழா அவர்களுக்கு நிம்மதியையும் மன தைரியத்தையும் கொடுக்கும்.
அதுமட்டுமல்லாமல் எந்நேரத்திலும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அனைவரும் அவர்களின் தனிப்பட்ட மொபைல் எண்ணை கொடுத்து விடுவோம். 24 மணி நேரம் சிகிச்சை பெற வருபவர்களுடன் இணைந்து இருப்போம்.
மேலும் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், மாத்திரையின் எண்ணிக்கை குறைந்த அளவில் வருகிறது. இதற்கு ஒரு தீர்வு கிடைத்தால் இன்னும் நல்ல நிலைமைக்கு இந்த மருத்துவமனையை கொண்டு செல்லலாம்.
அதுமட்டுமில்லாமல் கர்ப்பிணி பெண்களுக்கு என இடவசதி, ஆய்வகம் என அனைத்து முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் என மருத்துவ அலுவலர் ஜோதி கூறினார்.
செய்தியாளர் : சு.பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.