விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் டூ மரக்காணம் செல்லும் சாலையில் அதிக அளவில் கிரசர் குவாரிகள் இயக்கப்படுகிறது. மேலும் கட்டளை, கீழ்பூதேரி, பெருமுக்கல், தென்னம்பூண்டி, குருவம்மாபேட்டை, அழகியபாக்கம், கீழ்அருங்குணம், பிரம்மதேசம், வெள்ளகுளம் போன்ற பல கிராமங்கள் இந்த குவாரி சுற்றியுள்ளது.
இப்பகுதி சுற்றிலும் கல் குவாரி இயங்கி வருகிறது. அதுமட்டுமில்லாமல், இப்பகுதிகளில் ஜல்லி உடைப்பதற்காக எம்சான்ட் மணல் 100- க்கும் மேற்பட்ட கிரசர்கள் இயங்கி வருகிறது .
மேலும்,சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில்,கிரசர் இயங்கும் இடங்களில் வசிக்கும் மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் காற்றை சுவாசிப்பதால் ,சுவாச கோளாறு, தோள் நோய்கள், நுரையீரல் பாதிப்புகள் போன்ற பல பிரச்சனைகளுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் காற்றில் அடித்து செல்லப்படும் கிரசர் பவுடர்கள் வீட்டின் உள்ளே வரை வருவதால் சாப்பாட்டிலும், துணிகளிளும் படிந்து விடுகிறது.
வீடுகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும், இந்த புழுதியால் நாங்கள் தினமும் அவதிப்படுகிறோம் என அப்பகுதியில் வாழும் மக்கள் கவலை அடைந்து வருகிறார்கள்.
வீடுகளில் மட்டுமல்லாமல் விவசாய நிலங்களிலும் ,கிரசர் பவுடர்கள் படிந்துவிடுகிறது.மேலும் சாலை ஓரம் உள்ள மரங்களில் கிரஷர் பவுடர் படிந்து மரங்கள் அனைத்தும் வெண்மை நிறத்தில் காட்சி அளிக்கிறது.
மேலும்,இரவு பகல் முழுவதும், கிரசர்களுக்கு டிப்பர் லாரிகள் அதிகளவு இயங்குகின்றது. நேர இடைவெளி இன்றி இயங்கும் இந்த வண்டிகளால் ஏற்படும் புழுதிக் காற்றால் திண்டிவனம், மரக்காணம் சாலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பதாகவும் கூறுகின்றனர்.
குறிப்பாக சமிபகாலமாக டிப்பர் லாரிகள் அதிவேகமாக செல்வதால் ஏற்படும் மணல் புகையால் கடந்த சில மாதங்களாக விபத்து அதிகரித்துள்ளது.
இது சம்மந்தமாக கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பல முறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆகையால் சம்மந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.