விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில், தாய் பசுவை கண்டுபிடித்து தரக்கோரி கன்று குட்டி கழுத்தில் பதாகை அணிந்து புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே கொட்டியாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர், பசுமாடுகள் மற்றும் கன்றுக்குட்டிகளை வளர்த்துவருகிறார். அவருக்கு சொந்தமான உலகலாம்பூண்டி கிராமத்திலுள்ள நிலத்தில் மாட்டு கொட்டகையில் மாடுகளை கட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இரவு மீண்டும் மாட்டுகொட்டகைக்கு சென்றபோது மாட்டுக்கொட்டகையில் இருந்த பசு மாடு காணாமல் போய் இருந்தததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனையடுத்து பசுவை மர்ம நபர்கள் திருடி சென்றது குறித்து கஞ்சனூர் காவல் நிலையத்தில் கோவிந்தன் கடந்த 19 ஆம் தேதி புகார் அளித்தார். அந்த புகாரினை பெற்றுக்கொண்ட போலீசார் பசு திருடி சென்றவர்கள் குறித்து விசாரணை செய்யாமல் கடந்த 14 நாட்களாக காலம் தாழ்த்தி வருவதாக கூறியும் தனது தாய் பசுவை தேடி கண்டுபிடித்து தரக்கோரி கோவிந்தன் மற்றும் அவரது மனைவி சுபாஷினி நூதன முறையில் புகார் அளிக்க முடிவு செய்தனர்.
அதன்படி, கன்றுகுட்டியின் கழுத்தில் அம்மாவை கண்டுபிடித்து தரக்கோரிய பதாகையை அணிவித்து கன்றுடன் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
காணாமல் போன, கன்று குட்டி குறித்து உரிமையாளர் கூறுகையில், ‘கொட்டியாம்பூண்டி கிராமத்தில் பசுக்கள் திருடு போவது வழக்கமான ஒன்றாகி வருகிறது. இரவு நேரத்தில் பசுக்களைத் திருடி செய்வதும் அதனைக் கொல்வது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. எனவே இது போன்ற அசம்பாவிதங்களுக்கு மாவட்ட நிர்வாகம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென கன்று குட்டியுடன் மனு அளிக்க வந்தோம் என்று தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்ட மாணவர்கள் விவசாய டிரோன் கருவி பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
கன்றுக்குட்டியுடன் புகார் அளிக்க வந்த சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கன்று குட்டியுடன் வந்த கோவிந்தனிடம் விரைவில் தாய் பசுவை கண்டுபிடித்து தருகிறோம் என காவலர்கள் கூறியதையடுத்து கோவிந்தன் தனது கன்று குட்டியை அழைத்து சென்றார். இச்சம்பவத்தால் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Viluppuram S22p13