விழுப்புரம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்த சசிரேகா - பரத் தம்பதியின் மகன் தர்ஷன்(3), தனியார் பள்ளியில் எல்.கே.ஜி (LKG) படித்து வருகிறார். இந்த சிறுவன் தற்போது 197 நாடுகள் மற்றும் அதன் கொடிகளை சரியாக கண்டுபிடித்து கூறி விடுகிறார். 4 நிமிடம் 40 வினாடிகளில் 196 நாடுகளின் பெயர் மற்றும் அதன் கொடியை டக்டக் என்று கூறியதை பார்த்து வியந்தோம். இந்த சாதனைக்காக சிறுவன் தர்ஷன் உலக சாதனை புத்தகத்தில் ( International Book of World Record's )-ல் இடம் பெற்றுள்ளார்.
இந்த சாதனையை இதற்கு முன்னர் 4 வயதுடைய சிறுவன் செய்து உலக புத்தகத்தில் இடம் பெற்றிருந்தார். அதனை தற்போது முறியடித்துள்ளார் 3 வயதேயான சிறுவன் தர்ஷன். இந்த சாதனையை பாராட்டி டெல்லியில் இருந்து இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெகார்ட் மூலம் தர்ஷனுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. மேலும், இதே சாதனைக்காக கலாம் ஸ் வேர்ல்ட் ரெக்கார்ட் வழங்கிய விருதையும் தர்ஷன் பெற்றுள்ளார். இத்தனை சிறப்பு வாய்ந்த 2 விருதுகளையும் பெற்று விழுப்புரம் மாவட்டத்திற்கு தர்ஷன் பெருமை சேர்த்துள்ளார்.
இதையடுத்து, சாதனை செய்த சிறுவனை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி நேரில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த சிறு வயதில் இத்தனை சாதனைகளை படைத்த சிறுவன் தர்ஷன் கழுத்தில், தான் வாங்கிய பதக்கத்தை அணிந்து கொண்டு, மழலை சிரிப்பில் நடந்துவரும் அழகை சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்த அழகை ரசித்துக்கொண்டே, தர்ஷனின் பெற்றோர் சசிரேகா- பரத் தம்பதியிடம் பேசினோம்.
இதுகுறித்து சசிரேகா கூறுகையில், “குழந்தைகளுக்கு பள்ளி படிப்பையும் தாண்டி, பல திறமைகளை அவர்களுக்குள் புகுத்து வளர்ப்பதில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும். அதுபோல தான் நான் தர்ஷனுக்கு என்ன திறமைகள் இருக்கிறது என்று கண்காணித்து வந்தேன். அப்போது அவன் விளையாட்டாக உலக நாடுகளின் கொடிகளை பார்த்து அதன் ஏதேதோ கூற அதை ஊக்குவிக்கும் வகையில் அவனுக்கு 2 வாரமாக உலக நாடுகளின் கொடியின் பெயர்களை கூற சொல்லி பயிற்சி செய்தேன்.
அவனும் எனக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தான். அதன் மூலம் தற்போது உலக சாதனை படைத்துள்ளான். இது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. மேலும் பெற்றோர் அனைவரும் குழந்தைகளுக்கு என்ன திறமை இருக்கிறது என கண்காணித்து ஊக்குவிக்க வேண்டும்” என தெரிவித்தார். மேலும் சிறுவன் தர்ஷனுக்கு விழுப்புரம் பகுதி மக்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Villupuram