கை நிறைய சம்பாதித்து பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைய வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கும். புரியும்படியாக சொன்னால் ‘சொந்தக் காலில் நிற்க வேண்டும்’ என்ற எண்ணம் கொண்டவர்களாகவே பெரும்பாலான மக்கள் உள்ளனர். அதை நோக்கிய பயணத்தில் எத்தனையோ தடைகளையும், போராட்டங்களையும் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது.
முழு உடல் தகுதியுடன் இருக்கின்ற மக்களுக்கே வாழ்க்கை போராட்டமானதாக இருக்குமெனில் கால்களை இழந்த நபரை எண்ணிப் பாருங்கள். யாரிடமும் கை ஏந்தி நிற்க மனமின்றி உழைக்க வேண்டும் என்றால் எவ்வளவு சிரமங்களை இவர்கள் எதிர்கொள்வார்கள்? மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் சாலையோர நடைபாதையில் வசிக்கும் பப்பு தரோகா என்பவரின் வாழ்க்கை அப்படித்தான் இருக்கிறது.
கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்து ஒன்றில் இவர் கால்களை இழந்தார். இதனால் வேலைக்கும் செல்ல முடியவில்லை. அதே சமயம், பெற்ற பிள்ளைகளும் கைவிட்டுவிட்டனர். இதனால் வேறு வழியின்றி, மனைவி சுமன் சுமித்ரா உடன் நடைபாதையில் அவர் வசிக்கத் தொடங்கினார். எவ்வளவோ சிரமமான சூழல் வந்த போதிலும் அவர் பிச்சை எடுக்க நினைக்கவில்லை. இதுகுறித்து தரேகா கூறுகையில், “விபத்தில் சிக்கும் வரையில், என் வாழ்நாள் முழுவதும் நான் கடினமாக உழைத்திருக்கிறேன். அதனால், பிச்சை எடுப்பதை என்னால் நினைத்துகூட பார்க்க முடியவில்லை’’ என்று தெரிவிக்கிறார்.
Read More : சாக்கடையில் சிக்கய 6 குட்டிகள்.. 15 நாட்கள் நகராமல் காத்திருந்த தாய் நாய்..!
சுய உழைப்பு : நம் உடல் எடையை பார்ப்பதற்கான மெஷின் ஒன்றை தரோகா வைத்துள்ளார். அதை பயன்படுத்தும் மக்களிடம் சிறு தொகையை வசூல் செய்கிறார். அது மட்டுமல்லாமல் பேனா, மொபைல் ஸ்டாண்டு போன்றவற்றையும் விற்பனை செய்கிறார். இதன் மூலமாக அவருக்கு தினசரி ரூ.100க்கு குறையாமல் வருமானம் கிடைக்கிறது.
இந்தப் பணத்தை கொண்டு தனக்கும், தன் மனைவிக்கும் தேவையான உணவு, 2, 3 நாட்களுக்கு தேவையான மருந்து உள்ளிட்டவற்றை பப்பு தரேகா வாங்கிக் கொள்கிறார். இவருக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சினையும், இவரது மனைவிக்கு நீரிழிவு நோயும் உள்ளது. மிகக் கடினமான சூழலை எதிர்கொள்ளும் நிலையிலும் சுயமாக வாழ வேண்டும் என்பதில் தரேகாவும், அவரது மனைவியும் உறுதியுடன் உள்ளனர்.
இதுகுறித்து தரேகா கூறுகையில், “என் பிள்ளைகளின் உதவியின்றி நான் வாழ முடியும் எனக் காட்ட விரும்புகிறேன். இப்போது கூட எனக்கு தேவையான ரொட்டியை உழைத்து வாங்குகிறேன். நான் பிச்சை எடுக்கவில்லை’’ என்று பெருமிதத்துடன் கூறுகிறார். மனிதர்களில் பலர் உழைத்து வாழ வழியிருந்தும் பிறரை ஏமாற்றி வாழுவது, மோசடி செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலையில், உழைத்து வாழ விரும்பும் தன்னம்பிக்கையாளர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார் பப்பு தரேகா.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.