விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த சாதனா மற்றும் சத்யா ஆகிய இரு மாணவிகள் 8ம் வகுப்பு படித்து வருகின்றனர். கொரோனா விடுமுறையின் போது சத்தியா மற்றும் சாதனா ஆகிய இருவரும், திருக்குறளை பயின்று சாதனை புரிய வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இவர்களின் இம்முயற்சிக்கு ஆசிரியர் ஆரோக்கியராஜ் வழிகாட்டி உறுதுணையாக இருந்துள்ளார்.
கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஒரு மணி நேரம் 40 நிமிடத்தில் 1330 திருக்குறள்களையும் கூறிய இம்மாணவிகள், கடுமையான முயற்சிக்குப் பிறகு 25 நிமிடங்களுக்குள் அனைத்து திருக்குறளையும் அசுர வேகத்தில் ஒப்புவித்து வருகின்றனர்.
இது குறித்து ஆசிரியர் ஆரோக்கியராஜ் கூறும்போது கடந்த பிப்ரவரி மாதம் மாவட்ட அளவில் இரண்டு மாணவிகளும் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் சாதனா 13 நிமிடத்தில் அனைத்து குறள்களையும், சத்தியா 25 நிமிடத்தில் அனைத்து திருக்குறளையும் ஒப்புவிக்கும் திறமையும் பெற்றுள்ளனர். எந்த திருக்குறளை கேட்டாலும் எண் மற்றும் அதிகாரம் கூறினாலும் அந்த திருக்குறளை கூறும் திறன் பெற்றுள்ளனர்.
இதனை அடுத்து கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற திருக்குறள் இரட்டை உலக சாதனை நிகழ்வில், இம்மாணவிகள் இருவரும் உலக சாதனை படைத்துள்ளனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் மஸ்தான் வெற்றிபெற்ற மாணவர்களை பாராட்டினார்.
இவர்கள் இருவருக்குமான உலக சாதனை சான்றிதழை Unique World Records என்ற அமைப்பு (வெள்ளிக்கிழமை) வழங்கியது. மேலும், திருக்குறள் படிப்பது எல்லாருமே செய்வது போன்று தான், இருந்தாலும் மாணவிகள் தனித் திறமை என்னவென்றால் திருக்குறள் அதிகாரத்தின் எண்ணை கூறினால், அதோட அதிகாரத்துடன் திருக்குறளை அப்படியே ஒப்புவிக்கிறார்கள்.
இந்தத் திறமையை தான் இவ்விருவரையும் உலக சாதனை படைக்க வைத்தது. இந்த உலக சாதனை படைத்த இரு மாணவிகளையும் அப்பள்ளி சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பாராட்டி வருகின்றனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.