சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனை கடந்த 2015ம் ஆண்டு ஐ.நா. சபை அங்கீகரித்தது. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் இந்நாளில் உலகம் முழுவதிலும் யோகா பயிற்சிகளில் மக்கள் ஈடுபடுவது வழக்கம்.
இந்நிலையில், கொரோனா பெருந்தொற்றால் 2 ஆண்டுகளாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது. இதனால், சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனால் இந்த வருடம் யோகா தினத்தை கடைபிடிக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக இன்று விழுப்புரத்தில் 8வது யோகா தினத்தை கொண்டாடும் வகையில் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மைதானத்தில் விழுப்புரம் மாவட்ட யோகாசன சங்கம் சார்பாக யோகா தினம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் விழுப்புரம் மாவட்ட யோகாசன சங்கத்தின் தலைவரான ராமமூர்த்தி தலைமை தாங்கி வழி நடத்தினார். இதில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானவர்கள் இந்த யோகா பயிற்சியில் கலந்துகொண்டு பல்வேறு வகையான யோகாசனங்களை செய்து காட்டினர். இதில் 100க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்று யோகாசனப் பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்தப் பயிற்சியில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், இளம் வயதிலேயே யோகா பயிற்சியில் அனைவரும் ஈடுபட வேண்டும் எனவும், உடலில் எந்தவிதமான உபாதைகளும் வராது உடல்கள் வளைந்து கொடுக்கும் தன்மை இருக்கும் எப்போதாவது செய்வதாக இல்லாமல் தினந்தோறும் செய்ய வேண்டுமெனவும் 45 வயதுக்கு மேல் உடல் நல்ல நிலையில் இருக்கும் எனவும் எனவே தொடர்ந்து யோகாசனங்களை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.