Home /trichy /

திருவானைக் கோவில் யானைக்கு பிறந்த நாள்.. திருச்சி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்..

திருவானைக் கோவில் யானைக்கு பிறந்த நாள்.. திருச்சி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்..

திருச்சி

திருச்சி

Trichy District: திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்.

  திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

  வங்கி எழுத்தர் பணிக்கு தமிழில் தேர்ச்சி கட்டாயமில்லை என கூறி தமிழ்நாடு இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் ஒன்றிய அரசின் சதி செயலை கண்டித்து திருச்சி மரக்கடை அருகே திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  குழந்தைகளுக்கான இருதய பரிசோதனை முகாம் 

  திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், குழந்தைகளுக்கான இருதய பரிசோதனை முகாம் மற்றும் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு நடைபெற்ற இருதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட கடந்த ஓராண்டின் சாதனைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவரின் செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.

  திருவானைக் கோவில் யானைக்கு பிறந்த நாள் விழா

  பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இக்கோவிலில் அகிலா என்ற யானை, சுவாமி, அம்பாள் திருமஞ்சன அபிஷேகத்திற்கு புனிதநீர் எடுத்து வருவது, உச்சிகால பூஜை மற்றும் சுவாமி புறப்பாடு உள்ளிட்ட உற்சவங்களில் ஈடுபட்டு கடந்த 11 வருடங்களாக இறை பணியாற்றி வருகிறது. யானை அகிலா 24.5.2002-ல் அசாம் மாநிலத்தில் பிறந்தது. கடந்த 6.12.2011-ல் ஒரு தனியார் டிரஸ்ட் சார்பில் திருவானைக் கோவிலுக்கு வழங்கப்பட்டது. அகிலாவுக்கு கோவில் நந்தவனத்தில் நடைபாதை, நீச்சல் குளம் மற்றும் சேற்று மண்ணில் குளிப்பதற்காக 1,200 சதுர அடியில் சேற்று குளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அகிலாவுக்கு நேற்று இருபதாவது பிறந்த நாள் என்பதால் சிறப்பு அலங்காரத்தில் காணப்பட்டது. மேலும் மாலை நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் அகிலாவிற்கு அருகம்புல் மாலை அணிவிக்கப்பட்டு கஜ பூஜை செய்யப்பட்டது. பின்னர் பழங்கள், இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன், அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  ரவுடி கைது

  திருச்சி உறையூர் நெசவாளர்காலனியை சேர்ந்தவர் மணிகண்டன். சம்சா வியாபாரி. இவரிடம் அரிவாளை காட்டி மிரட்டி ரூ.3 ஆயிரத்தை பறித்து சென்ற சர்க்கார்பாளையத்தை சேர்ந்த ரவுடி ஜெகன் ( 27) என்பவரை உறையூர் போலீசார் கைது செய்தனர். ஜெகன் மீது திருவெறும்பூர் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  அல்லித்துறை கிராமத்தில் உள்ள செவிட்டு மாரியம்மன் கோவில் திருவிழா 

  சோமரசம்பேட்டை அருகே அல்லித்துறை கிராமத்தில் உள்ள செவிட்டு மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 8-ந் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது, விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று தேர் திருவிழா நடைபெற்றது. அம்மன் தேரில் எழுந்தருளி வீதி உலா வந்தார். விழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் மற்றும்ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

  அரசு பஸ்சில் தவறவிட்ட ரூ.12 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது

  சென்னையை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 35). இவர், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். திருச்சி தில்லைநகரில் உள்ள மாமனார் வீட்டிற்கு குடும்பத்துடன் வந்திருந்தார். நேற்று முன்தினம் திருச்சி கண்டோன்மெண்ட் பஸ் நிறுத்தத்தில் குடும்பத்தோடு சத்திரம் செல்வதற்காக பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த அரசு பஸ்சில் ஏறி குடும்பத்தோடு சத்திரம் பஸ் நிலையத்தில் இறங்கியுள்ளார். இந்நிலையில் அந்த பஸ்சை இயக்கி வந்த டிரைவர் ஜெகநாதன் (45), கண்டக்டர் ராஜா (30) ஆகிய இருவரும் பஸ்சை சுத்தம் செய்வதற்காக பார்த்துள்ளனர். அப்போது பஸ்சில் ஒரு மணி பர்ஸ் கிடந்தது. அதை எடுத்துப் பார்த்தபோது அவற்றில், ரூ.12 ஆயிரம் மற்றும் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவை இருந்தன. இதைத் தொடர்ந்து பணத்தையும், பொருட்களையும் டிரைவர் மற்றும் கண்டக்டர் சேர்ந்து கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் அறிவழகன் தலைமையில் நடைபெற்ற விசாரணையில், அந்த பணம் மற்றும் மணிபர்ஸ் கோபிநாத்துக்கு சொந்தமானது என தெரிய வந்தது. பின்னர் அவரை போலீசார் வரவழைத்து ரூ.12 ஆயிரம் மற்றும் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவைகளை ஒப்படைத்தனர். அரசு பஸ்சின் டிரைவர் ஜெகநாதன், கண்டக்டர் ராஜா ஆகியோரின் நேர்மையை போலீசார் பாராடினர்.

  லால்குடி அருகே தனியார் ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 2,640 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

  ரேஷன் அரிசி மூட்டைகள் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமணமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் அரிசி ஆலையில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
  இதையடுத்து, மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்பையா உத்தரவின் பேரில், லால்குடி தாசில்தார் சிசிலினா சுகந்தி, லால்குடி வட்ட வழங்கல் அலுவலர் விஜய் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அரிசி ஆலைக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு முழு ரேஷன் அரிசி 22 மூட்டைகளும், குருணை ரேஷன் அரிசி 66 மூட்டைகளும் என 88 மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த மூட்டைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியின் மொத்த எடை 2 ஆயிரத்து 640 கிலோ ஆகும்.
  மேலும் விசாரணையில் அந்த அரிசி ஆலை லால்குடியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அந்த அரிசி ஆலைக்கு அதிகாரிகள் `சீல்' வைத்தனர். இந்த சம்பவத்தால் லால்குடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  செய்தியாளர் - என்.மணிகண்டன்.
  Published by:Arun
  First published:

  Tags: Trichy

  அடுத்த செய்தி