பொதுவாக விளம்பரங்களில் வரக் கூடிய சாகச காட்சிகளில், “இது அபாயம் நிறைந்தது, தயவுசெய்து வீட்டில் யாரும் முயற்சி செய்ய வேண்டாம்’’ என்ற எச்சரிக்கை வாசகம் இடம்பெற்றிருக்கும். ஆனால், சமூக வலைதளங்களில் வரக் கூடிய சாகச காட்சிகள் அல்லது சவால்களில் எந்தவித எச்சரிக்கையும் இருக்காது.
சமூக வலைத்தளங்களில் சிலர் வினோத செயல்களில் ஈடுபட்டு நெட்டிசன்களின் கவனத்தை ஈர்ப்பர். ஆஸ்திரேலியாவில் இத்தகைய வினோதமான சவால் சமூக வலைதளத்தில் வலம் வந்தது. அதாவது, நாம் பயன்படுத்துகின்ற வாசனை திரவியத்தை முழு மூச்சாக இழுத்து நுகர்ந்து பார்ப்பது அல்லது மூக்கில் வைத்து ஸ்பிரே செய்யும் வகையில் அந்த சவால் இருந்தது. Chroming என்ற பெயரில் இந்த டிரெண்ட் பரவி வந்தது. நறுமன பொருள் மட்டுமல்லாமல் சிலர் ஆபத்து மிகுந்த ரசாயனங்களையும் நுகர்ந்து காண்பித்து சவால் விட்டனர்.
இதைப் பார்த்து, ஆஸ்திரேலியாவின் எஸ்ரா ஹேனஸ் என்னும் 13 வயது சிறுமி சவாலில் பங்கெடுத்தார். வாசனை திரவியத்தை நேரடியாக மூக்கில் வைத்து இந்தச் சிறுமி ஸ்பிரே செய்ததாகத் கூறப்படுகிறது. இதனால் திடீரென்று ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிறுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டதுடன், மீள முடியாத அளவுக்கு மூளையின் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டன.
இதனால் பதறிப்போன சிறுமியின் பெற்றோரும், உறவினர்களும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் 8 நாட்களுக்கும் மேலாக சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுமி உயிரிழந்தார்.
விபரீதமான சவால் :
வீடியோ மூலமாக கிடைக்கின்ற புகழ் வெளிச்சத்திற்காகவும், நம்மால் வினோதமான சவால்களை செய்ய முடியும் என்று நிரூபிக்கும் நோக்கில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் மருந்து பொருள்களையும் கூட இதுபோல திடீரென்று மூக்கில் ஸ்பிரே செய்கிறார்களாம்.
Also Read : ஃப்ரீஸருக்குள் கண்ணாடிய வச்சா என்ன நடக்கும்? வைரலாகும் சூப்பர் டிப்ஸ்!
ஆனால், இது மிகவும் ஆபத்தான செயல் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். மூளை, உடல் உறுப்புகள், எலும்பு மஜ்ஜை போன்றவற்றில் இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கின்றனர். எண்ணற்ற சிறுவர், சிறுமியர்கள் இந்த சவாலில் ஈடுபடுகின்றனர் என்றாலும், இது யாரை தாக்கும், யாரை தாக்காது என்று யூகிக்க இயலாது என்று வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
சிறுமியின் மரணத்தைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் குழந்தைகள் பார்க்கக் கூடிய விஷயங்கள் குறித்து மிகுந்த கட்டுப்பாடுகளை உலகளாவிய அளவில் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Australia, Social media, Viral