விழுப்புரம் மாவட்டம் சோழாம்பூண்டி பகுதியை சேர்ந்த விவசாயி பாஸ்கரன் (55), 30 வருடங்களுக்கு மேலாக விவசாயம் செய்து வருகிறார். எப்போதும் கரும்பு விவசாயம் செய்த பாஸ்கர் தற்போது மாற்று விவசாயமாக தோட்டக்கலை துறை அறிவுறுத்தலின்படி குறைந்த இடத்தில் வெள்ளரி சாகுபடி செய்தார்.
அதில் நல்ல லாபத்தையும் பார்த்துள்ளார். அவரின் சக்சஸ் ஃபார்முலாவை நம்மிடம் பகிர்ந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ”25 சென்ட் நிலப்பரப்பில் வெள்ளரியில் எமிஸ்டார் என்ற ரகத்தை பயிர் செய்தேன். இந்த பயிர் சாகுபடிக்கு தோட்டக்கலைத்துறை மூலமாக ரூபாய்.4.675 லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
ட்ரிப்ஸ் மூலம் செடிகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. 50 சதவீதம் மானியம் தோட்டுக்கடை துறை மூலமாகவும் 50 சதவீதம் விவசாயியும் இணைந்து திட்டத்தை செயல்படுத்துகின்றனர்.
நான் 30 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வருகிறேன் எப்பவும் கரும்பு தான் நான் சாகுபடி செய்து வருவேன். ஆனால் அதற்கு தண்ணீர் அதிகம் தேவைப்பட்டது.
போகப் போக வறட்சி அதிகமாக இருந்த காரணத்தால் அதற்கு மாற்றாக வேறு ஏதாவது பயிர் செய்ய நினைத்தேன். அப்போது தோட்டக்கலைத் துறை அதிகாரிகளிடம் குறைந்த தண்ணீரில் விவசாயம் செய்து லாபம் பார்க்கக் கூடிய பயிரை கேட்டேன்.
அப்போது தோட்டக்கலை துறை அதிகாரிகள் குறைந்த இடம் மற்றும் குறைந்த தண்ணீர் பயன்பாட்டில் வெள்ளரி சாகுபடி செய்து லாபம் ஈட்ட முடியும். அதன்பின் ஆயிரம் சதுர மீட்டரில் வெள்ளரியில் எமிஸ்டார் என்ற ரகத்தை பயிர் செய்ய ஆரம்பித்தேன்.
ஆயிரம் சதுர மீட்டருக்கு 2000 விதைகள் தேவைப்பட்டது. ஒவ்வொரு விதைக்கும் கொஞ்சம் இடைவெளி விட்டு நடவு செய்தேன். செடி வளர்ந்து 35 வது நாளிலிருந்து அறுவடை செய்ய ஆரம்பிக்கலாம்.
நல்ல பராமரிப்புடன், செடிகளை கவனித்து வந்தால், ஒரு அறுவடைக்கு குறைந்தபட்சம் 300 முதல் 700 கிலோ வரை வெள்ளரியை அறுவடை செய்ய முடியும். இந்த வெள்ளரி ரகத்தின் ஆயுட்காலம் 100 முதல் 120 நாட்கள் ஆகும். ஒரு வருடத்திற்கு மூன்று முறை சாகுபடி செய்ய முடியும்.
முதல் சாகுபடியில் குறைந்தபட்சம் 12 முதல் 15 டன் மகசூல் கிடைக்கும். சராசரியாக 12 டன் வீதம் என்றால் ஒரு வருடத்தில் மூன்று முறைக்கு 36 டன் சாகுபடி செய்யலாம்.
வெள்ளரி சாகுபடிக்கு பசுமை குடில் அமைக்க வேண்டும். அதற்கு 50 சதவிகிதம் தோட்டக்கலை துறையின் மூலம் மானியமாகவும் 50 சதவிகிதம் விவசாயி சேர்ந்து செலவுகளை பார்த்துக் கொள்ள வேண்டும். குடில் அமைப்பது, பராமரிப்பு என மொத்தம் ஒன்பது லட்சத்து 50 ஆயிரம் முதலீடு செய்தேன்.
முதலில் கஷ்டமாக இருந்தாலும் நல்ல பராமரிப்பு, பொறுமை இருந்தால் நிச்சயமாக செலவு செய்த பணத்தோடு லாபத்தையும் நாம் ஈட்ட முடியும்.
வெளிநாடுகளுக்கு வெள்ளரி அதிக தேவை இருப்பதால் வெள்ளரிக்கு டிமாண்ட் அதிகம் உள்ளது. தற்போது ஒரு கிலோ வெள்ளரி 30 ரூபாயில் இருந்து 50 ரூபாய் வரைக்கும் விற்பனை ஆகிறது. இங்கிருந்து அறுவடை செய்யப்படும் வெள்ளரி கோயம்பேடு ஒட்டன்சத்திரம் பெங்களூர் போன்ற போன்ற பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
ஒரு வருடத்தில் வெள்ளரி சாகுபடியில் குறைந்தபட்சம் 5 லட்சத்திற்கும் மேல் லாபம் பார்க்க முடியும். வெள்ளரி சாகுபடி செய்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
அதுமட்டுமல்லாமல் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் அடிக்கடி வந்து பயிர்கள் நல்ல முறையில் இருக்கிறதா ஏதேனும் பூச்சித்தொல்லை இருக்கிறதா? என நேரில் வந்து விசாரித்து, அதற்கான தீர்வுகளையும் வழங்குகின்றனர்.
நிச்சயமாக குறைந்த இடத்தில் அதிக மகசூலை ஈட்டி நல்ல லாபத்தை வெள்ளரி சாகுபடியில் பார்க்க முடியும்” என விவசாயி பாஸ்கரன் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Vizhupuram