திருச்சி மாநகரில் நீதிமன்றம் அருகே உள்ள உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில், அதிமுக ஆட்சி காலத்தின்போது புதுமை முயற்சிகள் திட்டத்தின் கீழ் எம்.ஜி.ஆர். சிலையிலிருந்து தென்னூர் அண்ணாநகர் பாலம் வரை 780 மீட்டர் தொலைவுக்கு நடைபயிற்சி, சைக்கிள் பயிற்சிக்காக பேவர் பிளாக் மூலம் இரு வழித்தடங்கள் அமைக்கப்பட்டன.
மரங்கள் நடப்பட்டு பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும் இந்த சாலைகளின் அழகை ரசித்து நடைபயிற்சி மேற்கொள்ள அதிக அளவில் பொதுமக்கள் இங்கு வருவது உண்டு. மேலும் உடற்பயிற்சிக்கான உபகரணங்களும் திறந்தவெளியில் இங்கு வைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது சென்னைக்கு பிறகு இந்த சாலையில் தான் அதிக அளவில் மக்கள் குவிந்து போராடினர்.
இதனாலேயே இந்த சாலை மக்களிடையே ஜல்லிக்கட்டு சாலை என்று பெயர் பெற்றது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உய்யக்கொண்டானின் மறுகரையில் ரூ.1.90 கோடியில் கடந்தாண்டு மேலும் ஒரு நடைபாதை அமைக்கப்பட்டது. பொதுமக்களை கவரும் வகையில் ஜல்லிக்கட்டு காளை சிலை, மின் அலங்காரங்களுடன் கூடிய மீன் வடிவிலான நீரூற்று, சுவர்களில் வண்ணமயமான ஓவியங்கள், அமர்ந்து ஓய்வெடுக்க ஆங்காங்கே இருக்கைகள் போன்றவை அமைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இந்த 2 நடைபாதைகளையும் இணைக்கும் வகையில் உய்யக்கொண்டான் வாய்க்கால் மீது அழகிய ரவுண்டானா அமைக்க திருச்சி மாநகராட்சி முடிவு செய்து உள்ளது. கட்டிட பொறியாளர்கள் உதவியுடன் தற்போது அதற்கான பணிகளில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
இதுகுறித்து திருச்சி மாநகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது, “உய்யக்கொண்டான் வாய்க்கால் மீது தற்போது உள்ள பாலத்தில் இருந்து சுமார் 100 மீ தொலைவில் கிழக்கு பகுதியில் புதிய ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரவுண்டானாவின் மையப்பகுதியில் பொதுமக்கள் அமர்ந்து ஓய்வெடுக்க இருக்கைகள், வட்டவடிவிலான படிக்கட்டுகள், சிறிய அளவிலான நிகழ்ச்சிகளை நடத்தும் வகையில் கட்டமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன. மேலும் வாய்க்கால் மீது 2 அடுக்கு நடை பயிற்சி தளங்கள் அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
ரவுண்டானா அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த அழகிய ரவுண்டானா நிச்சயம் பொதுமக்களை கவரும் என்பதில் ஐயமில்லை.
செய்தியாளர் : மணிகண்டன் - திருச்சி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Trichy