பொதுமக்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் வகையில், “மக்களை தேடி மருத்துவம்” மற்றும் ‘நம்மை காக்கும் 48” போன்ற பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. தற்போது, நாடு முழுவதும் இன்புளுயன்சா வைரஸ் தொற்றின் காரணமாக இருமலுடன் கூடிய காய்ச்சல் மிக வேகமாக பரவி வருவதை அறிந்து உடனடியாக சுகாதாரத்துறை சார்பில், அனைத்து கிராமங்களிலும், நடமாடும் மருத்துவ குழுவின் மூலம், சிறப்பு காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் நடத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் நடமாடும் மருத்துவக்குழு மூலம் இன்றிலிருந்து (மார்ச் 10) அனைத்து கிராமங்கள் தோறும் சென்று காய்ச்சல் தடுப்பு மருத்துவ சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. ஒரு நாளைக்கு 117 கிராமங்கள் என சுழற்சி முறையில் இந்த காய்ச்சல் தடுப்பு மருத்துவ சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது. அதன் தொடக்க நிகழ்வாக இருவேல்பட்டு ஊராட்சி திருமுண்டீஸ்வரத்தில் கிராமத்தில் சிறப்பு காய்ச்சல் முகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் மூக்கு ஒழுகுதல் மற்றும் அடைத்தல், இருமல், தொண்டை வலி, நுரையீரல் பாதிப்பு, மூச்சுத் திணறல், சோர்வு, பலவீனம், தசைவலி, குளிர், வியர்வை தலைவலி மற்றும் கண்வலி போன்ற நோய் அறிகுறி பாதிப்புகள் உண்டாக்கும். இந்த வைரஸ் தொற்றால் ஏற்பாடும் நோய் அறிகுறி அவரவர் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்து தானாகவே குணமடைகிறது. எனினும் சிலர் நிமோனிய காய்ச்சல் போன்ற கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.
எனவே கர்ப்பிணி தாய்மார்கள் குழந்தைகள், 60 வயதிற்கு மேற்பட்டோர்கள் சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருப்பது அவசியமாகும். ஆகவே, கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு காய்ச்சல் தொடர்பான பாதிப்புகள் ஏதேனும் இருந்தால், ஆங்காங்கே நடைபெறும் சிறப்பு காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாமில் பங்கேற்று மருத்துவர் ஆலோசனை பெற்று தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
மேலும், பொது இடங்களுக்கு செல்லுதல் மற்றும் முகக்கவசம் அணிந்து, அடிக்கடி கைகளை கழுவி சமூக இடைவெளியினை பின்பற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்தார். தொடர்ந்து 4 கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும் “மக்களை தேடி மருத்துவம்” திட்டத்தின்கீழ் 4 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகமும் வழங்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Health, Local News, Villupuram