Home /trichy /

மூலிகை குணம் மிகுந்த அருவிகள்... இயற்கை அழகு... கோவில்கள் - திருச்சியில் மிஸ் பண்ணக்கூடாத சுற்றுலா தலங்கள்

மூலிகை குணம் மிகுந்த அருவிகள்... இயற்கை அழகு... கோவில்கள் - திருச்சியில் மிஸ் பண்ணக்கூடாத சுற்றுலா தலங்கள்

திருச்சி ஸ்ரீரங்கம் கோவில்

திருச்சி ஸ்ரீரங்கம் கோவில்

திருச்சியில் இயற்கை எழிலார்ந்த அருவிகள், மலைகள், சிறப்வு வாய்ந்த கோவில்கள் மற்றும் அழகான சுற்றுலா தலங்களும் வியக்க வைக்கும் காட்சிகளும் மிஸ் பண்ணாம கண்டு களிக்க வேண்டியவை.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
    காவேரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் நான்காவது பெரிய நகரம் திருச்சிராப்பள்ளி. திருச்சி மலைக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுளள் கட்டிடங்கள் பாரம்பரியம் மற்றும் நவீனத்துவத்தின் கலவையாக காட்சியளிப்பவை. கோட்டையைத் தவிர ஏராளமான திருக்கோவில்கள், அருங்காட்சியகம், தர்கா, புகழ்பெற்ற கிறிஸ்தவ ஆலயம், பசுமையும் அழகும் நிறைந்த இயற்கையான மலைகள் என பல்வேறு இடங்கள் உள்ளன.

    திருச்சி மலைக்கோட்டை கோயில்

    திருச்சியின் மிகப்புகழ் பெற்ற அடையாளச் சின்னமாக விளங்குவது மலைக்கோட்டை. இது உச்சிப்பிள்ளையார் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. 275 அடி உயர மலையின் மேல் இந்த கோவில் அமைந்துள்ளது. மலையின் பாதி தூரத்தில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தாயுமானவர் சுவாமி கோவில் உள்ளது.

    மலைக்கோட்டை


    இந்த உச்சி பிள்ளையார் கோவிலில் 100 கால் மண்டபம், விமானம், மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் உள்ளன. மலை உச்சியிலிருந்து ஸ்ரீரங்கம் கோவில், காவேரி ஆறு, கொள்ளிடம் ஆறு, திருவானைக்காவல் கோவில் ஆகியவை நன்கு புலப்படும். திருச்சி நகரின் அழகை இங்கிருந்து காணலாம்.

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்

    156 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீரங்கம் கோவில் 108 வைணவ திருத்தலங்களுள் முதன்மையானதும் முக்கியமானதும் ஆகும். இந்தக் கோவில் திருவரங்க திருப்பதி, பெரியகோவில், பூலோக வைகுண்டம், போக மண்டபம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோவிலைச் சுற்றி அரண் போன்ற சுற்றுச் சுவர்கள் உள்ளன.

    ஸ்ரீரங்கம் கோவில்


    இங்கு கம்பீரமான பெரிய 21 கோபுரங்கள் இருக்கின்றன. காவேரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கு நடுவே தீவு போல உள்ள நிலப்பரப்பில் இந்த கோவில் அமைந்துள்ளது. சோழர்கள், சேரர்கள், பாண்டியர்கள், விஜயநகர அரசர்கள் மற்றும் மதுரை நாயக்கர்களின் ஆட்சியில் இந்த கோவில் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து கம்பீரமாக காட்சியளிக்கிறது.

    சமயபுரம் மாரியம்மன் கோவில்

    திருச்சியிலிருந்து 15 கி.மீ தொலைவிலுள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் புகழ் பெற்று அம்மன்கோவிலாக திகழ்சிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் இங்கே வந்து செல்கின்றனர். சமயபுரம் பண்டைய காலத்தில் சோழர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த ஊர் முன்னாளில் கண்ணனூர், கண்ணபுரம், விக்கிரமபுரம் மற்றும் மாகாளிபுரம் என அழைக்கப்பெற்றது. தற்போதுள்ள கோவில் விஜயராய சர்க்கரவர்த்தியால் கட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இங்கே ஏப்ரல்-மே மாதங்களில் சிறப்பாக தேரோட்டத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    ஜம்புகேஸ்வரர் திருக்கோயில்

    இந்தக் கோவில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ தொலைவிலும் உள்ளது. சிவ தலமான ஜம்புலிங்கேஸ்வர் - அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் திருவானைக்கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. நீரைக் குறிக்கும் பஞ்சபூத ஸ்தலமான இக்கோவில் அப்பு ஸ்தலம் என்றும் இங்குள்ள சிவலிங்கம் அப்புலிங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. கருவறையில் உள்ள சிவலிங்கம் உள்ளே பாயும் சிறிய ஊற்றில் மூழ்கி இருக்கிறது.

    முற்காலத்தில் யானை ஒன்று புனித ஜம்பு மரத்தின் கீழே நின்று சிவபெருமானை வணங்கியதால் இந்தக் கடவுள் ஜம்புகேஸ்வரர் எனப் பெயர் பெற்றார் என்று சொல்லப்படுகிறது. திருவானைக்காவல் சென்னை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சிக்கும் திருவரங்கத்திற்கும் நடுவே உள்ளது.

    புனித மரியன்னை பேராலயம்

    புனித மரியன்னை பேராலயம் திருச்சியில் மேலப்புதூரில் அமைந்திருக்கிறது. இந்த பேரலாயம் மிகவும் பழமை வாய்ந்த பேராலயங்களில் ஒன்றாகவும், திருச்சியிலுள்ள பிற பேராலாயங்களுக்கு தலைமையிடமாகவும் விளங்குகிறது. 175 ஆண்டு பழமை வாய்ந்த இந்த பேராலயம் 2015ல் புதுப்பொழிவுடன் மீண்டும் வடிவமைக்கப்பட்டது.

    புனித மேரியம்மை பேராலயம்


    திருச்சிராப்பள்ளியில் உள்ள புனித மரியன்னை பேராலயம் தூத்துக்குடி, மதுரை, பாளையங்கோட்டை, சிவகங்கை மற்றும் திண்டுக்கல்லில் உள்ள பேராலயங்களுக்கு தலைமையிடமாக இருக்கிறது. இந்த பேராலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறும்.

    நாதிர்ஷா தர்கா

    இஸ்லாமியர்களின் புனிதத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது இந்த தர்கா 1,000 ஆண்டு பழமையானது. இங்கு “உர்ஸ்” என்ற திருவிழா வெகுச்சிறப்பாக நடைபெறும். தமிழ்நாட்டின் பல இடங்களில் இருந்தும் மக்கள் இங்கு நடைபெறும் திருவிழாவைக் காண வருகை புரிவர்.

    முக்கொம்புஅணை

    முக்கொம்பு அணைக்கட்டு, காவிரி ஆற்றினைத் தடுத்து காவேரி, கொள்ளிடம் என இரண்டு ஆறாகப் பிரித்துவிடப்படுகிறது. ரம்மியமான பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் பசுமையான மரங்கள் நிறைந்த சுற்றுலாத் தலமாகும். இந்த முக்கொம்பு அணை திருச்சி – கரூர் சாலையில் அமைந்துள்ளது.

    முக்கொம்பு அணை


    வண்ணத்துப்பூச்சி பூங்கா

    ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காக்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. 25 ஏக்கர் பரப்பளவில் சுமார் 8.00 கோடி மதிப்பீட்டில் காவிரி ஆற்றங்கரை ஓரமாக அமைந்துள்ளது. நட்சத்திரவனம் ஒரு முக்கிய சிறப்பம்சமாகும். இந்த பூங்கா திறக்கப்படும் போதெல்லாம் பொதுமக்களால் மரங்கன்றுகள் இலவசமாக நட்டு வைக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள இந்த வண்ணத்துப்பூச்சி பூங்காவை மற்றக்காமல் கண்டு களியுங்கள்.

    கோளரங்கம்

    அண்ணா அறிவியல் கோளரங்கத்தில் தினந்தோறும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிவியல் விளக்கக் காட்சிகள் திரையிடப்படும். காட்சி நேரம் (தமிழ்) : காலை 10.30 மணி, மதியம் 1.00 மணி, மாலை 3.30, 4.45 மணி. ஆங்கிலம் : காலை 11.45 மணி, மதியம் 2.15 மணி. நுழைவுக் கட்டணம் - பெரியவர்கள்: ரூ.12. 12 வயதிற்கு கீழே குழந்தைகளுக்கு 6 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

    அரசு அருங்காட்சியகம்

    திருச்சி அரசு அருங்காட்சியகம் 1983ம் ஆண்டு இராணுவக் குடியிருப்பு வளாகத்தில் தொடங்கப்பட்டது. பின்னர் 1997ல் டவுன்ஹால் வளாகத்தில் உள்ள நாயக்கர் ராணி மங்கம்மாள் தர்பார் ஹாலுக்கு மாற்றப்பட்டது. இங்கு காட்சிக்காக 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழங்காலப் பொருட்கள், கல்வெட்டுக்கள், கற்சிலைகள், சிற்பங்கள், போர்த்தளவாடங்கள், பெருங்கற்காலப் பொருட்கள், பழங்கால நாணயங்கள் போன்றவற்றைக் காணலாம். பார்வை நேரம் : காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை. நுழைவுக் கட்டணம் - பெரியவர்களுக்கு 5 ரூபாயும், சிறியவர்கள் 3 ரூபாயும் வெளிநாட்டவர்களுக்கு 100 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

    பச்சமலை

    துறையூர் அருகே அமைந்துள்ள பசுமை மலைத்தொடர்தான் பச்சமலை. இயற்கையை ரசிக்க இது மிகச்சிறந்த இடமாக அமைந்துள்ளது. இங்கே எருமைப்பள்ளி அருவி, கோரையாறு அருவி உள்ளிட்ட பல அருவிகள் உள்ளன. இங்கு வசிக்கும் பழங்குடி மக்களின் பழக்கவழக்கங்களும், வாழ்க்கைமுறைகளும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் அளவில் அமைந்துள்ளது.

    புளியஞ்சோலை

    வனப்பகுதியில் மலை அடிவாரத்தில் நீரோடைகளும், சிற்றருவிகளும் நிறைந்த அழகான சுற்றுலா தலம். கொல்லிமலைகளின் உச்சியில் ‘தட்சினகங்கா’ என்று அழைக்கப்படும் ஆருவியின் மருத்துவ குணங்கள் நிறைந்த நீர், புளியஞ்சோலையை அடைந்து, காவிரியின் துணை நதியான கொள்ளிடத்தில் இணைகிறது. இது ஒரு வற்றாத நீரோடையாகுக இருப்பது சிறப்பு. இந்த நீரில் குளித்து மகிழலாம்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Trichy

    அடுத்த செய்தி