விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள தாய்மார்கள் பாலூட்டும் தனி அறை கடந்த சில மாதங்களாக கண்காட்சிப் பொருளாக காணப்படுகிறது. இந்த அறை திறக்கப்படுமா? என பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கேள்வி எழுப்புகின்றனர்.
பாலூட்டும் தாய்மார்கள் நலன் கருதி பேருந்து நிலையங்களில் அனைத்து வசதிகளுடன் கூடிய தனி அறை கட்டப்படும் என கடந்த 2015ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, விழுப்புரம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் திருச்சி, கடலுார் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் நிறுத்துமிடத்தில் பாலூட்டும் தனி அறை கட்டப்பட்டது.
அதில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிவறை, தாய்மார்கள் அமருமிடம் உட்பட அனைத்து வசதியுடன் கூடிய குளிரூட்டப்பட்ட தனி அறை வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், விழுப்புரத்தில் உள்ள பாலூட்டும் அறை கடந்த சில மாதங்களாக திறக்கப்படாமல் மூடிய நிலையில் உள்ளது. இதனால், பேருந்து நிலையத்திற்கு குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள், இந்த அறையை பயன்படுத்த முடியாமல் அவதியடைகின்றனர்.
மேலும், குழந்தைகளுக்கு பேருந்து நிலையத்தில் பொதுவெளியில் பாலூட்டுவதற்கு, தாய்மார்கள் முகம் சுளிக்கின்றனர். இந்த அறையின் சாவி, விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலக ஊழியர்கள், பாலுாட்டும் அறையை திறக்காமல் மெத்தனமாக உள்ளனர்.
எனவே, விழுப்புரம் பேருந்து நிலையத்தில் உள்ள பாலூட்டும் அறையை திறக்க வேண்டும் என பொதுமக்கள், தாய்மார்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.