திருச்சி மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை ரியானா மாடலிங் துறையில் பல சாதனைகளை செய்து வருகிறார்.மூன்றாம் பாலினத்தவருக்கு சமூகத்தில் உள்ள தடைகற்களை எப்படி படிகற்களாக ரியானா மாற்றினார் என்பதை நம்மிடம் பகிர்ந்தார்.”நான் திருச்சியில் கல்லுக்குழியில் பிறந்து, பள்ளி படிப்பை ஆர். சி. மேல்நிலைப் பள்ளியில் முடித்தேன். பள்ளி படிப்புடன் நிறுத்தி விடாமல் புனித வளனார் கல்லூரியில் பி.எஸ்.சி இயற்பியல் படித்து, ஜமால் முகமது கல்லூரியில் எம்.எஸ்.சி இயற்பியல் படித்துள்ளார்.
5 ஆம் வகுப்பு படிக்கும் போது சிறுமிகள் ஆடைகள் மீது ஆசை வந்தது பெண் போல உணர்ந்தேன் ஆனால் வீட்டில் சொல்ல அச்சமாக இருந்தது. எனினும் என் நடவடிக்கையில் மாற்றம் வந்துள்ளதை கவனித்த பெற்றோர் என்னை பல கோயில்களுக்கு அழைத்து சென்றனர்.பின்னாட்களில் என் நிலையை புரிந்து கொண்டு என்னை படிக்க வைத்தனர் நானும் படித்து பட்டதாரி ஆனேன்.
கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து மாடலிங்கில் கவனம் செலுத்தி வருகிறேன். அதோடு நடனத்தில் டிப்ளமோ முடித்தேன். அவ்வப்போது நடன பயிற்சி அளிப்பதும், குறும்படம் என்று என்னுடைய கேரியரில் கவனம் செலுத்துகிறேன். கடந்த 2022 ஏப்ரல் 18 ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெற்ற அழகி போட்டியில் பங்கேற்று முதல் ரன்னராக தேர்வு செய்யப்பட்டேன். இங்கு புதிய ரக ஆடைகள், ஆபரணங்கள், சிகை அலங்காரம், பலவிதமான தோற்றங்களில் மேடைகளில் கேட் வாக்கில் நடந்து வந்து தங்களுடைய அலங்காரங்களை பார்வையாளர்களை பார்க்க வைப்பது. இப்படி தான் நான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தற்போது மூன்றாம் பாலினத்தவர்களுக்கான மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளேன்.
இந்தியா முழுவதிலும் இருந்து பங்கேற்கும் போட்டியாளர்கள், அனைவரையும் அவர்களுடைய முந்தைய சாதனைகள், அவர்களுடைய மாடலிங் அனுபவம், உள்ளிட்டவற்றை இணையதள மூலம் டெல்லியில் இருந்து, ஒரு குழு ஆய்வு செய்து அதன் பின் அவர்களை தேர்வு செய்வார்கள். அதில் தமிழகத்தில் இருந்து நான் ஒருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.
இதையும் படிங்க: சைபர் குற்றங்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் 'ரவுண்ட்' அடிக்கும் கோவை இளைஞர்கள்
அதற்கான ஆடிசன் நிகழ்ச்சியும் கடந்த செப்டம்பரில் நடந்து முடிந்து விட்டது. இந்த மாதம் இறுதியில் டெல்லியில் மிஸ் இந்தியா போட்டியானது நடைபெற உள்ளது .இந்த போட்டியில் வெற்றி பெறுவது தான் என்னுடைய இலக்கு என்று கூறினார்.”என்னை போல் இருக்கும் அநேக திருநங்கைகள் தங்களுடைய பெற்றோர்கள், ஆதரவு இல்லாத காரணத்தால் தடம் மாறிப் போகக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
பெற்றோர்களின் ஆதரவு கட்டாயம் தேவை, என்பதை, திருநங்கைகளின் பெற்றோர்கள் உணர வேண்டும். என்னுடைய பெற்றோர்கள் தரும் அன்பும், அரவணைப்பும் கொண்டு தான், நான் இந்த இடத்திற்கு வந்து நிற்கிறேன். என்னுடைய வீட்டில் பெற்றோர் மட்டுமல்லாமல் என்னுடைய அண்ணன், அண்ணி மற்றும் உறவினர்கள் அனைவரும் என்னை ஆதரித்து அன்பு காட்டி உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
என்னுடைய வாழ்வில் இலக்கு என்னை போன்றவர்களை அரவணைத்து அவர்களை மேம்படுத்துவது தான்" என்று கூறினார்.தமிழகத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் மீதான பார்வை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருவதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.
திருநங்கைகளில் சிலர் இலக்கை நிர்ணயித்து, அதை நோக்கி பயணித்தாலும் , பலர் அதற்கான தேடுதலில் தங்களை தொலைத்து, சமூகத்தில் மதிப்பையும் இழந்து விடுகிறார்கள். ரியானா போன்றவர்களை பார்த்து அவர்களுக்கு பிடித்த வழியில் பயணிக்க வேண்டும். திருநங்கைகளும் சமூகத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு. விரைவில் இது நடக்கும் என்ற நம்பிக்கையில் ரியானாவுக்கு வாழ்த்துக்கள் சொல்லி விடைபெற்றோம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tamil News, Transgender, Trichy