விழுப்புரம் மாவட்டத்தில், நியாய விலைக் கடைகளில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படவுள்ளதை முன்னிட்டு, செறிவூட்டப்பட்ட அரிசியினால் சமைக்கப்பட்ட உணவினை மாவட்ட ஆட்சியர் பழனி, பொதுமக்களுக்கு வழங்கி, செறிவூட்டப்பட்ட அரிசியின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், செறிவூட்டப்பட்ட அரிசியினால் சமைக்கப்பட்ட உணவினை மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், விழுப்புரம் மாவட்டத்தில், 01.04.2023 முதல் நியாய விலை கடைகள் மூலம், குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கப்பட உள்ளது. மத்திய அரசு, பொதுவிநியோகத்திட்டம், குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவு திட்டத்திற்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படவுள்ளது.
செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 உள்ளடக்கிய நுண்ணூட்டச்சத்து சேர்ந்து செறிவூட்டப்பட்ட அரிசி மணிகளை சாதாரண அரிசியுடன் 1:100 என்ற விகிதத்தில் கலவை செய்து செறிவூட்டப்பட்ட அரிசியாக மாற்றி, ஏற்கனவே குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவு திட்டத்திற்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
செறிவூட்டப்பட்ட அரிசியில் உள்ள இரும்புச் சத்து இரத்தச் சோகையை தடுக்கும், போலிக் அமிலம் கரு வளர்ச்சிக்கு, இரத்த உற்பத்திக்கு, வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கு உதவுகிறது.
மேலும் படிக்க : தோட்டக்கலைத்துறையின் மானிய உதவியுடன் சுரைக்காய் சாகுபடியில் செம லாபம் பார்க்கும் விழுப்புரம் விவசாயி!..
செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் கடந்த 21.09.2020 அன்று முதல் அறிமுக திட்டமாக திருச்சி, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் நியாய விலை கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில், 01.04.2023 முதல் செறிவூட்டப்பட்ட அரிசி, இந்திய உணவு கழகத்தில் இருந்து பெறப்பட்டு நியாய விலை கடைகள் வாயிலாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
செறிவூட்டப்பட்ட அரிசியின் நன்மைகள்
மேலும், அனைத்து நியாய விலை கடைகளிலும் செறிவூட்டப்பட்ட அரிசியின் நன்மைகள் உள்ளடக்கிய துண்டு பிரசுரங்கள், விழிப்புணர்வு விளம்பர பதாகைகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது.
இதன் தொடக்கமாக, பொதுமக்களிடையே செறிவூட்டப்பட்ட அரிசியின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், செறிவூட்டப்பட்ட அரிசியினால் சமைக்கப்பட்ட உணவுகளை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பொதுமக்கள் அனைவரும் நியாய விலை கடைகளில் வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியினை வாங்கி, உணவு சமைத்து உட்கொண்டு தங்கள் உடல் ஆரோக்கியத்தினை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Villupuram