பயோகாஸ் (Bio Gas) என்பது கரிம கழிவுகளின் சிதைவிலிருந்து இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் ஒரு வகை உயிரி எரிபொருள் ஆகும். உணவுக் கழிவுகள் மற்றும் விலங்குகளின் கழிவுகள் போன்ற கரிமப் பொருட்கள் காற்றில்லா சூழலில் (ஆக்சிஜன் இல்லாத சூழல்) உடைக்கும்போது அவை வாயுக்களின் கலவையை வெளியிடுகின்றன, முதன்மையாக கிடைப்பது மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகும்.
நாட்டில் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருள்களின் விலை உயர்ந்து வருகிறது. இதுபோன்ற எரிவாயு விலை ஏற்றத்தால் இல்லத்தரசிகள் மட்டுமல்லாது இளைஞர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இதனை சமாளிப்பதற்காக, பல்வேறு பகுதிகளில் பயோகேஸ் தயாரிப்பு முறையை நடைமுறைபடுத்தி வருகின்றனர். அந்த வகையில், விழுப்புரம் வழுதரெட்டி பகுதியை சேர்ந்த நிவாஸ் (வயது 24) என்ற இளைஞர், சிறுவயது முதலே அறிவியல், விவசாயம், சமுதாய முன்னேற்றம் போன்ற பல வழிகளில் ஆர்வம் கொண்டவராக திகழ்ந்து, தனதுகல்லூரி படிப்பை B.E.(EEE)முடித்தவுடன் தன் கிராமத்துக்கும் தன் குடும்பத்திற்கும் ஏதாவது செய்ய வேண்டுமென எண்ணினார்.
அதன் முயற்சியால் தற்போது தமிழகத்தில் அதிகரித்து வரும் சிலிண்டர் எரிவாயு விலையை சமாளிப்பதற்காக பயோகேஸ் உற்பத்தி செய்யும் முறையில் ஈடுபட்டு வந்துள்ளார். முதலில் பல தோல்விகள் சந்தித்து, அதன்பின் வெற்றிகரமாக வீட்டிலேயே கிடைக்கக்கூடிய சமையல் காய்கறி உள்ளிட்ட கழிவுகளில் இருந்து பயோ கேஸ் தயாரித்துள்ளார்.
இந்த முயற்சிக்கு 7,000 ரூபாய் முதலீடாக அமைந்தது. இவருக்கு உறுதுணையாக விருட்சம் என்ற தன்னார்வ குழுவினர் திகழ்ந்ததுடன் நண்பர்களின் உதவியுடன் தற்போது வெற்றிகரமாக காய்கறிகளில் இருந்து பயோகேஸ் தயாரித்து அதனை சமையலுக்கு பயன்படுத்தும் முறையை கண்டுபிடித்துள்ளார்.
இதுகுறித்து நிவாஸ் கூறுகையில், இந்த பயோகேஸ் காய்கறி கழிவு, சாப்பாடு, மாட்டு சாணம் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த பயோகேஸ் மூலம் காலையில் 20 நிமிடம் மாலை 20 நிமிடம் டீ, வெந்நீர் போன்றவை சமைக்க முடியும். என்னிடம் உள்ள காய்கறிகள் கழிவுகளை கொண்டு நான் தற்போது சிறிய அளவில் இதனை கண்டு பிடித்துள்ளேன்.
பயோ கேஸ் எப்படி உருவாகும் என்றால், முதலில் கழிவுகளை கொட்டுவதற்கு தேவையான பேரல், காய்கறி கழிவுகள், கேஸ் அமைக்க தேவையான ட்யூப் ஆகும். பேரலில் தேவையான காய்கறிகளை கழிவுகளை கொட்டவேண்டும்.அவை சிதைய ஆரம்பிக்கும். அதன் கழிவிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை மரம் செடிகளுக்கு தெளிக்கும் திரவமாக பயன்படுத்தாலம்.
காய்கறிகளில் இருந்து பயோ கேஸ் உருவாவதற்கு ஒரு வாரமாகும். அதன்பின் அந்த பேரலியில் இருந்து ஒரு கனெக்சன் டியூபில் கொடுக்க வேண்டும் டியூப்பிலிருந்து சமையலில் அடுப்பிற்கு கனெக்ஷன் தரவேண்டும். அதன்பின் சமையல் அடுப்பு எரிய தொடங்க ஆரம்பிக்கும்.
இந்த பயோகேஸ் மூலம் என்னுடைய தேவையை நான் பூர்த்தி செய்து கொள்கிறேன். இந்த சிறிய முயற்சியை நான் பெரிய அளவில் கொண்டு செல்வதற்கு நகராட்சி, மாவட்ட நிர்வாகம் எனக்கு உதவி புரிந்தார் ஒரு கிராமத்திற்கு என்னால் பயோகேஸ் தயாரித்துக் கொடுக்கும் அளவிற்கு எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நான் பயோ கேஸ் தயாரிக்கிறேன் என்று தெரிந்தவுடன் நகராட்சி அதிகாரிகள் வந்து பார்த்து, வாழ்த்து தெரிவித்தனர்.
எனக்கு நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் ஒரே ஒரு கோரிக்கையை தான் இந்த பயோ கேஸ் தயாரிப்பு முறையை பெரிய அளவில் கொண்டு செல்வதற்கு தேவையான இடவசதி, காய்கறி கழிவுகளை தந்தால் நிச்சயமாக ஒரு குடும்பத்திற்கு தேவையான 5 கிலோ எரிவாயு என்னால் தரமுடியும் என நம்பிக்கையுடன் தெரிவித்தார் நிவாஸ்.
(தன்னம்பிக்கையில் ஜொலிக்கும் இளைஞர் நிவாஸை 96003 26514 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்..)
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.