பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கியது. பகல் பத்து உற்சவத்தின் நிறைவு நாளில், காலையில் நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
இதையொட்டி தினமும் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நேற்று அதிகாலை 4.45 மணிக்கு நடைபெற்றது. மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படாததால், கடந்த இரண்டு ஆண்டுகளாக சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் நேற்று நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் நம்பெருமாளை தரிசிக்க தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
மேலும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பகல் பத்து விழாவின் கடைசி நாளில் காலை 6 மணிக்கு மோகினி அலங்காரத்தில் (நாச்சியார் திருக்கோலம்) நம்பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதையொட்டி காலை 6 மணிக்கு நம்பெருமாள் நாச்சியார் கோலத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 7 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் காட்சியளித்தார். பின்பு பொதுஜன சேவை முடிந்தவுடன் மாலை 5 மணிக்கு புறப்பட்டு 5.30 மணிக்கு ஆரியபட்டாள் வாயில் வந்தடைந்தார்.
இரவு 7 மணிக்கு திருக்கொட்டார பிரகாரம் வழியாக வலம் வந்து கருட மண்டபம் சேர்ந்தார். இரவு 8.30 மணிக்கு ஆழ்வாராதிகள் மரியாதையாகி கருடமண்டபத்திலிருந்து புறப்பாடாகி இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் அடைந்தார். இந்த மோகினி அலங்காரத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று (திங்கட்கிழமை) காலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இதற்காக உற்சவர் நம்பெருமாள் ரத்தினஅங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து நேற்று அதிகாலை 3.30 மணியளவில் மூலஸ்தானத்தில் இருந்து சிம்மகதியில் புறப்பட்டு வெளியில் வருந்தார்.
தொடர்ந்து இரண்டாம் பிரகாரம் வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியாக மூன்றாம் பிரகாரத்திற்கு வரும் நம்பெருமாள், துரைப் பிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வந்தார். முன்னதாக விரஜாநதி மண்டபத்தில் அவர் வேத விண்ணப்பம் கேட்டருளினர். அதனைத் தொடர்ந்து காலை 4.45 மணியளவில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அப்போது நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலை கடந்து மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக்கொட்டகைக்கு காலை 5 மணிக்கு வந்தடைந்தார்.
பின்பு நம்பெருமாள் சுமார் 1 மணி நேரம் பக்தர்கள் தரினசம் செய்தனர். அதன்பின் காலை 7 மணிக்கு சாதரா மரியாதையாகி, ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் காலை 8 மணிக்கு எழுந்தருளுவார். காலை 9 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரை பொதுஜன சேவையும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை அரையர் சேவையுடன், பொது ஜனசேவையும் நடைபெறும். திருமாமணிமண்டபத்தில் இருந்து நம்பெருமாள் நள்ளிரவு 12 மணியளவில் புறப்பட்டு மறுநாள் (3ம் தேதி) அதிகாலை 1.15 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைவார்.
2023 ஜல்லிக்கட்டு.. திருச்சியில் மல்லுக்கட்ட வேற லெவலில் தயாராகும் காளைகள்..!
செய்தியாளர்: மணிகண்டன், திருச்சி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Trichy