நோயாளிகளை மருத்துவர்கள் இனி பரிசோதனை செய்யாமலேயே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கலாம். நோய்களை கண்டறியும் ஸ்மார்ட் நாற்காலி உருவாக்கி அசத்தியுள்ளார் திருச்சி கல்லூரி மாணவர்.
தேவையே கண்டுபிடிப்பின் தாய் என்பார்கள். அப்படி மருத்துவர்களின் சுமையை குறைக்க மருத்துவ உலகில் பல புதிய கண்டுபிடிப்புகள் வந்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் திருச்சியில் உள்ள கல்லூரி மாணவரின் இந்த கண்டுபிடிப்பும் மருத்துவர்களின் பணியை எளிமையாக்கும் என்றால் அது மிகையல்ல.
கடந்த 2 வருடங்களுக்கு முன் கொரோனா நோய் தொற்று உலகையே உலுக்கி பலரை காவு வாங்கியது. உடனடியாக அதற்கான தடுப்பு மருந்து என்பது கண்டுபிடிக்கப்பட்டாலும், ஒருவருக்கொருவர் சமூக இடைவெளியில் தான் இருக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. அதே நேரத்தில் ஒரு நோயாளியை மருத்துவர்கள், செவிலியர்கள் அருகில் சென்று சோதனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் பயனுள்ள விதத்தில் ஒரு கண்டுபிடிப்பை இந்த சமூகத்திற்கு அளிக்க வேண்டும் என்பதற்காக, திருச்சி கல்லூரி மாணவன் ஒருவர் முயற்சி செய்து அதில் சாதனையும் படைத்துள்ளார். திருச்சி புனித வளனார் கல்லூரியில் முதுகலை மின்னணுவியல் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர் சுபாஷ் ( வயது 21) ஒரு ஸ்மார்ட் நாற்காலியை கண்டுபிடித்துள்ளார்.
<strong>உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற <a href="https://www.youtube.com/channel/UCgSkbmwaB-iVtyW3f0nL3Cg?sub_confirmation=1">கிளிக் </a>செய்க</strong>
அதன்மூலம் மருத்துவர்கள் நோயாளிகள் அருகில் செல்லாமல், அவர்களது ரத்த ஓட்டம், இதய துடிப்பு, உடல் வெப்பநிலை ஆகியவற்றை பரிசோதிக்கும் வகையில் ஸ்மார்ட் நாற்காலியை மாணவர் சுபாஷ், கண்டுபிடித்து அசத்தியுள்ளார். இதுகுறித்து மாணவர் சுபாஷ் கூறுகையில், ”எனது தந்தை நெடுமாறன் கூலி வேலை செய்கிறார். தாய் வசந்தா, அங்கன்வாடியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். எனது பள்ளிப்படிப்பை பெரம்பலூரில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் முடித்துவிட்டு, இளங்கலை மின்னணுவியல் படிப்பை புனித வளனார் கல்லூரியில் முடித்தேன். இளங்கலை 3ம் ஆண்டு பயிலும்போதுதான், கொரோனா லாக்டவுன் போடப்பட்டது. சமூக இடைவெளியை அனைவரும் பின்பற்றினர் ஆனால் மருத்துவர்களோ கொரோனா நோயாளிகளை தொட்டு பார்த்துதான் பரிசோதனை செய்தனர்.
பி.பி. கிட் அணிந்து பரிசோதனை செய்தாலும் பல மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த நிலையை போக்க மருத்துவர்களுக்கு உதவும் ஒரு கருவியை கண்டுபிடிக்க முடிவெடுத்தேன். அப்படி வந்ததுதான் இந்த ஸ்மார்ட் நாற்காலி. ரத்த ஓட்டம், இதய துடிப்பு, உடல் வெப்பநிலை சரியாக உள்ளதா என்ற இந்த 3 முக்கிய பரிசோதனைகளை இந்த நாற்காலியில் அமரும் நோயாளிகளுக்கு செய்ய முடியும். நோயாளிகள் குறித்த தகவல்கள் வைஃபை மூலம் மருத்துவர்கள் செல்போன்களில் அறிந்துகொள்ளும்படி ஐஓடி அடிப்படையிலான ‘ஸ்மார்ட் நாற்காலியை’ உருவாக்கினேன். மனித சமுதாயத்துக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில் மாணவர் சுபாஷ் கண்டுபிடித்த ‘ஸ்மார்ட் நாற்காலி’யை இன்று பலரும் பாராட்டி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Trichy