Home /viluppuram /

Villupuram : கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில்..

Villupuram : கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில்..

சின்னசெவலை

சின்னசெவலை காளி கோவில்

Villupuram District : விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூருக்கு அருகே அமைந்துள்ள சின்னசெவலை கிராமத்தில் அமைந்துள்ள இந்த காளி கோவிலில் வழிபட்டுவிட்டு தான் கம்பர் ராமாயணத்தை இயற்ற தொடங்கியதாக கூறுகின்றனர்.. இக்கோவில் பற்றி விரிவாக காணலாம்..

மேலும் படிக்கவும் ...
    விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூருக்கு அருகே அமைந்துள்ளது சின்னசெவலை. இக்கிராமத்தில் இருந்து தென்பெண்ணை ஆற்றுக்கு தெற்கே 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது காளிகாம்பாள் கோயில். இக்கோயில் பல நூற்றூண்டுகளுக்கு முற்பட்டது என்று அறிஞர் பெருமக்கள் தெரிவிக்கின்றனர். திருவெண்ணைநல்லூர் கிராமத்தை சேர்ந்த காங்கேயன் என்னும் வேளாளருக்கு பிறந்தவர் சடையப்பர். ஏழைகளிடத்திலும், புலவர்களிடத்திலும் அன்பும், பண்பும், பாசமும் கொண்டு மிகவும் எளிமையாக வாழ்ந்தவர்.

    காங்கேயனிடம் பல நாள்கள் பட்டினியால் வாடிய முகத்துடன் வயிற்றுப் பிழைப்பிற்காக வேலை கேட்டு வந்த, கம்பரையும் அவரது தாயாரையும் தெரு வாயிற்படியில் கண்ட சடையப்பர், உள்ளே அழைத்து உபசரித்து தன்னுடைய மாளிகையிலேயே தங்க வைத்துக் கொண்டார்.

    சடையப்ப வள்ளல் தினமும் அதிகாலையில் எழுந்து தனது வயல்வெளிகளைச் சுற்றிப் பார்ப்பது வழக்கம். அதேபோல் காலையில் வீட்டிலிருந்து கிளம்பியதும், ஊருக்கு மேற்கில் அமைந்துள்ள ஏரியில் குளித்துவிட்டு, ஏரியின் வடமேற்கில் குடியிருக்கும் காளிகாம்பாளை மனம் உருக வேண்டி உலக மக்கள் அனைவரும் பசியின்றியும், பிணியின்றியும் வாழ பிரார்த்தனை செய்ததாக கூறப்படுகிறது.

    சின்னசெவலை காளி கோவில்


    அதுபோல,வள்ளலும், கம்பரும் காளியை வழிபட்டபோது, வால்மீகியால் எழுதப்பட்ட ராமரின் கதையை தமிழில் எழுதும்படி கம்பரை வள்ளல் கேட்டுள்ளார். அப்போது "ஸ்ரீமத் நாராயணனுடைய அவதாரமாகிய ராமபிரானின் சரித்திரத்தை அவரது தங்கையான இந்த அந்தரியினுடைய ஆலயத்தில் இப்போதே பூஜைபோட்டு தொடங்கி வையுங்கள்' என்று வள்ளலைக் கம்பர் கேட்டாராம். இதனைத் தொடர்ந்து வள்ளல் முன்னாலேயே ராமாயண காப்பியத்தை எழுத ஆரம்பித்துள்ளார் கம்பர் என்று புராணங்களில் கூறப்படுகிறது.

    முதலில் இக்கோயில் இயற்கை எழில் சூழ்ந்த வயல்வெளியில் மத்தியில் ஒரு சிலை வடிவில் மட்டுமே காணப்பட்டது. தற்போது சில தன்னார்வலர்கள் கொண்டு இக்காளிக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. காளி பக்கத்தில் வலது புறத்தில் பிள்ளையாரும் இடதுபுறத்தில் முருகன் கற்சிலையும் உள்ளது.

    இக்கோயிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு போன்ற தினங்களில் சிறப்பாக இருக்கும் என்றும், அன்றைய தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் .

    விழுப்புரத்தில் இருந்து கம்பர் வழிபட்ட காளி கோவிலுக்கு செல்லும் வழியை காட்டும் கூகுள் வரைபடம்..



    கம்பர் வழிபட்ட காளி கோயில் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். அத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலாக இக்கோயில் கருதப்படுகிறது.

    இக்கோயிலில் பக்தர்கள் வேண்டிய வேண்டுதல்கள் நிச்சயமாக நடைபெறும் எனவும், ஒன்பது நாட்கள் தொடர்ந்து விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் நினைத்தது நிச்சயமாக நிறைவேறும் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இத்தகைய சிறப்புமிக்க கோயிலை பாதுகாக்க வேண்டும் எனவும் ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Arun
    First published:

    Tags: Local News, Villupuram

    அடுத்த செய்தி