Home /trichy /

பார்வை இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கையோடு வாழும் இளைஞர்..

பார்வை இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கையோடு வாழும் இளைஞர்..

கண்

கண் பார்வை இழந்து தன்னம்பிக்கையோடு வேலை செய்யும் கண்ணப்பன்.

தனது சிறுவயதில் கண் பார்வை இழந்த கண்ணப்பன் தற்போது பல இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறார்.

  பார்வையை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காத இளைஞர்..

  திருச்சி மாவட்டத்தில் அவரது சிறுவயதிலேயே பார்வை இழந்த, ஒருவர் மன உறுதியுடன் போராடி ஏழை இளைஞர்களுக்கும் தொழில் வாய்ப்பு வழங்கி, அவர்களது வாழ்க்கையில் ஒளி வீச செய்துள்ள கண்ணப்பனை பற்றிய ஒரு சிறு செய்தி தொகுப்பு.

  திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்த, சேகர் மற்றும் லக்ஷ்மி தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர் தான் கண்ணப்பன். இவர் தனது நான்காவது வயதில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். பின்னர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல்நலம் குணமடைந்த பின்புதான் தெரிந்தது இவருக்கு தனது இரு கண்களின் பார்வையும் போய்விட்டது என்று. இதனால் மிகவும் மனமுடைந்த கண்ணப்பன் தனது வீட்டிலேயே தனிமையில் இருந்தார். ஆனால், கண்ணப்பன் தனது சிறுவயதிலேயே எதையாவது சாதிக்க வேண்டும் என்று நினைப்பவராக இருந்தார். எனவே, அவரது குறைபாடை பெரிதாக எடுத்துக்கொண்டு நாம் வாழ்வில் துவண்டு போய் விடக்கூடாது என்று மீண்டும் எழுந்து வந்தார். இதனை அடுத்து கண்ணப்பன் 2004 ஆம் ஆண்டு இரு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டு அந்த தொழிலை கற்றுக்கொள்ள தொடங்கினார்.

  இதனை அடுத்து திருச்சியில் உள்ள இருசக்கர வாகன பழுது பார்க்கும் ஒரு கடையில் சிறுவயதிலேயே வேலைக்குச் சேர்ந்து, தொழிலை முழுமையாக கற்றுக் கொண்டார். அந்த வகையில் சைக்கிள் மற்றும் பைக் போன்ற இரு சக்கர வாகனங்களை பற்றி முழுமையாக அறிந்து கொண்டு, அதில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்யும் அளவுக்கு அவர் தனது அறிவை வளர்த்துக்கொண்டார்.

  இதனை அடுத்து 10 ஆண்டுகளாக, வெவ்வேறு இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடை களில் பணிபுரிந்து வந்துள்ளார். ஆனால் இந்த காலகட்டத்தில் கூட பலரும், அவரது உடலின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி அவரை கேலி செய்து வந்துள்ளனர். இத்தகைய இன்னல்களை சந்தித்த அவர், மீண்டும் மன உளைச்சலுக்கு ஆளான போதும், இந்த சமுதாயத்தில் நாம் நிச்சயம் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற மன உறுதியுடன் போராடினார்.

  தனது வாழ்வின் அடுத்தக் கட்ட பயணத்தை நோக்கி அவர் செல்ல ஆரம்பித்தார். அதன் தொடக்கமாக 2012ஆம் ஆண்டு சொந்தமாக ஒரு இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடையை திருச்சி உறையூர் பகுதியில் தொடங்கினார்.

  ஆனால், அந்த நேரத்தில் அவருக்கு பெரிதாக எந்த ஒரு வாகனமும் பழுதுபார்க்க வரவில்லை என்றே கூறலாம். இருந்தாலும் மன உறுதியுடன் இருக்கும் கண்ணப்பனுக்கு, காலப்போக்கில் சில வாகனங்கள் பழுது பார்ப்பதற்காக வந்தன. அவர் வாகனத்தின் ஒலியை வைத்தே வாகனத்தில் என்ன பிரச்சினை என்பதை கண்டுபிடிக்க தொடங்கினார். அதுமட்டுமல்லாமல், வாகன உரிமையாளர் வாகனத்தை ஓட்டும்போது பின்னால் அமர்ந்து சென்று வாகனத்தின் சத்தத்தை கேட்டு என்னென்ன பிரச்சனைகள் இருக்கின்றது என்பதை, முழுமையாக கண்டுபிடிக்கும் அளவுக்கு தனது திறனை வளர்த்துக்கொண்டார்.

  பழுது பார்த்த வாகனங்கள் அனைத்துமே எந்தவிதமான குறையும் இல்லாமல் சரியாக இருந்தது. இதன் காரணமாக, பொதுமக்கள் அவருக்கு நல்ல வரவேற்பு கொடுக்க தொடங்கினர். இதனை அடுத்து, கண்ணப்பனுக்கு தினந்தோறும் குறைந்தது 5 முதல் 10 வண்டிகள் பழுது பார்ப்பதற்கு வந்த வண்ணம் இருந்து வந்தன. ஆனால் நாளடைவில் வாகனங்கள் அதிகரித்ததால் வேலைக்கு ஆள் வைக்க முடிவு செய்த அவர், வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு உதவி செய்ய நினைத்தார்.

  ஏழை எளிய இளைஞர்கள் 4 பேரை பணியில் அமர்த்தி அவர்களுக்கும் மாத வருமானம் கொடுத்து வேலை வாய்ப்பை வழங்கினார். மேலும் தனக்கு அன்றாடம் கிடைக்கும் வருமானத்தில் தனக்கு உணவு, கடை வாடகை போன்ற செலவு போக மற்றவற்றை அந்த இளைஞர்களுக்கு கொடுத்து உதவினார்.

  மன உறுதியுடன் இருக்கும் கண்ணப்பனிடம் அவரது இந்த பயணத்தை பற்றி கேட்டபோது, அவர் தனது தாயார் தனது சிறுவயதிலேயே இறந்து விட்டதாகவும் அதன் பிறகு சில ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தையும் இறந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

  தனது உடன் பிறந்த அண்ணன் மற்றும் தங்கை ஆகியோர் திருமணம் செய்து தனித்தனியாக சென்றுவிட்டதாகவும் தான் தனியாக இருப்பதால் தானே அனைத்தையும் செய்வதற்கு கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தனக்கு குறைபாடு இருந்தபோதும் வாழ்க்கையின் இலட்சியம் என்பது தனது குறையை பெரிதாக காட்டவில்லை. அதன் காரணமாகவே தன்னால் மீண்டும் எழுந்து வர முடிந்தது என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார். தொடர்ந்து பேசிய கண்ணப்பன், தன்னால் ஏழை மக்கள் பயனுற வேண்டும் என்பதற்காகவே ஏழை இளைஞர்களை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து வருவதாக கூறினார்.

  அது மட்டுமல்லாமல் மன உறுதியோடு செயல்பட்டதன் காரணமாக தான், வாகனங்களை பழுது பார்க்கும் பணியில் முழு ஈடுபாடுடன் அனைத்தையும் கற்றுக் கொண்டு, எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வாகனங்களை சரிபார்த்து தர முடிந்தது. அதனால்தான் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கடையை என்னால் நடத்த முடிந்தது என்று கூறுகிறார்.

  பழுதுபார்க்கும் கடையில் வருமானம் குறைவாக இருந்தாலும், இதை செய்வதன் மூலம் தனக்கு மனநிறைவு ஏற்படுகிறது என்றும் பெருமையாக கூறுகிறார். அதுமட்டுமல்ல தன்னுடன் பணிபுரியும் இளைஞர்கள் வாழ்க்கைக்கு தேவையான உதவிகளையும் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

  மேலும் தனது நிலைமையை கருத்தில் கொண்டு இதுவரை திருமணம் செய்யவில்லை என்றும், வாழும் வரை தன்னைப்போல் வறுமையில் இருப்பவர்களுக்கு உதவி செய்து வாழ வேண்டும் என்பதே எனது லட்சியமாக உள்ளது என்றும் அவர் கூறுகிறார். மேலும் உடலில் குறைகள் இருக்கும் தன்னைப் போன்றவர்கள் எந்த ஒரு காரணத்துக்காகவும் தனது லட்சியத்தை விட்டுக் கொடுக்க கூடாது. மன உறுதியுடன் இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும் என்றும் அவர் கூறினார். எனவே தன்னைப் போன்று இருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் அவருக்கு உள்ள திறமையை வெளிக்காட்ட தனது உடல் குறை ஒரு தடையாக இருக்கக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.

  தனது இரு பார்வையும் இழந்த கண்ணப்பன் தனது மனது உறுதியோடு போராடு வந்ததன் காரணமாக அவர் இன்று தனது சொந்தக் காலில் நின்று அவரது வாழ்க்கையை நடத்தி வருகிறார். இவரது வாழ்க்கைப் பயணம் துவண்டு போயிருக்கும் ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


  செய்தியாளர் - என்.மணிகண்டன்.
  Published by:Esakki Raja
  First published:

  Tags: Trichy

  அடுத்த செய்தி