Twitter logo-வை எலான் மஸ்க் குருவிக்கு பதிலாக நாயின் படமாக மாற்றியது பேசுபொருள் ஆகியுள்ளது.
ட்விட்டர் சமூக வலைதளத்தின் லோகோவாக வெகுநாட்களாக இருந்த குருவியை மாற்றிய நிலையில், அதையும் புது லோகோவையும் வைத்து ஏராளமான மீம்களும் வலம் வருகின்றன. அது மட்டும் அல்லாமல் ஏப்ரல் நான்காம் தேதி #twitterlogo என்பது இந்திய அளவில் டிரெண்டிங்கில் இருந்தது. எலான் மஸ்கே தன்னுடைய பக்கத்தில் புதிய லோகோவில் இருக்கும் அந்த நாய் உருவம், கார் ஓட்டிச் செல்லும்போது ஒரு போலீஸ் அதிகாரியிடம் மாட்டிக்கொள்வது போலவும், குருவியின் புகைப்படம் உள்ள லைசன்ஸ்-ஐ காண்பித்து அது என் பழைய புகைப்படம் என்று கூறுவது மாதிரியான கார்ட்டூனை ட்வீட் செய்துள்ளார்.
ட்விட்டர் லோகோவான நீல நிற குருவி என்பது அமெரிக்காவின் மிகவும் பிரபலமான கூடைப்பந்தாட்ட வீரர் Larry Birdக்கு மரியாதை செய்யும் வகையில் வைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. அது மட்டும் இல்லாமல் குருவிகள் கீச்சிடும் சத்தத்தை ஆங்கிலத்தில் tweet tweet என்றே கூறுவார்கள். அதனால் தான் ட்விட்டரில் நாம் இடும் பதிவுகள் ட்வீட் எனப்படுகின்றன.
எலான் மஸ்க் இவ்வாறு செயல்படுவது இது முதல் முறை அல்ல என்றே சொல்லவேண்டும். அவர் ட்விட்டரை வாங்கும் முயற்சி எடுத்ததிலிருந்தே சர்ச்சைகளும், விமர்சனங்களும் சூழ்ந்தன. முதலில் டிவிட்டரை வாங்கும் முடிவு எடுத்தவர் பின்பு, பின்வாங்கினார், மீண்டும் 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார்.
டிவிட்டரை வாங்கிய உடனே நிறுவனத்தின் மூத்த முக்கியமான அதிகாரிகளை பணி நீக்கம் செய்தார் எலான் மஸ்க். தொடர்ந்து நிறைய பணியாளர்களையும் பணி நீக்கம் செய்தார். இதனால் அவர் மீது கடுமையான அதிருப்தி நிலவியது. இந்த சூழலில் தான் அவர் ட்விட்டர் சி-இ-ஓ பதவியிலிருந்து இறங்க வேண்டுமா என்று ட்விட்டரிலேயே poll ஒன்றை நடத்தினார். அப்போது 58 சதவீதத்தினர் ஆம் என்றே வாக்களித்திருந்தனர். இந்த poll முடிவுகளை தான் பின்பற்றுவேன் என்று கூறிய அவர், எப்போது அந்த முடிவை அமல்படுத்துவார் என்று குறிப்பிடவில்லை.
அடுத்ததாக புளூ டிக் விவகாரம். அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், பிரபலங்கள், முக்கிய நிறுவனங்கள் என அடையாளம் பெற்றவர்கள், அவர்களின் சொந்த டிவிட்டர் பக்கம் தான் என்பதை உறுதி செய்யும் வகையில் பயன்படுத்தி வந்த புளூ டிக்கை, இனி பணம் செலுத்தினால் தான் தொடர்ந்து தரப்படும் என்று மஸ்க் அறிவித்தார். மாதம் 900 ரூபாய் என அறிவிக்கப்பட்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி அமல்படுத்தப்படுவதாகவும் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் தான் பிரபல நாளேடான நியூ யார்க் டைம்ஸ் தாங்கள் இதற்கு ஒப்புகொள்ளமாட்டோம், பணம் செலுத்தி புளு டிக் பெற அவசியம் இல்லை என்று எதிர்ப்பு குரலை பதிவு செய்தது. தொடர்ந்து அவர்களின் அதிகாரப்புர்வ பக்கத்தின் புளூ டிக் அகற்றப்பட்டுவிட்டது. நியூ யார்க் டைம்ஸ்-ஐ விமர்சனம் செய்து இலோன் மஸ்க்கும் பதிவிட்டிருந்தார். ஆனால் பணம் செலுத்தாத அனைவரின் புளூ டிக்குகளும் பறிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு அடுத்த சர்ச்சையாக தான் லோகோ விவகாரம் எழுந்திருக்கிறது. இதற்கு டிவிட்டரை மஸ்க் வாங்குவதற்கு முன்பு நடந்த சம்பவமே காரணம். ஒரு நபர் மஸ்கின் டிவிட்டர் பக்கத்தில் டிவிட்டரை வாங்கி அதன் லோகோவை சிம்ஸ் நாயாக மாற்றிவிடுங்கள் என்று கமெண்ட் செய்திருந்ததைத் தொடர்ந்து உண்மையிலேயே டிவிட்டரை வாங்கிவிட்டார்.
ALSO READ | பொம்மை காதலி.. மூன்றாவது குழந்தை.. விநோதமாக வாழும் கொலம்பியா நபர்..
மஸ்க்கின் காரியங்கள் சிலருக்கு விளையாட்டாகவும், சிலருக்கு தேவையற்ற செயலாகவும் தோன்றுவதாக விமர்சனங்கள் எழுந்தாலும் கூட இவற்றை எல்லாம் மஸ்க் தெளிவாக திட்டமிட்டு தான் செய்கிறார், இதனால் அவர் வேறு வகைகளில் லாபம் அடைகிறார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த லோகோ விவகாரத்தில் நாய் சின்னம் பொறித்த டோஜ்காயின் cryptocurrencyக்கு அவர் மறைமுகமாக உதவுகிறார் என்றே விமர்சங்கள் முன்வைக்கப்படுகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Twitter