முகப்பு /செய்தி /திருச்சி / அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்தக்கூடாது - ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராக அதிமுகவினர் காவல்துறையில் புகார் மனு..

அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்தக்கூடாது - ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராக அதிமுகவினர் காவல்துறையில் புகார் மனு..

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

அதிமுகவிற்கும் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை' என்று பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் உறுதியாகி இருக்கிறது என அதிமுகவினர் அளித்த புகாரில் தெரிவித்துள்ளனர்.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சியில் ஓ.பன்னீர் செல்வம் நடத்தும் மாநாட்டில் அதிமுக கொடிகளை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர், திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி பொன்மலை 'ஜி' கார்னரில், ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில், வரும், 24ம் தேதி பிரம்மாண்டமான மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. மாநாட்டு பந்தலில், அதிமுக கொடிகள் மற்றும் இரட்டை இலை சின்னம் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக மூத்த நிர்வாகிகள் பலமுறை எச்சரிக்கை விடுத்தும், அதிமுக கொடிகள் அகற்றப்படுவதாக தெரியவில்லை.

இந்நிலையில், அதிமுக தெற்கு மாவட்டச் செயலாளர் குமார், வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி, மாநகர் மாவட்ட அவைத் தலைவர் ஐயப்பன், மாநில எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட, 300க்கும் மேற்பட்டோர் இன்று திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தின் முன் திரண்டனர். அவர்களில், '10 பேர் மட்டுமே சென்று ஆணையரிடம் புகார் கொடுங்கள்' என்று முன்புற கேட்டில் நிறுத்தி போலீசார் வலியுறுத்தினர். ஆனால், அதை அவர்கள் கேட்காமல், 200க்கும் மேற்பட்டோர் அலுவலகத்திற்குள் புகுந்தனர்.

இதையும் படிக்க : ஆணவக் கொலைக்கு எதிரான சட்டம் வேண்டும் - தமிழக அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

இதனால் போலீசார் - அதிமுகவினர் இடையே லேசான தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. சற்று நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து ஆணையர் அலுவலகம் முகப்பு கேட் சாத்தப்பட்டது. ஆணையர் அலுவலகத்திற்குள் நுழைந்த, 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர், எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தியும், ஓ.பன்னீர் செல்வத்தை திட்டியும் கோஷமிட்டனர்.

தகவலறிந்த துணை ஆணையர் ஸ்ரீதேவி சம்பவ இடத்திற்கு வந்து கூட்டத்தை ஒழுங்குபடுத்தும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும் மூடப்பட்டிருந்த கேட்டையும் திறக்கும்படி உத்தரவிட்டார். அதையடுத்து, மாவட்ட செயலாளர்கள் குமார், பரஞ்ஜோதி, முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, பூனாட்சி, வளர்மதி உள்ளிட்டோர், மாநகர காவல்துறை ஆணையர் சத்திய பிரியாவை நேரில் சந்தித்து புகார் கொடுத்தனர்.

தெற்கு மாவட்ட செயலாளர் குமார் கொடுத்துள்ள புகாரில், 'அதிமுகவிற்கும் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை' என்று பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் உறுதியாகி இருக்கிறது. ஆனால் அதையும் மீறி அவர், அதிமுக கட்சி பெயரையும், அதிமுக கொடிகள் மற்றும் இரட்டை இலை சின்னத்தை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்.

எனவே, ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 1860 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவு 2000 ஆகியவற்றின்படி வழக்குப்பதிந்து, அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: ADMK, Edappadi Palaniswami, O Pannerselvam, Tamil News