திருச்சி மாவட்டம், துறையூரில் " தென் திருப்பதி " என பக்தர்களால் போற்றப்படுகின்ற பெருமாள்மலையில் , மேலே சென்று பெருமாளைத் தரிசனம் செய்வதற்கு ஏதுவாக சுமார் 5 கி.மீ தூரம் அமைக்கப்பட்டுள்ள தார்ச்சாலையானது சமீப காலமாக ரோட்டின் அரளைக் கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக உள்ளது.
சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக மலையில் பாறைகள் உருண்டு சாலையின் பக்கவாட்டின் அருகில் எந்நேரமும் அடுத்த சுற்றின் கீழ் உருளக் கூடிய அபாயத்தில் உள்ளதால் கார், வேன் மற்றும் இரு சக்கர வாகனத்தில் மரண பயத்துடனேயே பக்தர்கள் மேலே சென்று தரிசனம் செய்து வருகின்றனர் பிரமோற்சவ விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக கொடியேற்றம் இன்று முதல் நடைபெற்றுள்ளது.
இதுவரை கோவில் நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பக்தர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். மேலும் மலை மீதுள்ள பெருமாள் கோவிலின் மூலஸ்தான கோபுர கலசம் சாய்ந்தவாறு உள்ளதால் அதனைக் காணும் உள்ளூர் பக்தர்கள் இதனால் ஊருக்கு ஏதும் தீங்கு நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்திலும் உள்ளனர்.
கடந்த ஒரு வருட காலமாக சாய்ந்த நிலையில் உள்ள கோபுர கலசத்தை இது நாள் வரையிலும் சீர்படுத்தாமல் உள்ளனர். அடிவாரத்தில் ஏழை எளிய மக்கள் பக்தர்கள் உள்ளிட்டோர் பசியாறிக் கொண்டிருந்த அன்னதானத் திட்டத்தையும் கடந்த சில மாதங்களாக மலை மேல் உள்ள கோவிலின் மண்டபத்தில் கோவில் நிர்வாகம் மாற்றி விட்டதால் , வயதான ஏழை எளிய மக்கள் மலைமேல் சென்று உணவருந்த முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது.
மேலும் மலைமேல் நடக்கும் அன்னதானத்தில் தினமும் ஒரு சில பக்தர்கள் மட்டுமே கலந்து கொள்வதாகவும் , மீதமுள்ள உணவை மலையில் சுற்றித் திரியும் குரங்குகளுக்கு போட்டு விடுவதாகவும் கூறப்படுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட திருக்கோவில் அன்னதானத் திட்டத்தை முறையாக செயல்படுத்தாமல் கோயில் நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பெருமாள் அடிவாரத்தில் பெரம்பலூர் செல்லும் சாலை விரிவாக்கம் செய்த போது இடிக்கப்பட்ட கோவிலின் நுழைவு வாயிலை கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கட்டப்படாமலும், சாலையில் பயணிப்போர் வணங்கிச் செல்லக் கூடிய வகையில் அமைக்கப்பட்டிருந்த பெருமாள் பாதத்தையும் உடனடியாக அமைத்திட வேண்டும் என திருக்கோவில் நிர்வாகத்திற்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Trichy