விழுப்புரம் மாவட்டம் கோனை பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோனை கிராமத்தில், மாரியம்மாள் முத்து தம்பதியினர் 10 வருடங்களுக்கு மேலாக பிஸ்கெட்டுகள், கப் கேக் போன்றவற்றை செய்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து மாரியம்மாள் கூறுகையில், “நானும் எனது கணவரும் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி வட்டத்தில் கோனை பஞ்சாயத்தில் வசித்து வருகிறோம். 15 வருடத்திற்கு முன்பு எனது கணவர் வேறு ஒருவரின் பேக்கரியில் வேலை புரிந்து வந்தார். நான் குடும்பத்தை கவனித்து கொண்டு வந்தேன்.
போதிய வருமானம் இல்லாததால் இந்த தொழிலில் ஏதாவது செய்து முன்னேற வேண்டும் என யோசித்து, ஒரு நாள் நாங்களே ஒரு பேக்கரியை ஆரம்பிக்கலாம் என யோசனை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நானும் எனது கணவரும் 2008ல் கடன் வாங்கியும் மற்றும் சொந்த நிதியினை கொண்டு சிறிய அளவில் பேக்கரி ஒன்றை தொடங்கினோம். அதன்பிறகு 2012ல் எங்கள் கோனை ஊராட்சியில் ரோஜா மகளிர் சுய உதவி குழுவில் சேர்ந்து தொழிலை மேம்படுத்துவதற்கான சிறிய அளவு குழு கடன் பெற்று தொழிலை சிறந்த முறையில் நடத்தி வந்தோம்.
சென்ற ஆண்டு 2021ல் விழுப்புரம் மாவட்டத்தில் மகளிர் திட்டம் வாயிலாக அமைக்கப்பட்ட வட்டார வணிக வள மையம் மூலம் கடன் வழங்கும் செய்தியை அறிந்து, கடன் கோரி விண்ணப்பித்திருந்தோம். கடனுதவி வழங்குவதற்கு முன்பு மகளிர் திட்ட அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் நாங்கள் செய்யும் தொழிலை பார்வையிட வருகை புரிந்தனர். அவர்கள் நாங்கள் சிறந்த முறையில் தொழிலை செய்வதாகவும் மேலும் இதனை விரிவுபடுத்த ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தெரிவிக்க கூறினர்.
எங்கள் தொழிலினை மேம்படுத்துவதற்கு கூடுதலாக ஒரு இயந்திரம் தேவை என அவர்களிடம் கூறினோம். நாங்கள் கேட்ட 3 வாரத்தில் மகளிர் திட்ட அலுவலகத்தின் மூலம் பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை மேம்படுத்தும் திட்டம் என்ற திட்டத்தின் மூலம் 35% மானியத்துடன் வங்கி கடன் ரூ.6,00,000/- பெற்று இன்னும் இரு தினங்களில் இயந்திரம் எங்கள் பேக்கரியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலுக்கு உதவிய மகளிர் திட்டத்திற்கு நன்றி. மேலும் நாங்கள் செய்யும் தொழிலினை இன்னும் சிறந்த முறையில் செய்து காட்டுவோம்.
அதுமட்டுமில்லாமல், எங்கள் பேக்கரியில் சிறு தானிய பிஸ்கெட், சால்ட் பிஸ்கெட், தேங்காய் பிஸ்கெட், பிஸ்கெட்ஸ், ரஸ்க், பன் போன்ற பொருட்கள் செய்து, ஒவ்வொரு பாக்கெட்களின் விலை 15 ரூபாய் என விழுப்புரம் மாவட்டம் முழுவதும் மற்றும் குறிப்பாக மேல்மலையனூர், மேல்மருவத்தூர் போன்ற இடங்களில் அதிகளவில் விற்பனை செய்து வருகிறோம். உற்பத்தி செய்யும் பொருட்களில் சிறுதானிய பிஸ்கெட் வகைகள் மக்கள் அதிக அளவில் விரும்பி வாங்கி செல்கின்றனர். நிச்சயமாக இந்த பேக்கரி தொழிலில் முன்னேறுவோம்” என தன்னம்பிக்கையுடன் தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Business, Local News, Villupuram