Home /trichy /

Trichy : திருச்சியில் தமிழுக்காக உயிர்நீத்த தியாகி சின்னச்சாமி கீழப்பழுவூர் சின்னச்சாமி நினைவிடத்தின் அவலம்..

Trichy : திருச்சியில் தமிழுக்காக உயிர்நீத்த தியாகி சின்னச்சாமி கீழப்பழுவூர் சின்னச்சாமி நினைவிடத்தின் அவலம்..

திருச்சி

திருச்சி

Trichy District : தமிழ்நாட்டில் முதன் முதலில் தமிழ் மொழிக்காக உயிர் நீத்த கீழப்பழுவூர் சின்னச்சாமியின் நினைவிடம் பராமரிப்பின்றியும், அருகே குப்பைகள் கொட்டப்பட்டும் வரும் அவலம்.

  தமிழகத்தில் முதன் முதலில் தமிழ் மொழிக்காக உடலில் தீ வைத்துக் கொண்டு உயிர் நீத்த மொழிப்போர் தியாகி சின்னச்சாமியின் நினைவிடம் திருச்சியில் அமைந்துள்ளது. அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர்-ஐ சேர்ந்த ஆறுமுகம், தங்கம்மாள் ஆகியோருக்கு பிறந்தவர் தான் இந்த சின்னசாமி.

  இவர் ஐந்தாம் வகுப்புவரை படித்துவிட்டு உழவுத் தொழிலை செய்து வந்தார். சின்னசாமி நூல்கள் படிப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். பின்னர் சின்னசாமிக்கு திருமணம் நடைபெற்றது. அவரது மனைவியின் பெயர் கமலம், இவருக்கு ஒரே மகள் திராவிடச்செல்வி ஆவார்.

  இப்படி காலங்கள் போய்க்கொண்டிருக்க இந்தியாவில் 1965-ல் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வரும் தருவாயில் நாடு முழுவதும் இந்தியே ஆட்சி மொழி ஆக்க வேண்டும். ஆங்கில மொழி நீடிக்கக் கூடாது என்று வட மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார்கள். அதற்கு போட்டியாக ஆங்கிலம் நீடிக்க வேண்டும் என்று இந்தி பேசாத தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி-க்களும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார்கள்.

  முதலில் தமிழுக்காகத் தொடங்கிய போராட்டம் பிறகு, இந்தி பேசும் மாநிலங்கள் இந்தி பேசாத மாநிலங்கள் என்று போராட்டம் வெடிக்க தொடங்கியது.

  இந்தச் சூழ்நிலையில் நேரு மறைந்து பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி பொறுப்பேற்றார். ஆனால் அவரே இந்தி திணிப்பு கிடையாது என்ற நேருவின் உறுதிமொழிக்கு மாறாகச் செயல்படத் தொடங்கினார். அப்போது உள்துறை அமைச்சராக இருந்த குல்ஸாரி லால் நந்தா, அரசியல் சட்டம் 8வது அட்டவணையில் உள்ளபடி இந்தி மொழி மட்டுமே அரசாங்க மொழியாக இருக்கும் என்ற பகீர் அறிவிப்பு செய்தார். நாடாளுமன்றத்திலேயே எம்.பிக்களிடையேமோதல் வெடித்தது. அதனால் தமிழகம் கொந்தளித்தது. இந்தியை ஒருபோதும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரைச் சேர்ந்த தியாகி சின்னசாமி 1964ம் ஆண்டு ஜனவரி 25ம் நாள் திருச்சி ரயில் நிலையத்தில் அதிகாலையில்பெட்ரோலை ஊற்றி கொண்டு தமிழ் வாழ்க, தமிழ் வாழ்க, இந்தி ஒழிக என கத்தியவாறேஇந்தி திணிப்பை கண்டித்து தீக்குளித்து உயிரிழந்தார். இதன் பிறகு, இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகம் எங்கும் வெடிக்கத் தொடங்கியது.

  இவர் இறந்த தினத்தை மொழிப்போர் தியாகி தினம் என அரசால் ஆண்டு தோறும் அனுசரிக்கப்பட்டாலும் அன்று ஒரு நாள் மட்டும் அனைவரது சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் அது ஒரு நாள் சம்பிரதாயமாக மரியாதை செலுத்தும் விதமாக மட்டுமே இருக்கிறது என சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

  கீழப்பழுவூர் சின்னச்சாமி நினைவிடம்.

  திருச்சி மாவட்டம் உழவர் சந்தைக்கு எதிர்புறம் அமைந்துள்ள குழுமிக்கரை சாலையில் ஆழ்வார்தோப்பு செல்லும் வழியில் மொழிப்போர் தியாகி சின்னச்சாமி நினைவிடம் அமைந்துள்ளது. யார் நினைவிடம் என்று தெரியாத அளவிற்கு அந்த பகுதிகளில் குப்பை கூளமாக காணப்படுகிறது.

  தமிழ் மொழிக்காக உயிர்நீத்த வீரர்களுக்கு உரிய அஞ்சலி செலுத்தும் விதமாக நினைவிடத்தை பராமரித்து பேணிக் காக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  செய்தியாளர் - என்.மணிகண்டன்.
  Published by:Arun
  First published:

  Tags: Trichy

  அடுத்த செய்தி