திருச்சி ஸ்ரீரங்கத்தின் பிரதான அடையாளமாக விளங்கும் இமாம் பசந்து மாம்பழத்தின் விற்பனை களைகட்டி வருகிறது. 'மாம்பழங்களில் அரசன்' என்று அழைக்கப்படும் இமாம் பசந்து மாம்பழம், ஸ்ரீரங்கத்தின் தனித்த அடையாளங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஸ்ரீரங்கம் காவிரி மற்றும் கொள்ளிடக்கரை பகுதிகளில் அதிகமாக விளைகின்ற இமாம் பசந்து மாம்பழங்கள், தனித்த சுவை காரணமாக, மாம்பழ உலகில் தன்னிகரற்று திகழ்கின்றன.
இதற்கு காவிரிக் கரையோர மணலும், தண்ணீரும் தான் காரணம் என்றும், இவ்வகை மரங்களை வேறு எங்கு நட்டு வளர்த்தாலும் இந்த அளவுக்கு மாம்பழங்களின் சுவை இருப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.
செவிவழிச் செய்தி
இமாம் என்றால் முஸ்லீம் துறவி; பசந்து என்றால் கல்கண்டு. இமாம்பசந்து என்ற உருதுச் சொல்லுக்கு ஒரு செவிவழிக் கதையும் இப்பகுதியில் கூறப்படுகிறது.
அதாவது, முஸ்லிம் துறவி ஒருவர் ஸ்ரீரங்கம் பகுதிக்கு வந்தபோது, இங்கு அதிகமாக விளையும் இரண்டு அதீத சுவை கொண்ட மாம்பழக் கன்றுகளை ஒட்டுமுறையில் இணைத்துள்ளார். காவிரி, கொள்ளிக்கரை பகுதியில் நட்டு வைத்து வளர்த்துள்ளார். இந்த மரக்கன்றில் விளைந்த மாம்பழமே இமாம்பசந்து.
எனவே, கல்கண்டு போல சுவைக் கொண்ட மாம்பழம் 'பசந்து' என்றும், அவரின் பெயரை இணைத்து, இமாம்பசந்து என்றும் அழைக்கப்படுகிறதாம். இக் கதைக்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை.
விற்பனை தூள்
திருச்சி ஸ்ரீரங்கம்- அம்மா மண்டபம் இணைப்புச் சாலையில், காவிரிப் பாலத்தையொட்டி, மாம்பழச்சாலை என்ற பகுதி உள்ளது. ஸ்ரீரங்கத்தில் விளைகின்ற இமாம்பசந்து உட்பட அனைத்து வகையான மாம்பழங்களும் இங்கு ஆண்டுதோறும் விற்பனைக்கு வைக்கப்படுகிறது. அனைத்து வகையான மரக்கன்றுகளும் இங்கு கிடைக்கும். எனவே, இந்த பகுதிக்கு மாம்பழச்சாலை என்று பெயர் வந்திருக்கிறது.
தற்போது, ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை கடைகளில், விற்பனையில் வசூல் சக்கரவர்த்தியாக இமாம்பசந்து மாம்பழம் கலக்கி வருகிறது. வரத்து அதிகமாக இருப்பதால், தரத்தை பொறுத்து, 80 ரூபாயிலிருந்து, 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க : வாட்டி வதைக்கும் வெயிலுக்கு நடுவே உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 5 உணவுகள்.!
இதே சீசன் இல்லாத நாட்களில் இமாம்பசந்து மாம்பழத்தின் விலை கிலோ, 300 முதல், 400 வரை, இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மாம்பழங்களுக்கு சேலம் தான் பேமஸ் என்றாலும் கூட, ஸ்ரீரங்கத்தில் மட்டுமே விளையும் இந்த இமாம்பசந்து தான், மாம்பழங்களின் அரசனாக வலம் வருகிறது. மேலும், இங்கிருந்து சேலம் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
ஸ்ரீரங்கத்தில் விளையும், பங்கனபள்ளி, மல்கோவா, செந்தூரம், கல்லாமணி (கிளிமூக்கு) உள்ளிட்ட மாம்பழ வகைகளும் இங்கு விற்பனை செய்யப்பட்டாலும், இமாம்பசந்து மாம்பழமே சுவையிலும், விற்பனையிலும் தொடர்ந்து முந்துகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.