Home /trichy /

Trichy News : சாலையில் திடீர் பள்ளங்கள்.. பாதாள சாக்கடை திட்டப் பணிகளால் அலறும் திருச்சி மக்கள்...

Trichy News : சாலையில் திடீர் பள்ளங்கள்.. பாதாள சாக்கடை திட்டப் பணிகளால் அலறும் திருச்சி மக்கள்...

திருச்சி

திருச்சி

Trichy Latest News : திருச்சி மாநகராட்சியில் போதிய கவனிப்பு இல்லாமல் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகள்.  மழைக்காலங்களில் சாலைகளில் ஆங்காங்கே திடீர் திடீர் பள்ளம் விழுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி..

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் பாதுகாப்பு இல்லாமல் பல மாதங்களாக அப்படியே உள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் மாநகராட்சியின் 40-வது வார்டுக்கு உட்பட்ட பகவதிபுரம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழியில் சாகர் பானு என்பவர் தவறி விழுந்துள்ளார். குழியில் தண்ணீர் இருந்ததால் மூதாட்டி சாகர் பானு நீரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து அடுத்த 2 நாட்களில் திருச்சி காஜாமலை பகுதியில் இருந்து கலெக்டர் பங்களா வழியாக மன்னார்புரம் செல்லும் சாலையின் இடதுபுறம் காஜாமலை பஸ் நிறுத்தம் அருகே திடீரென பயங்கர சத்தத்துடன் சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. பள்ளம் ஏற்பட்ட இடத்தில் இருந்து சாலையில் ஆங்காங்கே சில அடிதூரத்துக்கு வெடிப்பு ஏற்பட்டது. பூகம்பம் வந்ததைபோல் திடீரென ஏற்பட்ட பள்ளத்தை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்..


இதற்கிடையே பாதாள சாக்கடை மெயின் குழாய் செல்லும் திறப்பானில் இருந்து சாக்கடை நீர் குபு, குபுவென சாலையில் ஏற்பட்ட பள்ளம் வழியாக வெளியே வந்து தெருவில் ஓடியது. இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று இரும்பு தடுப்புகளை வைத்து அந்த வழியாக கார் மற்றும் கனரக வாகனங்கள் செல்லாமல் தடுத்து நிறுத்தினர். இருசக்கர வாகனங்கள் மட்டும் சாலையின் ஒரு ஓரமாக அனுமதிக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

திருச்சி மாநகராட்சியை மேம்படுத்துவதற்காக பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து திருச்சி மாநகராட்சி முழுவதும் பாதாள சாக்கடைகள் அமைக்கும் பணியும், சாலைகள் சீரமைக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் இப்பணிகள் முழுமையாக நடைபெறாமல் ஆங்காங்கே சாலைகள் நடுவே குழிகளை தோண்டி அப்படியே சில மாதங்கள் விட்டு விடுவதால் பல நேரங்களில் விபத்துகளும், உயிர்பலிகளும் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சாலையில் ஓடும் கழிவுநீர்..


கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை பணி நடைபெற்று வரும் பகுதிகளில் சாலைகளில் திடீர் திடீர் பள்ளம் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் சாலையில் பயணம் செய்து வருவதாக கூறுகின்றனர்..

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே திருச்சி மாநகராட்சி உடனடியாக இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து தரமாகவும் பாதுகாப்பாகவும் பாதாள சாக்கடை அமைக்கும் பணியையும் சாலைகள் சீரமைக்கும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Published by:Arun
First published:

Tags: Local News, Trichy

அடுத்த செய்தி