ஹோம் /விழுப்புரம் /

Viluppuram | சோழ மன்னனை சிறைபிடித்த குறுநில மன்னன் கோப்பெருஞ்சிங்கன்.. 13-ம் நூற்றாண்டு கற்சிலை கண்டெடுப்பு

Viluppuram | சோழ மன்னனை சிறைபிடித்த குறுநில மன்னன் கோப்பெருஞ்சிங்கன்.. 13-ம் நூற்றாண்டு கற்சிலை கண்டெடுப்பு

13-ம்

13-ம் நூற்றாண்டு கற்சிலை

Viluppuram | விழுப்புரம் அருகே ஆற்காடு கிராமத்தில் 13ம் நூற்றாண்டு கால குறுநில மன்னரின் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் அருகே திருக்கோவிலூர் சாலையில் இருக்கிறது ஆற்காடு. இப்பகுதியில் 10ஆம் நூற்றாண்டு சமணத் தீர்த்தங்கரர் சிற்பம் உள்ளிட்ட வரலாற்றுத் தடயங்கள் இருக்கின்றன.

இந்நிலையில் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள், இப்பகுதியை ஆட்சிசெய்த குறுநில மன்னன் கோப்பெருஞ்சிங்கன் சிற்பம் உள்ளிட்ட புதிய தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இச்சிற்பம் மற்றும் இதனுடைய சிறப்புகள் குறித்து விழுப்புரம் மாவட்ட வரலாறு மற்றும் பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளரும் எழுத்தாளருமான செங்குட்டுவன் நமக்கு பல்வேறு விளக்கங்களை தந்துள்ளார்.

13-ம் நூற்றாண்டு கற்சிலை

இதுகுறித்து பேசிய அவர், ‘ஆற்காடு கிராமத்தில் உள்ள அமச்சார் அம்மன் கோயிலில் சில துண்டுக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை மூத்த கல்வெட்டு ஆய்வாளர் சு.ராஜகோபால் வாசித்து இருக்கிறார். இக்கல்வெட்டுகள்13ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. சோழ மன்னன் மூன்றாம் ராஜராஜனை சிறை வைத்தவன் எனும் பெருமை படைத்தவன் கோப்பெருஞ்சிங்கன்.

13-ம் நூற்றாண்டு தலையில்லாத கற்சிலை

இவரது ஆட்சிக்காலத்தில் சிதம்பரம், திருவெண்ணெய் நல்லூர், திருக்கோவிலூர், திருவாமாத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட ஏராளமான கோயில்களுக்கு திருப்பணிகள் நடந்துள்ளன.

'சகலபுவனச் சக்கரவர்த்தி', 'அவனி ஆளப் பிறந்தான்' உள்ளிட்ட விருதுப் பெயர்களால் அழைக்கப்படும் கோப்பெருஞ்சிங்கனின் கல்வெட்டுகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிடைக்கின்றன.

கோப்பெருஞ்சிங்கன் சிற்பம் சிதம்பரம் நடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் காணப்படுகிறது. அதற்கடுத்து விழுப்புரம் அருகே உள்ள ஆற்காடு, ஆ.கூடலூர் கிராமங்களில் தான் தனிச்சிற்பங்களாகக் காணப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறுநில மன்னன் கோப்பெருஞ்சிங்கனுக்கும் ஆயந்தூர், ஆ.கூடலூர், ஆற்காடு ஆகிய கிராமங்களுக்கும் உள்ள தொடர்புகள், ஆற்காடு கல்வெட்டில் குறிப்பிடப்படும் சம்புவராயர், அங்கிருந்த சிவன் கோயில் குறித்தும் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதே பகுதியில் தலையில்லாத சிற்பம் ஒன்றும் களஆய்வில் கண்டறியப்பட்டது. இது, கி.பி 1212 முதல் கி.பி.1231 வரை கெடிலம் அருகே உள்ள சேந்தமங்கலம் பகுதியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னன் கோப்பெருஞ்சிங்கன் சிற்பம் ஆகும்.

இம்மன்னனின் முழு உருவச் சிலை ஆற்காடு கிராமத்திற்கு அருகில் உள்ள ஆ.கூடலூர் கிராமத்தில் அமைந்திருக்கிறது. இதனை அப்பகுதி மக்கள் கடவுள் சிலையாக வழிபட்டு வருகின்றனர். இந்தச் சிற்பம் ஏற்கனவே ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டதாகும்.

இதுபோன்ற வரலாற்று சிற்பங்களை தொல்லியல் துறையினர் பாதுகாக்க வேண்டும் எனவும், கிராம மக்கள் இதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் செங்குட்டுவன் கூறினார்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Viluppuram S22p13