திருச்சி மாவட்டத்தில் ஆதரவற்ற பிணங்களை நல்லடக்கம் செய்யும் தம்பதியினர்.
மரணம் இயற்கையானது தவிர்க்க முடியாதது யாராலும் விரும்பப்படாது. ஆனாலும் மரணமானது இயற்கையாகவும் நோய்வாய்ப்படும் தற்கொலைகளும் தண்டனையாகும் விபத்துக்களினாலும் ஏதாவது ஒரு வடிவத்தில் மரணம் நிகழும்.
மனிதனுக்கு பிறப்பு ஒன்று இருந்தால் இறப்பு கண்டிப்பாக இருக்கும்.
திருச்சி மாவட்டத்தில் பல்வேறு சமூக ஆர்வலர்கள் பல்வேறு சமூக பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதனடிப்படையில் திருச்சி புத்தூர் பகுதியில் வசிக்கும் விஜயகுமார் மற்றும் அவரது மனைவி சித்ரா இருவரும் இணைந்து பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர்.
சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆதரவற்றோர் மற்றும் சாலையோர முதியோர்களுக்கு உணவு வழங்கி வந்தனர். இந்நிலையில் காலப்போக்கில் அவர்கள் உணவு வழங்கி வந்த முதியவர்கள் வயது மூப்பு காரணமாக ஒரு சிலர் இறந்து விட்டனர்..
இந்தநிலையில் விஜயகுமார் காவல் நிலையத்தை அணுகி பெயர் விலாசம் தெரியாத நபர்களை நாங்கள் நல்லடக்கம் செய்யலாமா என்று கேட்டுள்ளார்.
அதனடிப்படையில் சுமார் ஐந்து வருடங்களாக விஜயகுமார் மற்றும் சித்ரா இணைந்து அனாதை பிரேதங்களை அரசு அனுமதியோடு தங்கள் சொந்த செலவில் நல்லடக்கம் செய்து வருகின்றனர். கொரோனா காலகட்டத்தில் இந்தப் பணியை அதிகமாக செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு மாதத்தில் 4 முதல் 5 அனாதைப் பிணங்களை அடக்கம் செய்து வருகின்றனர். மேலும் விஜயகுமாரும் அவரது மனைவியும் கண் தானம் செய்து பலருக்கு எடுத்துக்காட்டாய் விளங்கி வருகின்றனர்.
செய்தியாளர் -
என்.மணிகண்டன்
உங்கள் நகரத்திலிருந்து(Trichy)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.