மருத்துவ குணங்கள் கொண்டிருந்தாலும் வேப்பிலையின் சுவை பலருக்கு பிடிக்காது. ஏனென்றால் வேப்பிலை என்றாலே நமக்கு அதன் கசப்பு சுவை தான் நினைவுக்கு வரும் ஆனால் இனிப்பு சுவை கொண்ட வேப்பிலை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா..? பீகார் மாநிலத்தின் நாளந்தாவில் கசப்பு மற்றும் இனிப்பு ஆகிய 2 சுவைகளை கொண்ட வேப்பிலைகள் அடங்கிய வேப்பமரம் ஒன்று உள்ளது. ஆம், ஒரே வேப்பமரத்தில் இருக்கும் வேப்பிலைகளில் சில கசப்பாகவும், சில இனிப்பாகவும் இருக்கின்றன. நாளந்தாவில் உள்ள இந்த வித்தியாசமான அதே சமயம் பெரிதான வேப்ப மரம் பீகாரில் உள்ள ஒரு தர்காவில் இருக்கிறது.
பீகாரில் உள்ள பெல்ச்சி கிராமத்தில் இருக்கும் மொய்னுதீன் சிஷ்டியின் மாஸ்டரான ஹஸ்ரத் உஸ்மான் ஹாரூன் சிஷ்டியின் கல்லறைக்கு அருகே இருக்கிறது இந்த அதிசய வேப்பமரம். இந்த மரத்தின் சிறப்பு என்னவென்றால் இதன் அனைத்து கிளைகளிலும் இருக்கும் வேப்பிலைகள் கசப்பாக இருந்தாலும், ஹஸ்ரத் ஹாரூன் சிஷ்டியின் சமாதிக்கு மேலே உள்ள ஒரு கிளையில் இருக்கும் வேப்பிலைகளின் சுவை இனிப்பாக இருக்கிறது. இந்த மரத்திற்கு பக்கத்தில் ஒரு கிணறும் உள்ளது, இந்த கிணற்றின் நீர் கடலை விட உப்பானது.
வயிற்றில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் இந்த கிணற்று நீரை அருந்தினால் குணமாகும் என்பது அங்கிருப்போரின் ஐதீகம். இந்த கிணறை தவிர மேலும் 2 கிணறுகள் அங்கே இருக்கின்றன. ஆனால் இந்த கிணறுகளின் நீர் மிகவும் சுவையாக இருக்கிறது.ஒவ்வொரு ஆண்டும் உர்ஸ் என்ற பண்டிகையின் போது இந்த தர்கா சதுக்கத்தில் ஒரு கண்காட்சி நடத்தப்படுகிறது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் திரளான மக்கள் வந்து குவிந்தனர். முஸ்லிம்கள் மட்டுமல்ல. ஏராளமான இந்துக்களும் இந்த கண்காட்சிக்கு வருவர்.
அண்டை மாநிலங்களான ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்டவற்றில் இருந்தும் மக்கள் இங்கு வருகிறார்கள். வரும் மக்கள் இந்த அற்புத வேப்ப மரத்தின் முன் அமர்ந்து பிரார்த்தனை செய்கிறார்கள். தர்கா 800 ஆண்டுகள் பழமையானது இங்கிருக்கும் இந்த அற்புத வேப்பமரம் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என கூறப்படுகிறது.
மக்கள் குவியும் இந்த திருவிழா வழிபாட்டுடன் தொடங்குகிறது, அதைத் தொடர்ந்து முதல் நாளில், சையத் சுஜா உதின் முகமது, சையத் நௌஷாத் அகமது, சையத் ஷாஹித் இமாம் மற்றும் சையத் ஆரிப் ராசா ஆகியோரின் கல்லறைகள் மட்டுமே திறக்கப்படுகின்றன. மாலை நேரங்களில் பெல்ச்சி ஷெரீஃப் கிராமம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். கல்லறையில் பாபா ஹஸ்ரத் உஸ்மான் ஹாரூன் சிஷ்டி தங்கியிருப்பதாக உள்ளூர் கிராமவாசியான குதம் சையத் சுஜா உதின் முகமது கூறுகிறார்.
இவர் மேலும் பேசுகையில், குறிப்பிட்ட கல்லறையின் தலைப்பகுதியில் இருக்கும் பழமையான அதிசய வேப்ப மரத்தின் கிளைகள் 4 திசைகளிலும் பரவியுள்ளது. இதன் கிளைகளில் ஒன்று கல்லறையில் சாய்ந்துள்ளது. மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், கல்லறையில் சாய்ந்திருக்கும் கிளையைத் தவிர, முழு மரத்தின் இலையும் கசப்பாக இருக்கிறது என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு ஹஸ்ரத் உஸ்மான் ஹாரூன் சிஷ்டியின் சீடரால் வேப்ப மரம் நடப்பட்டது என தகவல் தெரிவித்தார் குதம் சையத் சுஜா.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.