இடத்திற்கும், சூழலுக்கும் தகுந்தாற்போல நாம் உடைகளை தேர்வு செய்கிறோம். சாதாரணமாக வீட்டில் அணிகின்ற ஆடைகளை அலுவலகத்திற்கு அணிந்து செல்வதில்லை. அதற்கென்று ஒரு நேர்த்தி இருக்கிறது. அதேபோல திருமணம், காதுகாத்து போன்ற சுப காரியங்கள் என்றால் தவறாமல் பாரம்பரிய உடைகளில் ஆஜர் ஆகிவிடுவோம். அந்த வகையில் விளையாட்டு வீராங்கனைகளுக்கு என்ன உடை தேவைப்படும் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.
அதே சமயம், நம் பாரம்பரிய உடையான சேலையானது விளையாட்டு, வாகனம் ஓட்டுதல் போன்ற பணிகளின்போது சௌகரியத்தை தராது என்பதுதான் பரவலான கண்ணோட்டம் ஆகும். ஆனால், இதையெல்லாம் பொய்யாக்குகின்ற வகையில் இணையத்தில் வீடியோ ஒன்று வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியரில் மகளிருக்கான கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றுள்ளது. அதுவும் பெண்கள் சேலை அணிந்து கொண்டு பங்கேற்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் போட்டி நடத்தப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 25 மற்றும் மார்ச் 26 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட இந்தப் போட்டிகளில் தங்கள் அணியின் சீருடைக்கு ஏற்பட்ட ஆரஞ்சு, பச்சை நிற சேலைகளை அணிந்து கொண்டு மகளிர் களத்தில் இறங்கினர். இதுதொடர்பான வீடியோவை டிவிட்டரில் ஒருவர் பகிர்ந்து கொள்ள, அது தற்போது வைரல் ஆகி வருகிறது.
Read More : 19 மாடி கட்டிடத்தின் நடுவில் செல்லும் ரயில்.. வியக்க வைக்கும் வீடியோ!
பல்துறையைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்பு
இந்த கால்பந்து போட்டியில் இல்லத்தரசிகள், ஆசிரியர்கள் உள்பட பல்துறைகளைச் சேர்ந்த 96 பெண்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். இதுகுறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், “விளையாட்டுத் தொடரின் இரண்டாம் நிகழ்ச்சி இதுவாகும். முன்னதாக, 3 நாள் பயிற்சி விளையாட்டு நடைபெற்றது.அதைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதான போட்டிகள் நடத்தப்பட்டன.
म्हारी महिलायें क्या #मेसी से कम हैं.. ग्वालियर में महिलाओं ने साड़ी वेशभूषा में फुटबॉल खेली। pic.twitter.com/Hi6PmTJp2i
— Brajesh Rajput (@brajeshabpnews) March 27, 2023
கடந்த ஆண்டு இதேபோன்று போட்டி நடத்தப்பட்டபோது 4 அணிகள் மட்டுமே பங்கேற்றன. ஆனால், இந்த ஆண்டில் 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. ஆரஞ்சு, துலிப், சிவப்பு, ஷெர்னி போன்ற அணிகள் கடுமையாக மோதிக் கொண்ட நிலையில் இறுதிப் போட்டியில் ஆரஞ்சு அணி வெற்றி பெற்றது’’ என்று தெரிவித்தார். சேலை அணிவோம், கட்டுகோப்பாக காட்சியளிப்போம் என்ற சிந்தனையின் அடிப்படையில் நிகழ்ச்சியாளர்கள் இந்த கால்பந்து விளையாட்டுப் போட்டியை நடத்தியிருக்கின்றனர்.
அக்கம், பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் ஆர்வமுடன் வந்து போட்டியில் விளையாடியுள்ளனர். விளையாட்டுப் போட்டியில் திறமையை வெளிக்காட்டுவதற்கு ஆடை ஒரு தடையாக இருக்கவில்லை என்பதை உணர்ந்து கொண்டதாக மகளிர் தெரிவித்தனர். பாரம்பரிய உடைகளை அணிவது பிற்போக்குத்தனம் என்றும், நவீன ஆடைகளை அணிவதே தற்போது டிரெண்ட் என்றும் சமூகத்தின் மனநிலை மாறிக் கொண்டிருக்கும் நிலையில், இதுபோன்ற நிகழ்வுகள் பாரம்பரியத்தை ஊக்குவிக்கும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.