Home /viluppuram /

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று நடந்த சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று நடந்த சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு

A compilation of some events that took place in Villupuram district

A compilation of some events that took place in Villupuram district

இருளர் மற்றும் நரிக்குறவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு உள்ளிட்ட விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த சில நிகழ்வுகளின் தொகுப்பு

  விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த சில நிகழ்வுகளின் தொகுப்பு


  01.கஞ்சா விற்பனை குற்றவாளி குண்டாசில் கைது

  விக்கிரவாண்டி அடுத்த ஆர்.சி., மேலகொந்தையை சேர்ந்தவர் ஜான் போஸ்கோ, 31; கஞ்சா வியாபாரியான, இவர் மீது திண்டிவனம் போலீசில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.

  இவரது தொடர் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் குண்டாசில் சிறையில் அடைக்க, கலெக்டருக்கு, எஸ்.பி., ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார்.
  இதையடுத்து, ஆட்சியர் மோகன் உத்தரவின்பேரில், குண்டாசில் ஜான் போஸ்கோ சிறையில் அடைக்கப்பட்டார்.

  02. விழுப்புரம் மாவட்டத்தில் உவர்நீர் இறால் வளர்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்


  உயிர்கூழ்மதிரள் (பயோபிளாக்) குளங்களில் இறால் வளர்த்தல் மற்றும் உள்ளீட்டுக்கு மானியம் வழங்குதல் திட்டத்தில் ஒரு அலகு உயிர்கூழ்மதிரள் (பயோபிளாக்) குளம் அமைக்க மற்றும் உள்ளீட்டுக்கு ஆகும் மொத்த செலவினம் 18 லட்சத்தில் பொதுப்பிரிவினருக்கு 40 சதவீதம் மானியம் வழங்கப்படும்.

  உவர்நீர் இறால் வளர்ப்பிற்காக புதிய குளங்கள் அமைத்தல் மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட உவர்நீர் இறால் வளர்ப்பு குளங்களுக்கு உள்ளீடுகள் வழங்குதல் திட்டத்தில் உவர்நீர் இறால் வளர்ப்பிற்காக புதிய குளங்கள் கட்டுவதற்கு ஒரு எக்டேர் அலகிற்கு 8 லட்சம் மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட உவர்நீர் இறால் வளர்ப்பு குளங்களுக்கு உள்ளீடுகள் வழங்க 6 லட்சத்தில் பொதுப்பிரிவினருக்கு 40 சதவீதம் மானியம்
  வழங்கப்படும்.

  எனவே, இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள்
  விழுப்புரம், மீன்வளம்
  மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், 10,
  நித்தியானந்தா நகர்,
  வழுதரெட்டி,
  விழுப்புரம் 605 401
  அலுவலக தொலைப்பேசி எண் 04146-259329
  அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்கள் பெற்று உரிய ஆவணங்களுடன்
  விண்ணப்பித்து பயன்பெறலாம்.

  03.சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான வயது தளர்வு சிறப்பு முகாம்


  விழுப்புரம் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சமூகப்பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது.


  இம்முகாமில், எலும்பு மற்றும் முடநீக்கியல் மருத்துவர், மனநல மருத்துவர், கண் மருத்துவர், காது மூக்கு தொண்டை மருத்துவர் ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்தனர்.

  இதில், 18 வயதிற்குட்பட்ட 62 மாற்றுத்திறனாளிகள் தகுதியானோர் என கண்டறியப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகை வயது தளர்வு குழு ஒப்புதலின் பேரில் ஜூன்-2022 முதல் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

  முகாமில் கலந்து கொண்ட 78 மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து, 62 நபர்களுக்கு உதவித்தொகை வழங்க தேர்வு செய்யப்பட்டது. ஏற்கனவே உதவித்தொகை பெறுபவர்கள், 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

  04. விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், உணவு மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கல் துறை குறித்த ஆய்வுக்கூட்டம்


  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் ஆகியோர் உணவு மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கல் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

  05.விழுப்புரம் எம்.எல்.ஏ., பெயரில் உள்ள போலி முகநுால் கணக்கை தடை செய்யக்கோரி, எஸ்.பி., அலுவலகத்தில் புகார்

  விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்த தி.மு.க., வழக்கறிஞர் கொடுமுடி சேரலாதன் தலைமையில் கொடுத்துள்ள மனு;
  தற்போது முகநுாலில் லட்சுமணன் தி.மு.க., விழுப்புரம் என்ற பெயரில் ஒரு போலியான கணக்கு துவக்கப்பட்டுள்ளது.

  அதில், விழுப்புரம் எம்.எல்.ஏ., லட்சுமணன் துவங்கப்பட்டதுபோன்று, சித்தரித்து பல செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பல பெண்களின் ஆபாச படங்களை வெளியிட்டு, எம்.எல்.ஏ.,வின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டுவருகின்றனர்.

  இந்த நபர்களை கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்கவும், போலி முகநுால் கணக்கை தடை செய்ய எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  06.விழுப்புரத்தில் ஒப்பந்தம் முடிந்த கடைகளை இடிக்க முயன்றதற்கு எதிர்ப்பு

  விழுப்புரம் தெற்கு ரயில்வே காலனியில், கடந்த 1981ம் ஆண்டு சிதம்பரம் மற்றும் வைத்தியநாதன் ஆகியோரின் குடும்பத்தினர் ஒப்பந்த அடிப்படையில் தலா ஒரு கடைகள் வாடகைக்கு வைத்துள்ளனர். இந்த கடைகளுக்கான ஒப்பந்தம் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் முடிவடைந்துவிட்டது.

  இந்த கடைகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டபோது, சிதம்பரம், வைத்தியநாதன் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

  பின், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதால், கடைகளில் இருந்த பொருட்களை எடுத்துச்சென்றனர். இதையடுத்து, இரண்டு கடைகளையும் அதிகாரிகள் இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

  07. கல்லுாரி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரணை

  விழுப்புரம் அடுத்த ராம்பாக்கத்தை சேர்ந்தவர் அய்யனார் மகள் ஜெயஸ்ரீ, 19; கடலுார் மாவட்டம், சி.முட்லுார் அரசு கலைக்கல்லுாரியில் பி.ஏ., ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வருகின்றார்.

  இவர், கடந்த சில தினங்களாக பூவரசங்குப்பத்தில் உள்ள உறவினர் சுமன் மனைவி ரேவதி வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி அதிகாலை வீட்டிலிருந்த ஜெயஸ்ரீயை காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

  இது குறித்த புகாரின்பேரில், வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

  8. இருளர் மற்றும் நரிக்குறவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு

  வெள்ளிமேடுபேட்டை ஊராட்சி தலைவர் மேனகா தலைமையில் கொடுத்துள்ள மனு;
  எங்கள் கிராமத்தில் இருளர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த 20 குடும்பங்கள் கடந்த 75 ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர்.

  இவர்களுக்கு அரசு இடம் ஒதுக்கி கொடுத்துள்ளது. ஆனால், இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கவில்லை. பல ஆண்டுகளாக விண்ணப்பித்தும் இதுவரை வழங்கப்படவில்லை.
  எனவே, இருளர் மற்றும் நரிக்குறவர் சமுதாய மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  09.தனியார் நிறுவன ஊழியர் பண மோசடியில் ஈடுபட்டதாக எஸ்.பி., அலுவலகத்தில் மனு

  விழுப்புரம் அடுத்த ஈ.மண்டகப்பட்டை சேர்ந்த ஆறுமுகம் தலைமையில் கொடுத்துள்ள மனு;
  தஞ்சாவூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சாமிநாதன் என்பவர், என் மகளுக்கு மத்திய அரசில் வேலை வாங்கித்தருவதாக கூறினார்.

  இதற்காக, 50 ஆயிரம் ரூபாய் கையிலும், 50 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கிலும் சாமிநாதனுக்கு நான் கொடுத்தேன்.

  இதேபோன்று, கணக்கன்குப்பத்தை சேர்ந்த நான்குபேரிடம், 2 லட்சத்து 50 ஆயிரமும், மண்டகப்பட்டில் ஆறுபேரிடம் தலா 5000 ரூபாயும் வாங்கினார். இதையடுத்து, வேலை வாங்கித்தராமல், ஏமாற்றிவிட்டார். எனவே, சாமிநாதன் மீது எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.  செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
  Published by:Esakki Raja
  First published:

  Tags: Villupuram

  அடுத்த செய்தி