விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த சில நிகழ்வுகளின் தொகுப்பு
1) விக்கிரவாண்டியில் பறிமுதல் செய்த உர மூட்டைகளை கலெக்டர் ஆய்வு
விக்கிரவாண்டி வட்டாரத்தில் உரக்கலவை நிலையங்களில் வேளாண் துறை சிறப்பு குழுவினர் கடந்த 6ம் தேதி மற்றும் 10ம் தேதிகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது, ஆவணங்களுமின்றி இருப்பு வைத்திருந்த உரங்கள் 165 மெ.டன்., யூரியா மற்றும் இதர உரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விழுப்புரம் டான்பெட் உரக்கிடங்கில் வைத்திருந்த இந்த உர மூட்டைகளை கலெக்டர் மோகன் ஆய்வு செய்து, உர நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
2)அம்மன் சிலையில் 3 தாலி பொட்டுக்களை மர்மநபர்கள் கொள்ளை
விழுப்புரம் அடுத்த மோட்சக்குளத்தில் மகா காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் இருந்த இரண்டு மரக்கதவுகளின் பூட்டு உடைத்து, நேற்றிரவு உற்சவர் அம்மனின் கழுத்தில் இருந்த 3 கிராம் மதிப்புள்ள 3 தாலி பொட்டுகளை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
தகவலறிந்த வளவனுார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.
3)தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலர் வெளியிட்டு விழா
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலர் வெளியிட்டு விழா மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
விழாவிற்கு, அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் தலைமை தாங்கி, தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலரை வெளியிட்டனர். விழாவில், 634 பயனாளிகளுக்கு 3 கோடியே 41 லட்சத்து 10 ஆயிரத்து 215 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.
4) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அலுவலர் குறைதீர்க்கும் நாள்
விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அலுவலர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். இதில், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களின் பணி தொடர்பான முக்கியத்துவத்தையும், அரசு ஊரக வளர்ச்சி துறையை சிறப்பினமாக கருதி ஆய்வு செய்து வருவதாக கலெக்டர் கூறினார்.
மேலும், அலுவலர்கள் அனைவரும் அற்பணிப்புடன் பணிபுரிந்து மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உதவிட வேண்டும் எனவும், குறைகள் ஏதும் இருப்பின் எழுத்து மூலம் தெரிவிக்கலாம் என்றார்.
அதன்படி, பணிமாறுதல், பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், முதுநிலை மாற்றம், பதவி உயர்வு, மாவட்ட மாறுதல் போன்ற பணிசார்ந்த கோரிக்கைகள் தொடர்பாக 137 மனுக்கள் பெறப்பட்டது. இதில், 35 மனுக்கள் உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணப்பட்டு உத்தரவுகள் வழங்கப்பட்டது.
5) விழுப்புரம் டிராபிக் போலீசிற்கு ரூ.2.50 லட்சம் மதிப்பிலான பேரிகார்டுகள்
விழுப்புரம் டிராபிக் போலீஸ் நிலையத்தில், பேரிகார்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. எஸ்.பி., ஸ்ரீநாதா தலைமை தாங்கினார்.
டி.எஸ்.பி., பார்த்திபன் முன்னிலை வகித்தார். டிராபிக் இன்ஸ்பெக்டர் வசந்த் வரவேற்றார். இதில், விழுப்புரம் நகரை சேர்ந்த பல்வேறு கடைகள் உரிமையாளர்கள் ரூ.2.50 லட்சம் மதிப்பிலான 38 பேரிகார்டுகளை சாலை பாதுகாப்பு பணிக்காக எஸ்.பி.,யிடம் வழங்கினர்.
6)விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில், ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர்க்கும் நாள்
கூட்டத்திற்கு, கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். இதில், ஓய்வூதிய நிலுவைத்தொகை, பணிக்கால நிலுவைத்தொகை, பணப்பலன் குடும்ப உறுப்பினர்களுக்கு கிடைப்பதில் காலதாமதம், காப்பீட்டு திட்டத்தில் மருத்துவ சிகிச்சை வழங்குவதில் சுணக்கம் காட்டுதல், காப்பீட்டு அட்டை புதுப்பித்து வழங்குவதில் காலதாமதம் போன்ற 27 மனுக்கள் அதிகம் வந்தது.
7)இடுகாட்டுக்கு பாதை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே இடுகாட்டுக்கு பாதை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
செஞ்சி வட்டம், நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமம் பாரதி நகரில் சுமாா் 300 அருந்ததியா் குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் இறந்தவா்களின் உடலை இடுகாட்டில் அடக்கம் செய்ய பாதை கேட்டு, நீண்ட காலமாக போராடி வருகின்றனா்.
முறையான பாதை வசதி இல்லாததால், சடலத்துடன் வயல், கால்வாயில் இறங்கி இடுகாட்டுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இடுகாட்டுக்குச் செல்லும் பாதையை ஆக்கிரமிப்பாளா்களிடம் இருந்து மீட்டுத் தரக் கோரி, வேட்டவலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
செஞ்சி வட்டாட்சியா் பழனி மற்றும் நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். பொதுமக்கள் களைந்து சென்றனர்.
8) விழுப்புரம், பூந்தோட்டம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை
விழுப்புரம், பூந்தோட்டம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியா்களை நியமிக்க வேண்டுமென பள்ளி மேலாண்மைக் குழுவினா் கோரிக்கை விடுத்தனா்.
இந்தப் பள்ளியில் கடந்த 2019-20-ஆம் ஆண்டு 226 மாணவ, மாணவிகள் படித்துவந்த நிலையில் நிகழாண்டு 553 போ் படித்து வருகின்றனா். மாணவா்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயா்ந்துள்ளது.
ஒரு வகுப்பறையில் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். ஆனால் பள்ளியில் 3 ஆசிரியா்கள் மட்டுமே உள்ளனா். கழிப்பறை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி மாணவ, மாணவிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே நகராட்சி பூந்தோட்டம் பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை.
9 ) தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் செய்திகளை அறிந்துகொள்ள தனி செயலி அறிமுகம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாட்டு வீரா்கள் விளையாட்டுச் செய்திகளை அறிந்துகொள்வதற்கும், விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதற்கும் இனிவரும் காலங்களில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலியான ஆடுகளம் செயலியை பதிவேற்றம் செய்து பயன்படுத்த வேண்டும்.
விளையாட்டு வீரா், வீராங்கனைகள் (தனிநபா்) (குழு) மற்றும் பயிற்றுநா்கள் இந்த செயலியை பதிவுசெய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மோகன் கூறியுள்ளார்.
10) இருளர் சமுதாய மக்கள் வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு
விழுப்புரம் அருகே உள்ள கருங்காலிப்பட்டு கிராமத்தில் வசித்துவரும் இருளா் சமுதாய மக்கள் தங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
இதுதொடா்பாக அந்தக் கிராமத்தைச் சோ்ந்த சிங்காரம், அண்ணாமலை உள்ளிட்ட 8 குடும்பத்தினா் மனு.
கருங்காலிப்பட்டு கிராமத்தில் பல ஆண்டுகளாக குடிசை அமைத்து வசித்து வருகிறோம். மழை, வெயில், இயற்கைச் சீற்றங்களின்போது தொடா்ந்து பாதிக்கப்பட்டு வருகிறோம். எனவே, அரசு சாா்பில் எங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்.
மேலும், குடும்ப அட்டை, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரிவதற்கான அடையாள அட்டை ஆகியவற்றையும் வழங்க வேண்டும் என்று மனுவில் கோரியுள்ளனா்.எனவே இந்த மனுவை பரிசீலிக்க வேண்டும் என இல்ல சமுதாய மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.