ஹோம் /திருச்சி /

'திருச்சியில் ஒரு பிதாமகள்...' மயான பூமியில் அச்சமின்றி பிணங்களை எரிக்கும் மூதாட்டி!

'திருச்சியில் ஒரு பிதாமகள்...' மயான பூமியில் அச்சமின்றி பிணங்களை எரிக்கும் மூதாட்டி!

X
திருச்சியில்

திருச்சியில் ஒரு பிதா மகள்

Trichy District News : திருச்சியில் 20 ஆண்டுகளாக வெட்டியான் பணி: மயான பூமியில் அச்சமின்றி பிணங்களை எரிக்கும் பெண்.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

புராண, இதிகாச காலம் தொட்டு மயானங்களில் பெண்களுக்கு அனுமதி இல்லை என்ற நிலையே நாட்டில் இன்றளவும் தொடர்ந்து வருகிறது. ஒரு வீட்டில் இறப்பு ஏற்பட்டால் சுடுகாட்டில் அல்லது உடலை புதைக்கும் இடுகாட்டில் இந்து மதத்தை பொருத்தவரை ஆண்கள் தான் இறுதி காரியங்களை செய்து வருகிறார்கள். பெண்கள் வீட்டு வாசலோடு நின்று விட வேண்டும்.

சுடுகாட்டில் காரியங்கள் செய்வதற்கு பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. உயிருக்கு உயிராக நேசித்த கணவன், பிள்ளைகள் அல்லது நெருங்கிய உறவினர்கள் உடல் தீக்கு இரை ஆவதற்கு முன்பாக அந்த இடத்தில் இறுதியாக முகத்தை கூட பார்க்க பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

ஆனால் உடல்களை எரிக்கும் வெட்டியான் பணியில் அச்சமின்றி துணிச்சலாக ஈடுபட்டுள்ளார் திருச்சியைச் சேர்ந்த 62 வயது மூதாட்டி மாரியாயி.

இவரை அந்த பகுதி மக்கள் பிதாமகள் என்றே அழைக்கிறார்கள். திருச்சி மாநகராட்சி பகுதி எடமலைப்பட்டிபுதூர் கோரை ஆற்றங்கரையில் இறந்தவர்களின் உடலை எரிக்கும் சுடுகாடு உள்ளது.

இதையும் படிங்க : திருச்சி மாவட்ட மக்களே... நாளை உங்கள் பகுதியில் மின் தடையா? செக் பண்ணிக்கோங்க

உடல்களை புதைப்பதற்கும் இங்கு இடவசதி உள்ளது. இந்த சுடுகாட்டில் தான் கடந்த 20 வருடங்களாக வெட்டியான் பணியை செய்து வருகிறார் மாரியாயி. இந்த பணிக்கு தான் எப்படி வந்தார் என்பதை அவரே கூறுகிறார்.

”எனக்கு சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல். எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது. இரண்டாம் வகுப்பு வரை தான் படித்து உள்ளேன். எனது கணவர் பெயர் முத்தையா திருமணத்திற்கு பின்னர் நாங்கள் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதிக்கு வந்துவிட்டோம். எனது கணவர் கோரை ஆற்றங்கரையில் உள்ள சுடுகாட்டில் வெட்டியான் வேலை செய்து வந்தார்.

அவர் இறந்த பின்னர் குடும்பம் வறுமையில் வாடியது. வறுமையை வெல்ல ஏன் நாமும் கணவன் விட்டுச் சென்ற பணியை தொடர கூடாது என நினைத்தேன். அதன் விளைவாக நான் ஏற்றுக்கொண்டது இந்த பணி. அன்று தொடங்கிய பணி தான் இன்று வரை தொடர்கிறது.இந்த வேலையிலும் நிறைய போட்டி இருக்கிறது. நான் இந்த சுடுகாட்டு பணியை தொடங்கியபோது ஆண்கள் பலர் எனக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

என்னைப் பொறுத்தவரை இது ஒரு புனிதப் பணியாக நான் கருதுகிறேன். உடல்களை புதைப்பதற்கு மட்டும் வயது முதிர்வின் காரணமாக தற்போது உதவியாளர் ஒருவரை வைத்திருக்கிறேன்” என்றார் மாரியாயி.

மேலும், தற்போது வரை திருச்சி எடமலைப்பட்டிபுதூர் மெயின் ரோடு பகுதியில் ஒரு வீட்டில் வசித்து வரும் மாரியாயி, கோரையாறு சுடுகாட்டை நவீனப்படுத்த வேண்டும். கூடுதல் இடம் ஒதுக்கி அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும் மேலும் வீடு மோசமான நிலையில் உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதில் தங்குவதற்கு கூட சரியான வசதி இல்லை அரசு சார்பில் ஏதாவது உதவி செய்தால் நன்றாக இருக்கும் எனவும் தினசரி கடையில் சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு வெளியே உறங்கும் நிலை தான் தற்பொழுது உள்ளது என உருக்கத்தோடு தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Trichy