இந்திய மூத்தோர் தடகள போட்டியில் வெள்ளி வென்ற அரசுப்பள்ளி ஆசிரியர்!
விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கும் அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாமல் அரசு பள்ளி ஆசிரியர்களும் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றனர்.
கல்வியிலும் விளையாட்டிலும் மாணவர்களுக்கு உதவியாக இருந்து சாதனை புரிய உதவியாக ஆசிரியர்கள் விளங்குகின்றனர். அதே நேரத்தில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த நடுநிலைப் பள்ளி ஆங்கில பட்டதாரி ஆசிரியர் சின்னப்பராஜூ-ம் சாதனை புரிந்து வருகிறார்.
மதுரை நாகமலை வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி விளையாட்டு மைதானத்தில், தமிழக மூத்தோர் தடகள போட்டி நடந்தது. இதில், விழுப்புரம் அடுத்த சித்தானங்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சேர்ந்த ஆங்கில பட்டதாரி ஆசிரியர் சின்னப்பராஜ் கலந்து கொண்டு 400 மீட்டர் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.
அதுமட்டுமில்லாமல் இந்திய மூத்தோர் தடகளப்போட்டிகள், கடந்த 27.4.2022 முதல் 10.5.2022 வரை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. இதில், இந்தியா முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள் 4,500 பேர் பங்கேற்றனர். இப்போட்டியில், 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இரண்டாம் இடம் பெற்றார்.
இதற்காக வெள்ளி பதக்கம் பெற்றார். 3000 மீட்டர் தடை தாண்டி தண்ணீரில் குதித்து ஓடும் (ஸ்டீபில் சேஸ்) போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்று வெண்கல பதக்கம் வென்றார். 5000 மீட்டரில் தகுதியும் பெற்றுள்ளார். வரும் ஜூன், ஜூலை மாதங்கில் பின்லாந்தில் நடைபெறவுள்ள உலக மூத்தோர் தடகள போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார்.
இந்த வெற்றி குறித்து சின்னப்பராஜூ கூறுகையில், நான் இது போன்ற பல விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பேன் அதுமட்டுமல்லாமல் அரசு பள்ளி மாணவர்கள் விளையாட்டில் ஊக்குவிக்கும் வகையில் உறுதுணையாக நிற்பேன் எனக் கூறினார்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.