முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / கனவுகளை துரத்திப்பிடித்து காற்றில் கரைந்த தேவதை.. சாதனை நாயகி கல்பனா சாவ்லாவின் பிறந்தநாள் இன்று!

கனவுகளை துரத்திப்பிடித்து காற்றில் கரைந்த தேவதை.. சாதனை நாயகி கல்பனா சாவ்லாவின் பிறந்தநாள் இன்று!

 கல்பனா சாவ்லா

கல்பனா சாவ்லா

தனது சிறு வயதில் வானத்தை பார்த்து படுத்திருக்கும் போது அந்த விண்வெளிக்கு சென்று அங்கிருந்து கோள்களை பார்க்க  ஆவல் கொண்டாள்

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Chennai |

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு ஹீரோ இருப்பார். இவரை போல தான் நான் ஆகவேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அதன் வழியில் அவர்களது வாழ்க்கையை கட்டமைப்பார்கள். அப்படி இந்திய பெண்குழந்தைகள் பலரின் ரோல் மாடலாக இருப்பவர் கல்பனா சாவ்லா. விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை சூடி இருக்கும் கல்பனா சாவ்லாவின் பிறந்தநாள் இன்று!

கல்பனா சாவ்லா மார்ச் 17, 1962 அன்று ஹரியானா மாநிலம் கர்னாலில் பிறந்தார். பனாரசி லால் சாவ்லா மற்றும் சஞ்ஜோதி சாவ்லாக்கு கடைசி குழந்தையாக பிறந்த கல்பனா சிறுவயதில் இருந்தே படுசுட்டி. கல்பனாவின் பெற்றோர் தற்போது பாகிஸ்தான் பகுதியில் உள்ள முல்தான் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தனர். பின்னர், அங்கிருந்து ஹரியானா மாநிலத்தில் உள்ள  கர்னாலுக்கு வந்தனர்.

வீட்டில் சேட்டை அதிகம் செய்வதால் அனைவரும் அவரை மோண்டு என்று அழைத்தனர். அப்படி தனது சிறு வயதில் வானத்தை பார்த்து படுத்திருக்கும் போது அந்த விண்வெளிக்கு சென்று அங்கிருந்து கோள்களை பார்க்க  ஆவல் கொண்டாள். பால் நிகேதனில் பள்ளிப்படிப்பை படிக்கும் போது பொறியியல் படிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்த முதல் பெண் கல்பனா சாவ்லா.

இளங்கலைப் பட்டம் பெற்ற பிறகு, கல்பனா சாவ்லா முதுகலைப் படிப்பதற்காக அமெரிக்கா சென்றார். 1984 இல், கல்பனா, ஆர்லிங்டனில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் துறையில் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றார். கல்பனா 1986 இல் மீண்டும் ஒரு முதுகலை பட்டம் முடித்தார்.

கனவுகளை துரத்திக்கொண்டு இருந்த கல்பனா 1988 இல் கொலராடோ போல்டர் பல்கலைக்கழகத்தில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.  அதே ஆண்டில் அவர் நாசாவில் சேர்ந்தார். சாவ்லா நாசா அமெஸ் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றத் தொடங்கினார். இங்கே அவர் செங்குத்து, ஷார்ட் டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் (V/STOL) கருத்துகளில் கணக்கீட்டு திரவ இயக்கவியல் (CFD) ஆராய்ச்சி துறையில் வேலை செய்தார்.

1993 இல், ஓவர்செட் மெத்தட்ஸ், இன்கார்பரேட்டட் நிறுவனத்தில் துணைத் தலைவராகவும் ஆராய்ச்சி விஞ்ஞானியாகவும் சேர்ந்தார். சாவ்லா விமானங்கள், ஒற்றை மற்றும் பல-இயந்திர விமானங்கள், கடல் விமானங்கள் மற்றும் கிளைடர்களுக்கான வணிக பைலட் உரிமங்களுக்கான சான்றளிக்கப்பட்ட விமான பயிற்றுவிப்பாளர் ஆனார். ஏப்ரல் 1991 இல் அமெரிக்க குடியுரிமை பெற்ற பிறகு, சாவ்லா நாசா விண்வெளி வீரர்களுக்கு விண்ணப்பித்தார். அவர் மார்ச் 1995 இல் விண்வெளி  வீரர்கள் குழுவில் சேர்ந்தார்.

இறுதியாக  1997 இல் தனது முதல் விண்வெளி பயணத்திற்குத்  தயாரானார். நவம்பர் 19, 1997 அன்று ஆறு விண்வெளி வீரர்களுடன் கொலம்பியா STS-87 என்ற விண்களத்தில் பூமியை விட்டு விண்வெளியை நோக்கி சீறிபாய்ந்தார். கல்பனா தனது முதல் பயணத்தில், 376 மணிநேரத்தில் பூமியை 252 முறை  10.4/6.5 மில்லியன் மைல்கள் பயணத்தார்.

பூமிக்கு திரும்பிய கல்பனா இந்திய வந்தார். அவருக்கு பாராட்டுகளும் பதக்கங்களும் குவிந்தன. அன்றைய  இந்தியப் பிரதமர் ஐ.கே.குஜ்ராலை சந்தித்து, விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட இமயமலையின் படங்களைக் காட்டினார். அவரது பயணமும் கனவும் அதோடு நிற்கவில்லை. ஒருமுறை போனது பாத்தது, மீண்டும் மீண்டும் போக வேண்டும் என்று நினைத்தார்.

2000 ஆம் ஆண்டில், STS-107 குழுவின் ஒரு பகுதியாக சாவ்லா தனது இரண்டாவது விண்வெளி பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஷட்டில் என்ஜின் ஃப்ளோ லைனர்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனைகளால் இந்த பணி மீண்டும் மீண்டும் தாமதமானது. இறுதியாக 16 ஜனவரி 2003 அன்று, விமானம் STS 107 விண்வெளிக்கு புறப்பட்டது. விண்வெளியில் பூமி மற்றும் விண்வெளி அறிவியல், மேம்பட்ட தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் விண்வெளி வீரர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைப் பற்றி சுமார் 80 சோதனைகளை நடத்தினர்.

இதையும் பாருங்க : 18, 19-ம் நூற்றாண்டுகளிலேயே உலகை சுற்றிவந்த பெண்கள்... வரலாற்று கதை தெரியுமா?

இறுதியாக 15 நாட்கள் பயணத்தை முடித்துவிட்டு திரும்பும்போது பிப்ரவரி 1 2003 அன்று பூமியின் வளிமண்டலத்தை தொடும் நேரம் விண்கலம் வெடித்து விண்வெளியோடு கலந்தது. விண்வெளிக்கு சென்ற தேவதை விண்வெளியிலேயே தன்னை சேர்த்துக் கொண்டாள். 2020இல்  நாசா கல்பனாவை பெருமைப்படுத்தும் விதமாக தனது சரக்கு விண்கலத்திற்கு அவரது பெயரை சூட்டினர். தனது வாழ்நாளில் இரண்டு முறை விண்வெளிக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்ற முதல் இந்தியப் பெண் கல்பனா சாவ்லா ஆவார். இன்றும் உலகளாவிய பெண்கள் கல்பனாவை போல ஆக வேண்டும் என்று கனவு காண்கிறார்கள்.

அவர்கள் எல்லாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய வாசகம், “கனவுகளில் இருந்து வெற்றிக்கான பாதை எப்போட்டதும் ஒன்று இருக்கும். அதைக் கண்டு பிடிப்பதற்கான பார்வையும், அதைப் பெறுவதற்கான தைரியமும், அதைப் பின்பற்றுவதற்கான விடாமுயற்சியும் உங்களுக்கு இருக்க வேண்டும்” என்று கல்பனா சொல்லி சென்றது.

First published:

Tags: NASA, Women achievers