Home /trichy /

திருச்சியில் பல ஆண்டாக அந்தரத்தில் தொங்கும் பாலம்.. விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது..

திருச்சியில் பல ஆண்டாக அந்தரத்தில் தொங்கும் பாலம்.. விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது..

அந்தரத்தில் தொங்கும் பாலம்.

அந்தரத்தில் தொங்கும் பாலம்.

Trichy District: திருச்சியில் பல ஆண்டுகளாக முடிவிற்கு வராத பாலம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திருச்சி மாவட்டத்தில் மிகவும் பழமையான, அகலம் குறைந்த திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலத்திற்கு பதிலாக, புதிய மேம்பாலம் அமைக்கும் பணி (அரிஸ்டோ மேம்பாலம்) கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது.ரூ.81 கோடி திட்ட மதிப்பில் 2 கட்டங்களாக பாலத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது.
    இதில் முதல் கட்டமாக அரிஸ்டோ ரவுண்டானாவை மையமாக வைத்து திண்டுக்கல் சாலை, மத்திய பஸ் நிலைய பகுதி, ஜங்ஷன் ரெயில் நிலையம், மதுரை சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் பாலம் கட்டுமான பணிகள் முடிவடைந்து உள்ளன.

    இந்நிலையில் சென்னை-மதுரை சாலையை இணைக்கும் வகையிலான மன்னார்புரம் பகுதியில் ராணுவத்திற்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த இடத்தை கொடுக்க ராணுவ அமைச்சகம் மாற்று இடம் கேட்டது. ஆனால், ராணுவ அமைச்சகம் கேட்ட இடத்தில், மாற்று நிலம் ஒதுக்க தமிழக அரசு கொடுக்க தயங்கி வந்தது. எனவே, ராணுவ இடம் ஒப்படைக்கப்படாததால் அந்த பகுதியில் மட்டும் பாலம் அமைக்கும் பணி இன்னும் நிறைவடையாமல் அந்தரத்தில் தொங்கியபடி பாலம் பல ஆண்டுகளாக கிடந்தது. அதே வேளையில் முதல்கட்ட பணியில் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள ஒரு பகுதியை அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 17-ந் தேதி அன்று சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    இதனைத்தொடர்ந்து புதிதாக திறக்கப்பட்ட பாலத்தில் கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் செல்ல தொடங்கின. இந்த பாலத்தில், மதுரை சாலையில் கிராப்பட்டி பகுதியில் இருந்து வாகனங்கள் ஏறி, இறங்கவும், மத்திய பேருந்து நிலையம், திண்டுக்கல் சாலை கருமண்டபம் ஆகிய வழிகளில் ஏறி, இறங்கவும் முடியும். அதே வேளையில் ஜங்ஷன் ரெயில் நிலையம் வழித்தடத்தில் வாகனங்கள் இறங்க மட்டுமே முடியும். ஜங்ஷன் பகுதியில் இருந்து ஏற முடியாது. இந்தநிலையில் அரிஸ்டோ மேம்பாலத்தில் மன்னார்புரம் செல்லும் வழியில் விடுபட்ட பாலப் பணிகளுக்கான இடத்தினை கொடுக்க ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.

    அதில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி தற்போது பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சமீபத்தில் திருச்சி வந்த பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, விரைவில் விடுபட்ட பாலப் பணிகள் தொடங்கும் என்றார்.
    இந்த நிலையில் அரிஸ்டோ மேம்பாலத்தில் விடுபட்ட பாலம் கட்டுவதற்கான பணி பூமி பூஜையுடன் தொடங்கியது.

    மேலும் இதுகுறித்து திருச்சி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட அதிகாரிகள் கூறுகையில், அரிஸ்டோ மேம்பாலத்தில் விடுபட்ட பாலப்பணிகள் தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கி விட்டது.
    பாலம் கட்டுவதற்காக ரூ.3½ கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விடுபட்ட பாலம் 135 மீட்டர் நீளத்திற்கும், 10½ மீட்டர் அகலத்திற்கும் கட்டப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் பாலம் கட்டுவதற்கான பணிகள் முழுவீச்சில் தொடங்கி நடைபெறும்.

    இந்நிலையில்  திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதில் அவர் கூறுகையில் பாதுகாப்பு துறைக்கு சொந்தமான நிலம் ஒதுக்குவது தொடர்பான பிரச்சனையில் திருச்சியில் கடந்த 8 ஆண்டுகளாக அரிஸ்டோ மேம்பால பணி முழுமையடையாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பாதுகாப்பு துறைக்கு சொந்தமான 66 செண்ட் இடத்தை ஒன்றிய அரசு அந்த பாலப்பணிக்காக ஒதுக்கியது எனவும், தற்போது அந்த பணிகள் தொடங்கியது.

    கடந்த 8 ஆண்டுகளாக மேம்பால பணி நிறைவடையாமல் இருந்தது. நான் மக்களவை தேர்தலில் போட்டியிடும் போது அரிஸ்டோ மேம்பால பணியை நிறைவு செய்ய நடவடிக்கை எடுப்பேன் என கூறி இருந்தேன். அதற்காக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அதிகாரிகளை தொடர்ந்து சந்தித்து பேசினேன். தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரும் முயற்சி செய்தனர். ஏற்கனவே இருந்த திருச்சி எம்.பி, முன்னாள் அமைச்சர்களும் முயற்சி செய்தனர். தற்போது அந்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    பல ஆண்டுகளாக முடிக்கப்படாத இந்த பிரச்சனை 4 மாதங்களில் பணிகள் முடித்து போக்குவரத்து பயன்பாட்டிற்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Arun
    First published:

    Tags: Trichy

    அடுத்த செய்தி