விழுப்புரம் அருகே செஞ்சி சாலையில் அமைந்துள்ள கிராமம் பிரம்மதேசம். இங்கு சோழர் காலத்தை சேர்ந்த பழமைவாய்ந்த பாடலீஸ்வரர் மற்றும் பிரம்மபுரீஸ்வரர் சிவாலயங்கள் அமைந்துள்ளன. இக்கிராமத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமான செங்குட்டுவன் கள ஆய்வில் ஈடுபட்டார். அப்போது கி.பி.12ம் நூற்றாண்டைச் சேர்ந்த மூத்ததேவி சிற்பம் இருப்பது கண்டறியப்பட்டது. இதுபற்றி ஆய்வாளர் செங்குட்டுவன் கூறுகையில், “பிரம்மதேசம் கிராமத்தில் உள்ள மந்தைவெளி பகுதியில் கள ஆய்வு செய்ய ஆரம்பித்தோம் . அப்போது சிற்பம் ஒன்று முக்கால்வாசி அளவிற்கு மண்ணில் புதைந்து இருந்தது தெரியவந்தது.
இதனை துர்க்கை என அப்பகுதி மக்கள் வணங்கி வந்தனர். இது என்ன சிற்பம் என ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்து, கிராம மக்களின் ஒத்துழைப்புடன் சிற்பத்தின் முன் இருந்த மண் முழுவதும் அகற்ற ஆரம்பித்தோம். அப்போது அச்சிற்பம் மூத்ததேவி சிற்பம் எனக் கண்டறிந்தோம். காக்கை கொடியுடனும் மகன் மாந்தன் மகள் மாந்தியுடன் வலது காலை தொங்கவிட்டும், இடது காலை மடக்கியும் அமர்ந்த நிலையில் மூத்ததேவி அழகாகக் காட்சி தருகிறார். சிற்பத்தின் இடது கரம் தொடை மீதும், வலது கரம் அபய முத்திரையுடனும் அமைந்துள்ளது.
வழக்கமான மூத்ததேவி சிற்பங்களில் காணப்படும் பெருத்த வயிறு, அகட்டியக் கால்கள் இங்குக் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சிற்பத்தின் காலம் கி.பி.12-13ம் நூற்றாண்டு என்பதை மூத்த கல்வெட்டு ஆய்வாளர் ராஜகோபால் உறுதிப்படுத்தி இருக்கிறார். வடமொழியில் ஜேஷ்டா என்று அழைக்கப்படும் மூத்த தேவி வழிபாடு தமிழ்நாட்டில் மிகவும் தொன்மை மிக்கதாகும். சங்க காலம் தொடங்கி சோழர் காலம் வரையில் இந்த வழிபாடு இருந்து வந்துள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
விழுப்புரம் மாவட்டத்தில் நன்னாடு, பேரங்கியூர், பிடாகம், திருவாமாத்தூர், கொட்டப்பாக்கத்துவெளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மூத்ததேவி சிற்பங்கள் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன. தற்போது கண்டறியப்பட்ட இந்தச் சிற்பம் பிரம்மதேசம் வரலாற்றுக்குப் புதிய வரவாகும். இந்த சிற்பத்தை உரிய முறையில் பாதுக்காக்க வேண்டும் என கிராம மக்களும், கள ஆய்வில் ஈடுபட்ட நபர்களும் வேண்டுகோள் விடுத்தனர்” என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Villupuram