Home /trichy /

அரிஸ்டோ மேம்பாலத்தை எப்ப தான் சார் கட்டி முடிப்பீங்க.. எதிர்பார்ப்பில் திருச்சி மக்கள்

அரிஸ்டோ மேம்பாலத்தை எப்ப தான் சார் கட்டி முடிப்பீங்க.. எதிர்பார்ப்பில் திருச்சி மக்கள்

திருச்சி

திருச்சி அரிஸ்டோ பாலம்

Trichy Aristo Bridge | பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்து 2 மாதங்கள் ஆகிய நிலையில் திருச்சி அரிஸ்டோ மேம்பால 2ம் கட்ட பணிகள் இன்னமும் துவங்கப்படாமல் இருந்து வருவது பொதுமக்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
திருச்சி மாநகரில் அகலம் குறைந்த திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலத்திற்கு பதிலாக, புதிய மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. ரூ.81 கோடி திட்ட மதிப்பில் 2 கட்டங்களாக பாலத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது.

முதல் கட்டமாக அரிஸ்டோ ரவுண்டானாவை மையமாக வைத்து திண்டுக்கல் சாலை, மத்திய பஸ் நிலைய பகுதி, ஜங்ஷன் ரெயில் நிலையம், மதுரை சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் பாலம் கட்டுமான பணிகள் முடிவடைந்து உள்ளன. இந்நிலையில் சென்னை-மதுரை சாலையை இணைக்கும் வகையிலான மன்னார்புரம் பகுதியில் ராணுவத்திற்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த இடத்தை கொடுக்க ராணுவ அமைச்சகம் மாற்று இடம் கேட்டது. ஆனால், ராணுவ அமைச்சகம் கேட்ட இடத்தில், மாற்று நிலம் ஒதுக்க தமிழக அரசு கொடுக்க தாமதம் ஏற்பட்டது.

எனவே, ராணுவ இடம் ஒப்படைக்கப்படாததால் அந்த பகுதியில் மட்டும் பாலம் அமைக்கும் பணி இன்னும் நிறைவடையாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது. அதே வேளையில் முதல்கட்ட பணியில் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள ஒரு பகுதியை அப்போதைய  தமிழக முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 17-ந் தேதி அன்று சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து புதிதாக திறக்கப்பட்ட பாலத்தில் கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் செல்ல தொடங்கின. இந்த பாலத்தில், மதுரை சாலையில் கிராப்பட்டி பகுதியில் இருந்து வாகனங்கள் ஏறி, இறங்கவும், மத்திய பேருந்து நிலையம், திண்டுக்கல் சாலை கருமண்டபம் ஆகிய வழிகளில் ஏறி, இறங்கவும் முடியும். அதே வேளையில் ஜங்ஷன் ரெயில் நிலையம் வழித்தடத்தில் வாகனங்கள் இறங்க மட்டுமே முடியும்.

ஒப்புதல் கொடுத்த பாதுகாப்புத்துறை:

இந்த நிலையில் அரிஸ்டோ மேம்பாலத்தில் மன்னார்புரம் செல்லும் வழியில் விடுபட்ட பாலப் பணிகளுக்கான இடத்தினை கொடுக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. அதில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி தற்போது பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ன.

திருச்சி வந்த பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் விரைவில் விடுபட்ட பாலப் பணிகள் தொடங்கும் என்றார்.
அரிஸ்டோ மேம்பாலத்தில் விடுபட்ட பாலம் கட்டுவதற்கான பணிகள் கடந்த மே மாதம் 13 ஆம் தேதி பூமி பூஜையுடன் தொடங்கியது. முதல் கட்டமாக பாலம் அமைய உள்ள இடத்தில் நின்றிருந்த மரங்கள் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களால் வெட்டி அகற்றி அப்புறப்படுத்தப்பட்டது. பின்பு இராணுவத்திற்கு சொந்தமான இடத்தை சுற்றி தடுப்பு சுவர் எழுப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக எந்த பணிகளும் நடைபெறவில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். விரைவில் பாலம் பணிகள் விரைவில் முடிக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Published by:Arun
First published:

Tags: Local News, Trichy

அடுத்த செய்தி